திங்கள், 29 நவம்பர், 2010

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2010 - சில துளிகள்





வரலாற்றுத் துளிகள்!

* ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும்.

* முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றன.

* உலக அளவில் ஒலிம்பிக்ஸ்-க்கு அடுத்து இரண்டாவது பெரிய விளையாட்டு திருவிழா ஆசிய விளையாட்டு போட்டிகள்.


* தற்பொழுது சீன நகரம் குவாங்சு-வில் நடந்து முடிந்தது 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்.


தங்கத் துளிகள்!

* இந்தியாவின் முதல் தங்கத்தை பில்லியர்ட்ஸ் தனிநபர் பிரிவில் வென்று தங்க வேட்டையை துவக்கி வைத்தார் பங்கஜ் அத்வானி.

* துடுப்பு படகு தனிநபர் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்லால் தாக்கர் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

* ஆண்கள் ஒற்றையர் டபுள்டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடும் போட்டியில் ரஞ்சன் சோதி தங்கம் வென்றார்.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரீஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார்.

* 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

* டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங் இணை தங்கத்தை வென்றது.

* டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் தங்கம் வென்றது புதிய வரலாறு, இத்துடன் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவின் "தங்க நாயகன்" ஆனார்.

* மகளிர் 400மீ தடை ஓட்ட போட்டியில் அஷ்வினி சிதானந்தா தங்கம் வென்றார்.
* இதே போட்டியின் ஆடவர் பிரிவில் ஜோசப் ஆப்ரகாம் தங்கம் வென்றார்.

* ஆடவர் குத்துச் சண்டை போட்டியில் 60கிலோ உடல் எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் வென்றார்.

* மகளிர் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

* ஆடவர் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனையை தொடர்கிறது இந்திய கபடி அணி.

* மன்ஜீத் கௌர், சினி ஜோஸ், அஸ்வினி சிதானந்தா, மன்தீப் கௌர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

* 75 கிலோ எடைப்பிரிவு ஆடவர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் விஜேந்தர் சிங் தங்கம் வென்றார். நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார் "தங்க மகன்" விஜேந்தர் சிங்.


குறிப்பிடத்தக்க வெள்ளி துளிகள்!

* 10 மீட்டர் ஏர்ரைபில்ஸ் போட்டியில் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் ஹீனா சித்து, அனு ராஜ் சிங், சோனாய் ராய் ஆகியோர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டு வெள்ளி வென்றனர்.

* டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, விஷ்ணு வர்தன் இணை வெள்ளி வென்றது.

* 10,000 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தய பிரிவில் கவிதா ரெளத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* 60 கிலோ ஊஷு போட்டி, சான்ஷோ பிரிவில் சந்தியாராணி தேவி வெள்ளி வென்றார்.

* தனிநபர் வில்வித்தை போட்டியில் வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* குத்துச் சண்டை போட்டியில் சந்தோஷ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (81 கிலோ), மன்பிரீத் சிங் (91 கிலோ) தத்தமது பிரிவுகளில் வெள்ளி பதக்கம் வென்றனர்.


குறிப்பிடத்தக்க வெண்கலத் துளிகள்!

* பில்லியர்ட்ஸ் 8-பால் பூல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அலோக் குமார்.

* ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஆஷிஷ் குமார் வெண்கலம் வென்று, இந்த பிரிவில் இதுவரை ஆசியப் போட்டிகளில் பதக்கம் இல்லாத நிலையைப் போக்கினார்.

* நீச்சல் வீரர் வீர்தவால் கடே 50மீ பட்டர்ஃபிளை போட்டியில் வெண்கலம் வென்றார். இப்பிரிவில் முதன் முறையாக பதக்கம் வென்றது இந்தியா.

* வில்வித்தை போட்டி மகளிர் அணி பிரிவில் தீபிகா குமாரி, போரா பானர்ஜி, ரிமில் புரியுல் வெண்கலம் பெற்றுத் தந்தனர்.

* பெண்கள் தனிநபர் சதுரங்க போட்டியில் ஹரிகா துரோணவல்லி வெண்கலம் வென்றார்.

* ஆண்கள் குழு சதுரங்க போட்டியில் சசிகிரண், சூர்ய சேகர் கங்குலி, அதிபன் மற்றும் கோபால் ஆகியோரை கொண்ட அணி வெண்கலம் வென்றது.

* ஆடவர் தனிநபர் ப்ரீ ஸ்கேட்டிங் பிரிவில் இந்திய வீரர் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். ஜோடிப் பிரிவில் அனுப் - அவானி பஞ்சால் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.


ஏமாற்றத் துளிகள்!

* காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதலில் தங்க பதக்கத்தை குவித்ததையடுத்து, ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு தங்கம், சில வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது பெரிதும் ஏமாற்றமளித்தது.

* நட்சத்திர இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது மற்றுமொரு ஏமாற்றம்.


நம்பிக்கை துளிகள்!

* குத்துச் சண்டை போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது, வரும் காலங்களில் இவ்விளையாட்டு மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

* 609 வீரர், வீராங்கனைகளுடன் களம் இறங்கிய இந்தியா 14 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது.

* கடந்த 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டை விட இப்போது இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு இருக்கிறது. கடந்த முறை இந்தியா 10 தங்கம் உள்பட 53 பதக்கத்துடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

* அத்துடன் ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிகபதக்கங்கள் வென்ற போட்டியாகவும் இது பதிவாகி இருக்கிறது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 57 பதக்கம் வென்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.


* 199 தங்கப் பதக்கங்களுடன் போட்டிகளை நடத்திய சீனா முதனிலை பெற்றது. தென்கொரியா 2-வது மற்றும் ஜப்பான் 3-வது இடம் பிடித்தன.

* 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் இன்சான் நகரில்
2014-ல் நடைபெற உள்ளன.


டிஸ்கி:
ஆசிய விளையாட்டு போட்டியில் முதன்முறையாக 20-20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேறு தொடர்களை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட் போட்டிக்கு அணி அனுப்ப மறுத்துவிட்டது. கிரிக்கெட் அணி சென்று இருந்தால், கிரிக்கெட் போட்டியை தவிர்த்து வேறு எந்த போட்டிக்கும் இந்திய ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் முக்கியத்துவம் வழங்கி இருக்க மாட்டார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவு பாராட்டுக்குரியது.

கருத்துகள் இல்லை: