அருணாச்சல வடிவு
இந்தியா
சுதந்திரம் அடைந்த வருடத்தில் (1947), ஜூன் மாதம் 7-ஆம்
நாள் சுப்பிரமணிய நாடார், லெட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு கடைக்குட்டி நான்காவது குழந்தையாக பிறந்தார் எனது தந்தை. சுப்பிரமணிய
நாடாரின் சகோதரர் நினைவாக “அருணாச்சல வடிவு” என்று பெயர்
பெற்றார்.
சுப்பிரமணிய
நாடார் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரிமேல்விளை ஊரைச்
சேர்ந்தவர். சுப்பிரமணிய நாடாரின் தந்தை வேலாயுத பெருமாள் குளத்தட்டிவிளையை பூர்வீகமாக கொண்டவர். குளத்தட்டிவிளையின் தற்போதைய பெயர் சிவசெல்வபுரம். வேலாயுத பெருமாளின் மனைவி முத்துப்பிள்ளை வண்டாவிளை ஊரை சேர்ந்தவர். லெட்சுமி
அம்மாளின் தந்தை பெயர் அரிராம நாடார், பிள்ளையார்விளைக்காரர்.
அக்காலக்கட்டங்களில் 'தங்கம்', 'செல்லம்' என்று சிறுகுழந்தையாக இருக்கும்பொழுது கொஞ்சுவதற்காக பயன்படுத்தும் வார்த்தைகளை பின்னர் பெயராகவே மாற்றிக்கொண்டுள்ளார்கள். இதனடிப்படையில் செல்ல வடிவு என்றொரு பெயரும் எனது தந்தைக்கு உண்டு.
எனது
தந்தையின் உடன்பிறந்தவர்கள் செல்லம்மை என்ற முத்துப்பிள்ளை, வேலாயுத
பெருமாள் மற்றும் செல்ல நாடாச்சி. அருணாச்சல வடிவு தன்னுடைய ஏழாவது வயதில் தந்தையை இழந்தார். வேலாயுத பெருமாள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்கலானார். வேலாயுத பெருமாள் தனது தம்பியின் படிப்பிற்கு
உறுதுணையாக இருந்தார். அதுமட்டுமின்றி கம்யூனிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு மக்களுக்கான போராட்டங்கள் மற்றும் கட்சி பணிகளும் செய்தார். எனது தந்தை அருணாச்சல
வடிவுக்கு பள்ளி பருவத்திலேயே கம்யூனிச சிந்தாந்தங்கள் மேல் ஈடுபாடு வந்ததற்கான
பின்னணி இதுதான்.
அருணாச்சல
வடிவு பள்ளிப்படிப்பை தொடர்ந்ததோடு மட்டுமல்லாலமல் பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதும்
வழக்கம். அக்காலகட்டங்களில் பள்ளிக்கல்வியை (11- வது வகுப்பு) முடித்து
ஒரு வருடம் பியுசி (pre university
college) படித்து அடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டும். எனது தந்தை சூரங்குடி
அரசுப்பள்ளியில் படிப்பை
முடித்து நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் ஹிந்து
கல்லூரியில் பியுசி படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே அரசுப் பணியில் சேர்வதற்கான முயற்சியில் இருந்தார். மத்திய தொழில் காவல் படையில் தேர்வு பெற்று, ஆவடியில் காவலர் பணிக்கான பயிற்சி முடித்து 4/7/1972 -ஆம் நாள் பணியில்
சேர்ந்தார். பியுசி படிப்பு பாதியில் நின்று போனது.
என்
தந்தை பியுசி படிக்கும் பருவத்தில் தீவிர அரசியல் செயல்பாட்டிலும் இருந்தார். ‘உழைத்தவனுக்கு
நிலம் சொந்தம்’ என்று பாரத பிரதமர் இந்திரா காந்தியால் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில்
அதற்கு ஆதரவாக தமையனாருடன் சேர்ந்து போராட்ட களத்தில் போராடினார். நிலச்சுவான்தார்களுக்கு
எதிராக நிலமில்லாத உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்களது போராட்டம் இருந்தது. அச்சமயத்தில்
கோயில் நிலம் ஒன்று எனது தந்தை குடும்பத்தின் குத்தகையில் இருந்தது. அந்தக் கோயில்
நிலம், நிலமில்லாத உழைப்பாளிகளுக்கு சேரும் வகையில் எனது தந்தை குடும்பம் விட்டுக்கொடுத்து
கையெழுத்திட்டு கொடுத்தார்கள். நிலம் கிடைத்தவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டித்தர ஒரு
ஊர் உருவானது வரலாறு.
பள்ளியில்
படித்ததைவிட பணியின் நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றி நிறைய கற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்து பின்னர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைந்தது வரலாறு. எனது தாய் தந்தை
தலைமுறையினருக்கு இயல்பாகவே மலையாளம் தெரியும். அவர்களுடைய காலக்கட்டத்தில் பள்ளியில் தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாறி காட்சி மாறி
மொழிக்கொள்கை மாறிப்போன வரலாறு நமக்கு தெரியும். பள்ளிக்காலத்தில் ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்காவிட்டாலும் பின்னர் பணியில் சேர்ந்து வடஇந்தியாவில் இருந்தபொழுது எனது தந்தை நன்கு
ஹிந்தி பேச கற்றுக்கொண்டார். இவ்வாறாக
நான்கு மொழிகளில் புழங்கும் பட்டறிவு கொண்டவர் எனது தந்தை.
கொல்கத்தா
துர்காபூர் ஸ்டீல் பிளான்டில் பாதுகாப்புப் பணியில் காவலராக இரண்டு வருடங்கள் வேலை செய்தார். அதனைத்
தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பில் மூன்றரை வருடங்கள் பணி செய்தார். கான்பூரில்
தெர்மல் பவர் பிளான்டில் இரண்டரை
வருடங்கள் பணி புரிந்தார்.
இதற்கிடையில்,
தந்தையின் சகோதரி முத்துப்பிள்ளை தோப்பூரை
சேர்ந்த தங்கக்கண் நாடாரின் வாழ்க்கை துணையானார். செல்ல நாடாச்சி மணிக்கட்டி பொட்டலை சேர்ந்த சிவலிங்க நாடாரின் மனைவியானார்.
அருணாச்சல
வடிவு சிறு வயதிலேயே
தந்தையை இழந்து விட்டதால் இயல்பிலேயே தாய் மேல் மிகுந்த
பாசம் கொண்டவர். மத்திய காவல் படை பணியில் கிடைத்த
குறைந்த ஊதியத்தை பங்கு பிரித்து தாய்க்கும், தமையனாருக்கும், கல்யாணமாகி சென்றுவிட்ட சகோதரிகளுக்கும் அனுப்பி வைப்பது அவரது வழக்கம்.
மத்திய
பணியில் இருந்தாலும், அரசியல் ஈடுபாடு எப்போதும் உண்டு. நேர்மையான அரசியலின்பால் எப்போதும் விருப்பு உண்டு. தமிழக முதலமைச்சராக சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் காமராஜர் அவர்கள். அவர் மறைந்த நாள்
அன்று பெருந்தந்தைக்கு ஆற்றும் நீர்க்கடனாக ஏராளமான தமிழக இளைஞர்கள் மொட்டை அடித்து துக்கம் அனுசரித்தனர். அந்த இளைஞர்களில் எனது
தந்தையும் ஒருவர்.
தமையனார்
வேலாயுத பெருமாள்
அம்மாண்டிவிளையை சேர்ந்த ருக்குமணியை திருமணம் புரிந்து கொண்டார்.
அவர் கட்சிப்பணி மட்டுமல்லாமல் பொருளாதாரத்திற்காக சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தார்.
தந்தையின் தாயார் லெட்சுமி அம்மாள் அவர்கள் தேரிமேல்விளையில் தமையனார் வீட்டில் இருந்தார்.
புஷ்பவதி
வெள்ளமோடி
கிராமம், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு தாலுகாவில் அமைந்துள்ளது. அங்கு 14-நவம்பர் 1952-ஆம் வருடம் பிறந்தார்
எனது தாயார் “புஷ்பவதி”. அவர்களின் தாய் தந்தையர் பொன்னுமணி
மற்றும் சிதம்பர வடிவு நாடார். பொன்னுமணி ஆலங்கோட்டையை சேர்ந்த பொன்னய்யா நாடார் மற்றும் பொன்னம்மா நாடாச்சியின் மகள். சிதம்பர வடிவு வெள்ளமோடியை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் குட்டி பிள்ளையின் மகனாவார்.
எனது
அம்மாவுக்கு இரு இளைய சகோதரிகள்
பொன்னுத்தங்கம் மற்றும் கஸ் தூரி, ஒரு
தம்பி மகாலிங்கம். வெள்ளிச்சந்தை அரசு பள்ளியில் பள்ளிக்கல்வி
படித்தார் புஷ்பவதி. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்
நல்ல மதிப்பெண்கள் (367/500) பெற்றாலும் தொடர்ந்து படிக்கவிடவில்லை. தொடர்ந்து படித்திருந்தால் அரசாங்க பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கும். என் அம்மாவுடன் படித்த
பலர் அரசாங்க ஊழியராக பணியாற்றி உள்ளனர்.
சிதம்பர
வடிவு நல்ல விவசாயி, வியாபாரி, கடும்உழைப்பாளி. வறுமை
நிலையிலும் எல்லா குழந்தைகளையும் பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்தார்.
புஷ்பவதி தாய்க்கு உதவியாக எல்லா பணிகளிலும் உடனிருந்தார். அக்காலகட்டத்தில் பீடி சுற்றுதல் ஒரு
குடிசை தொழில். குடும்பத்தின் பொருளாதாரத்திற்காக சில வருடங்கள் பீடி
சுற்றும் வேலையும் செய்தார்.
அம்மாவுடைய
தந்தை சிதம்பர வடிவு நாடார், நாட்டார் கதைகள் கொண்ட நிறைய ஏடுகள் எழுதியிருக்கிறார்.
வில்லுப்பாட்டு பாடும்பொழுது இந்த ஏடுகளை பின்னால் இருந்து பாடகருக்கு சொல்லி கொடுப்பது
ஏடு வாசிக்க தெரிந்தவர்களின் வழக்கம். தாத்தா இந்த பணியும் செய்ததுண்டு. என் அம்மாவுக்கு
தாத்தா மூலம் ஏடு வாசிக்க தெரியும்.
தாத்தாவிற்கு
மூலிகைகள் கொண்டு கை, கால் வலி, உடல் புண் போன்ற உபாதைகளுக்கான மருந்து செய்முறையும்
தெரியும், கேட்பவர்களுக்கு செய்துகொடுப்பது வழக்கம். இந்த கலையும் ஓரளவு என் அம்மாவிற்கு
தெரியும்.
திருமணம்
1978-ஆம்
ஆண்டு அருணாச்சல வடிவுக்கும், புஷ்பவதிக்கும் “திருமணம்” நடைபெற்றது. திருமணமான
புதிதில் தமையனார் குடும்பத்துடன் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள். எனது அக்கா அனுசுயா
1979-ஆம் ஆண்டு வெள்ளமோடியில் பிறந்தார். 1980-ஆம் ஆண்டு நான் பிறந்தேன்.
கம்யூனிஸத்தில்
ஈடுபாடு கொண்ட எனது தந்தை வங்காளத்தை சேர்ந்த கம்யூனிஸ தலைவரான பூபேஷ் குப்தா நினைவாக
எனக்கு பூபேஷ் என்று பெயர் சூட்டினார். எனது தாய் மாமா மகாலிங்கம் எனக்கு பாலச்சந்திரன்
என்று பெயர் வைக்க ஆசைப்பட, எனது பெயர் பூபேஷ் பாலன் என்றானது. வெள்ளமோடியில் எனது
சித்திகள் பொன்னுத்தங்கம் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் அரவணைப்பில் நானும் எனது சகோதரியும்
வளர்ந்தோம்.
வடநாட்டில்
இருந்து பணியிட மாறுதல் கிடைத்து எனது தந்தை தென்னாட்டிற்கு வந்தார். ஆந்திர மாநில
சிங்கெரி அனல் மின்நிலைய பாதுகாப்பு பணிக்காக ராமகுண்டம் என்னும் இடத்திற்கு வந்தார்.
அரசு குவாட்டர்ஸ் வீடு கிடைத்ததால் எங்களையும் அழைத்து சென்றார். எனக்கு அப்பொழுது
மூன்று வயது. அந்த குவாட்டர்ஸ் நிகழ்வுகள் ஏதும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நானும்
அக்காவும் நிறைய சேட்டை செய்வோம் என்று என் தாயார் அடிக்கடி நினைவு கூறுவார்கள். சில
தெலுகு வார்த்தைகளும் பேச கற்றுக்கொண்டோமென்று சொல்வார்கள்.
ஒருமுறை
எனக்கு உடம்பு சரியில்லாமல் போக, அம்மா என்னை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல, எனது
தந்தை பணிமுடிந்து சீருடையில் போலீஸ் ஜீப்பில் நேராக மருத்துவமனை வந்து விட்டார். அந்நேரம்,
நர்ஸ் ஊசி மூலம் மருந்தை செலுத்த நரம்பை தேடி குத்த, நான் அலறி அழுதபோது, எனது தந்தை
ஊசியை பிடுங்கி எரிந்து என்னை வீட்டிற்கு கூட்டி வந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படும்
ஒன்று.
அதுபோல்
சாத்துக்குடி வாங்க வீட்டிலிருந்த ஐந்து ரூபாய் கட்டு ஒன்றை நான் எடுத்து, மாடியில்
இருந்து கீழிறங்கி வந்து பழ வியாபாரியிடம் தந்த கதையும் அடிக்கடி நினைவுகூரப்படும்.
நல்லவேளை, அந்த வியாபாரி எனது தாயாரை அழைத்து பணத்தை கொடுத்துவிட்டார்.
1983-ஆம்
வருடம் எனது தந்தையின் தாயார் லெட்சுமி அம்மாள் இயற்கை எய்தினார். தந்தி கிடைக்க பெற்று
நாங்கள் செல்வதற்குள் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, அதற்குள் அடக்கம் செய்து விட்டார்கள்.
தாயாரின் முகத்தை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் இன்றளவும் எனது தந்தைக்கு உண்டு.
கம்யூனிச கொள்கைகளின் மேல் இருந்த தீவிரத்தால் கோயிலுக்கு செல்வதை விரும்பாதவர் எனது
தந்தை. ஆனால், தினமும் காலை தனதுதாய் லெட்சுமி அம்மாளின் புகைப்படத்தை வணங்க மறவாதவர்.
மீண்டும்,
ராமகுண்டம் வாழ்க்கை. 1984-ஆம் ஆண்டு பிறந்தாள் எங்களது தங்கை கல்பனா. எனது அப்பாவுக்கு
டெல்லி இந்தியன் ஆயில் ரிபைனரி பாதுகாப்பு பணிக்கு மாறுதல் கிடைத்திட, எங்கள் எல்லோரையும்
அம்மா ஊரான வெள்ளமோடியில் விட்டுவிட்டு, அவர் மட்டும் டெல்லி சென்றார். டெல்லி பார்லிமென்ட்
வளாக பாதுகாப்பு பணியிலும் இருந்தார் எனது தந்தை. அப்பொழுது கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் டென்னிஸ் அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
வெள்ளமோடி
நானும்
எனது சகோதரிகளும் பள்ளி படிப்பை “வெள்ளமோடி”-யில் தொடங்கிவிட்டோம். எனது அம்மாவின் தந்தை
சிதம்பர வடிவு நாடார் 1986-ஆம் ஆண்டு காலமானார். அவருடனான நாட்கள் என்நினைவில் இருக்கின்றன. அவருடன் சரிக்கு சமமாக நான் கத்தி பேசும்பொழுது
‘இந்த வாய் மட்டும் இல்லைனா
நாய் கூட மதிக்காது’ என்கிற அர்த்தத்தில் ஒரு சொலவடை சொல்வது அவரது
வழக்கம்.
வெள்ளமோடியின்
சிறப்பம்சங்களில் ஒன்று பழைய முத்தாரம்மன் கோயில். சிறுவயதில் அக்கோயில் திருவிழா கலை
போட்டிகளில் பங்கு கொண்டது, யானை ஊர்வலத்தில் ஆட்டம் போட்டது, விடிய விடிய திரையில்
படம் பார்த்தது எல்லாம் நினைவில் வாழும் மகிழ்வான தருணங்கள்.
பொன்னுமணி
பாட்டி பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பானவர். அதே வேளையில் பேரப்
பிள்ளைகளிடம் மிகவும் அன்பானவர். அவர் ஒரு கடின
உழைப்பாளி. வீட்டு வேலை, வயல் வேலை, மாடு
பராமரித்தல் என்று எல்லா வேலைகளையும் அனாயசமாக செய்யும் பழக்கம் கொண்டவர். அவருடைய பெண் பிள்ளைகளும் அவருக்கு
உறுதுணையாக இருந்தனர். அவர் வைத்து கொடுத்த
மீன் குழம்பின் சுவை இன்றளவும் நான்
மறக்கமுடியாத சுவைகளில் ஒன்று.
காலையில்
பதநீர் காய்த்து கருப்பட்டி தயார் செய்வது மாமம்மாவின் (மாமாவின் அம்மா)
வழக்கம். நான், எனது அக்கா, மற்றும்
தங்கை மூவரும் சீலாந்தி (பூவரசம்) இலை பறித்து கையில்
வைத்து கொண்டு அடுப்பின் பக்கத்தில் உட்கார்ந்திருப்போம். கருப்பட்டி
பாகு வந்தவுடன் எடுத்து இலையில் ஊற்றித் தருவார். இளஞ்சூட்டில் பாகு உறைவதற்கு முன்
நக்கி சாப்பிட்ட சுவை இன்னும் நாவில்
எஞ்சியிருக்கிறது. மீதமுள்ள பாகு சிரட்டையில் ஊற்றப்பட்டு
கருப்பட்டியாகும்.
அம்மாவின்
சகோதரி பொன்னுத்தங்கம் பொட்டல்விளையை சேர்ந்த தங்கப்பன் அவர்களின் வாழ்க்கை துணைவியானார். கஸ்தூரி, மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த அருமைதங்கத்தின் வாழ்க்கை துணைவியானார். மகாலிங்கம் திருநகரை சேர்ந்த அசுவதியை திருமணம் செய்தார்.
எனது
அப்பா தனது பிள்ளைகளிடம் இனிமையாகவே
நடந்து கொள்வார். கண்டிப்பு வார்த்தைகளிலேயே முடிந்து விடும். அதையும் மீறி ஒரே ஒருமுறை நான்
அடிவாங்கிய அனுபவம் உண்டு. வெள்ளமோடியில் இருந்தபொழுது கோபத்தில் ஒரு கெட்ட வார்த்தையை
நான் சொல்லி விட, சிறுகுச்சியால் அடிவாங்கினேன்.
தேரிமேல்விளை
காவலர்
பணியில் இருந்து தலைமை காவலராக பணி உயர்வு பெற்றார்
எனது தந்தை. 3 வருட டெல்லி பணிக்கு
பிறகு சென்னை துறைமுக பாதுகாப்பு பணிக்கு மாறுதலாகி வந்தார். “தேரிமேல்விளை”-யில் ஒரு வீடு கட்ட
வேண்டும் என்ற கனவை நோக்கி
அடியெடுத்து வைத்தார். ஒரு நிலம் வாங்கினார்.
பக்கத்து வீட்டுக்காரரான அவரது தூரத்து சொந்தம் மாமா காளிதாசன் அவர்கள்
மேற்பார்வையில் வீடு
வளரத் தொடங்கியது. எனது அம்மா வெள்ளமோடியில்
இருந்து அடிக்கடி வந்து கட்டிட வேலையை கவனித்துக்கொண்டார். 1989-ஆம் ஆண்டு பால்
காய்த்து தேரிமேல்விளைக்கு குடி வந்தோம்.
தேரிமேல்விளைக்கு
வந்தவுடன் நான் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த
கணபதிபுரம் ஹிந்து வித்யாலயா பள்ளிக்கு அரசு பேருந்து மூலம்
தொடர்ந்து சென்றேன்.
பின்னர் ஆறாம் வகுப்பு முதல் நாகர்கோயில் சேது லக்ஷ்மி பாய்
அரசு பள்ளிக்கு சென்றேன். எனது அக்கா 10-வது
வரை கணபதிபுரம் அரசு பள்ளியிலும், பின்னர்
சூரங்குடி அரசு பள்ளியிலும் படித்தாள்.
எனது தங்கை புதூர் அரசு பள்ளியிலும் பின்னர்
நாகர்கோயில் டதி பள்ளியிலும் படித்தாள்.
குழந்தை
பருவம் ஒரு ஊரில், இளமை
பருவம் இன்னொரு ஊரில், இரண்டு ஊரிலும் நெருங்கிய நட்புகள் கிடைக்காமல் போய்விட்டது எனக்கு இந்த மாறுதல்களால். வெள்ளமோடியில்
இருந்ததால், நீச்சல்,
மரம் ஏறுதல் என்று ஒரு சில திறமைகள்
வாய்க்கப்பெற்றன. லிங்கேஷ், கண்ணன், மணிகண்டன் என்று பால்ய நட்புகளும் உண்டு. தேரிமேல்விளையில் மீராள், வீராசாமி, போன்ற நல்ல நட்புகள் கிடைக்கப்பெற்றன.
பெரியப்பாவின் பிள்ளைகள் பாரதிமோகன், ஜீவா, சுப்பிரமணிய பாரதி, அஜிதா அவர்களுடன் பழகுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.
1991-ஆம் ஆண்டு
பள்ளி கோடை விடுமுறைக்கு நாங்கள்
மெட்ராஸுக்கு (சென்னை) சென்றோம். எனது தந்தை நண்பர்களுடன்
தங்கி இருந்ததால், நாங்கள் எங்கள் சித்தி பொன்னுத்தங்கம் வீட்டில் தங்கினோம். முதன்முதலாக அப்பாவுடன் சேர்ந்து சென்னையை சுற்றி பார்த்தற்கு வாய்ப்பாக
அமைந்தது அந்த விடுமுறை. ஒரு
நாள், அதிகாலை பரபரப்பாக வந்தார் எனது தந்தை. ராஜீவ்
காந்தி கொல்லப்பட்டார் என்று தகவல்
கூறினார். நாங்கள் சில நாட்கள் வீட்டிற்குள்ளேயே
இருந்தோம்.
மெட்ராஸில்
பணியில் இருந்த பொழுது, ஒரு வழிப்பறி கொள்ளையனை
மடக்கி பிடித்த அனுபவம் எனது தந்தைக்கு உண்டு.
அந்த கொள்ளையன் வைத்திருந்த கத்தி நெடுநாள் சமையலறையில் இருந்தது.
புதிய பயணம்
எனது
அப்பாவுடன் தொடக்ககாலத்தில் பணியாற்றியவர் புருஷோத்தமன். அப்பாவின் நல்ல நண்பர். கல்பாக்கம்
அணுமின் நிலையத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றினர். அந்தக்காலகட்டத்தில் புருஷோத்தமனின் அண்ணன் நித்தியானந்தம் அவர்கள் நித்தியானந்தம் அண்ட் கோ என்ற பெயரில்
பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதி பெற்று தரும் சுங்க முகவர்கள் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். புருஷோத்தமன் தனது அரசாங்க பணியை
ராஜினாமா செய்துவிட்டு அண்ணனுடைய நிறுவனத்தில் சேர்ந்து கொண்டார்.
அதன்பிறகு
எனது அப்பா பல இடங்களுக்கும் மாறுதலாகி
பணியாற்றிவிட்டு நாங்கள் தேரிமேல்விளையில் குடியிருந்தபொழுது மெட்ராஸுக்கு மாறுதலாகி வந்தார். புருஷோத்தமன் மூலம் நித்தியானந்தமும் நல்ல நண்பரானார். எனது
அப்பாவிடம் வேலையை விட்டுவிட்டு தங்களுடன் தொழிலில் சேர்ந்துகொள்ளுமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் எனது அப்பாவுக்கு ஹைதராபாத்-க்கு
மாறுதல் வந்தது. மத்திய அரசில் 21-ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், 1993-ஆம் ஆண்டு வேலையை
ராஜினாமா செய்தார்.
மெட்ராஸில்
இருந்த நித்தியானந்தம் அண்ட் கோ-வின் கிளை
நிறுவனத்தை எனது அப்பாவுக்காக தூத்துக்குடியில்
தொடங்க முயற்சி செய்த நிலையில், அவர்களின் தொழில்முறை நண்பரான தேசிங்கு அவர்கள் ஒரு கிளை நிறுவனத்தை
தூத்துக்குடியில் தொடங்கினார். பரமசிவம் நாடார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக எனது தந்தை பொறுப்பேற்றுக்கொண்டதன் மூலம் “புதிய பயணம்”
தொடங்கியது. அந்நிறுவனத்தில் எனது
அம்மாவின் சகோதரர் மகாலிங்கமும் உடன் வேலை செய்தார்.
5 வருடங்கள்
அங்கு வேலை செய்த பின்னர்,
1998-ஆம் ஆண்டு நித்தியானந்தம் அவர்கள் தூத்துக்குடியில் கிளை நிறுவனத்தை தொடங்க,
டிசம்பர் 6-ஆம் நாள் அந்நிறுவனத்தின்
நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனது தந்தை. எனது
பெரியப்பாவின் மகன் பாரதிமோகனும் அங்கு
பணியாற்றினார். மேலும் மினிஷ், அந்தோணி ராஜா போன்றவர்களின் கடின
உழைப்பால் மிக குறுகிய காலத்தில்
நித்தியானந்தம் அண்ட் கோ தூத்துக்குடி கிளை சிறப்பாக வளர்ந்தது.
சொந்த அலுவலக கட்டிடம், சொந்த பொருள் கிடங்கு என்று நிறுவனத்தை நிலை நிறுத்தினார் எனது
தந்தை.
எனது
அப்பா தூத்துக்குடியில் வேலை செய்தபொழுது எல்லா
வார இறுதி நாட்களும் ஊருக்கு வருவது வழக்கம். நாங்கள் பள்ளி கல்வியை பயின்று கொண்டிருந்த காலம். சிலநாட்கள் பள்ளி முடியும் தருவாயில் காத்திருந்து அழைத்து செல்லும் சமயத்தில் சித்ரா ஹோட்டலில் உணவு வாங்கி தருவார்.
நானும் எனது சகோதரிகளும் பெரும்பாலும்
எதுவும் கறாராக கேட்டது இல்லை. ஆனாலும் எங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். நேரம்கிடைக்கும்போது அக்காவுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்.
‘ஓவிய
போட்டி’, ‘கையெழுத்து போட்டி’ என்று போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுப்பது அவரது வழக்கம். எல்லா பிள்ளைகளிடமும் ஒரே மாதிரியான அன்பு
செலுத்தினாலும் கடைக்குட்டி கல்பனா மேல் செல்லம் அதிகம்.
அனைத்து போட்டிகளிலும் அவள்தான் வெற்றி பெறுவாள் என்பதை சொல்லத்தேவையில்லை.
சித்தி
பொன்னுதங்கத்தின் பிள்ளைகள் சங்கீதா, சத்யா, பிருந்தா ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும்
எங்கள் வீட்டிலிருப்பார்கள். கஸ்தூரி சித்தியின் பிள்ளைகள் சொர்ணரூபா மற்றும் சிவசுந்தர் சேர்ந்து கொள்வார்கள். எல்லா வகையான விளையாட்டுகளும் விளையாடுவோம். மறக்க முடியாத பால்யகால நாட்கள் அவை. தந்தை வழி வாரிசுகள், தாய்
வழி வாரிசுகள் என்று எல்லோரையும் சரிசமமாக அரவணைத்து செல்வதில் எனது தாய் தந்தையருக்கு
நிகர் அவர்களேதான்.
அப்பாவுக்கு
மதக்கொண்டாட்டங்கள் மேல் விருப்பங்கள் இல்லை
என்றாலும் எங்களுக்காக பண்டிகைகள் கொண்டாடுவதில் கலந்து கொள்வதுண்டு. குறிப்பாக தீபாவளி சமயங்களில் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும்
பட்டாசு வாங்கி கொடுப்பார். எங்களுக்கும் நிறைய பட்டாசுகள் வரும். எங்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பது வழக்கம்.
எனது
அக்கா அனுசுயா பள்ளிக் கல்வியை முடித்து எனது அப்பா படித்த
தென் திருவிதாங்கூர் கலைக் கல்லூரியில் பட்ட படிப்பு படித்தார்.
நான் பள்ளிக்கல்வியை முடித்து நுழைவுத்தேர்வு எழுதி ஒரு தனியார் கல்லூரியில்
பொறியியல் படித்து முடித்தேன். எனது தங்கை கல்பனாவும்
பொறியியல் படித்தாள். எனது அம்மாவின் அம்மா
பொன்னுமணி இறுதிக்காலத்தில் எங்கள் வீட்டில் தானிருந்தார். 2003-ஆம் ஆண்டு மறைந்தார்.
என்
அக்காவுக்கு திருமணம் புதுக்குடியிருப்பை சேர்ந்த அசோக்குமாருடன் நடந்தது. அவளது பிள்ளைகள்
பவித்ரா மற்றும் வருண் கார்த்திக். அக்கா குடும்பம் நாகர்கோயிலில் இருப்பதால் ஒவ்வொரு
வார இறுதியும் அப்பா அம்மாவுடன் தேரிமேல்விளையில் இருப்பார்கள்.
ஒரு
சிறிய சாலை விபத்தில், காலில் அடிபட்டு ஒரு மாத காலம் அனந்தபுரி மருத்துவமனையில் படுக்கையில்
இருந்தார் எனது தந்தை (2008). எனது தாயின் கவனிப்பு, உற்றார் உறவினர்களின் பிரார்த்தனை,
மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பில் மீண்டு வந்தார். குணமடைந்து முதன் முதலாக நடைபயின்ற
பொழுது ஒரு குழந்தையின் சிரிப்பை அவர் முகத்தில் பார்த்தேன்.
எனது
திருமணம் ஒசரவிளையை சேர்ந்த நடராஜன், தங்கபகவதியம்மை தம்பதியினரின் மகள் சிவரேகாவுடன்
நடந்தது. எங்களது பிள்ளைகள் மஹதி மற்றும் நெருதா. என் தங்கை திருமணம் உவரியை சேர்ந்த
சுபாஷ்சந்திர போஸுடன் நடந்தது. அவர்களது பிள்ளைகள் திஷ்யா மற்றும் தர்ஷிவ் யுகன். மூன்று
திருமணங்களையும் தனது சக்திக்கு மீறி மிகவும் சிறப்பாகவே நடத்தி வைத்தார் எங்கள் தந்தை.
2012-ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 18-ஆம் தேதி, 4 பங்குதாரர்களுடன்
தூத்துக்குடியில் ஆக்ட் லிங்க் லாஜிஸ்டிக்ஸ் (Act Link
Logistics) என்ற நிறுவனத்தை தொடங்கினார் எனது தந்தை. 2021-ஆம்
ஆண்டு நித்தியானந்தம் அவர்களின் மறைவுக்கு பின்னர், நித்தியானந்தம் அண்ட் கோ தொடர்ந்து செயல்படவில்லை.
அதன் பிறகு, ஆக்ட் லிங்க் லாஜிஸ்டிக்ஸ் மூலம் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெருந்தந்தை
எனது
அப்பா தனது நிறுவனத்தில், வேலையில்லாமல்
இருந்த உறவினர்களுக்கும் வேலை கொடுத்து ஆதரித்தார்.
தன்னுடைய பிள்ளைகளின் படிப்புக்கு உறுதுணையாக இருந்தது போல், அவருடைய சொந்தங்களின் பிள்ளைகளுக்கு, எனது அம்மாவின் உறவினர்களின்
பிள்ளைகளுக்கு என்று எல்லோருக்கும் முடிந்த அளவில் உதவிகள் செய்தார்.
கம்யூனிச
கோட்பாடுகளில் முதன்மையானது சமவுடைமை (சோசலிசம்). சொல்வதற்கும் பரப்புரை செய்வதற்கும் எளிமையான விஷயம் சோசலிசம். ஆனால், கடைபிடிப்பதற்கு மிகவும் கடுமையான ஒன்று. ஒரு நிறுவனத்தின் ஊழியர்
அனைவரையும் அரவணைத்து சமவுடைமை மனப்பான்மையில்
இன்றளவும் நடத்திக்கொண்டிருக்கிறார் என் தந்தை என்பது மிகவும்
அதிசயத்தக்க ஒன்று.
அருணாச்சல
வடிவு அவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் ராணுவ ஒழுங்கை கடைபிடிப்பவர். தினமும் அதிகாலை எழுந்தவுடன் நடைபயணம், உடற்பயிற்சி தவறாமல் செய்வது வழக்கம். காலை மாலை என
இரு வேளை குளிப்பது, அனைத்து
தினசரிகளையும் படிப்பது, சரியான நேரத்தில் உண்பது, தான் இருக்கும் இடத்தை
சுத்தமாக வைத்துக்கொள்வது, தூய்மையான உடைகளை அணிவது என்று எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்கும்.
அவர்
அளவிற்கு இல்லை என்றாலும், நானும் ஓரளவிற்கு எல்லா பழக்கங்களையும் கடைபிடிக்கிறேன் என்றால் அதற்கு முன்மாதிரி அவர்தான். எந்த அளவிற்கு அனைவரிடமும்
அன்பாக நடந்து கொள்கிறாரோ அதே அளவு கோபப்படும்பொழுதும்
கடுமையாக நடந்து கொள்வார். அவரை புரிந்து கொண்டவர்களுக்கு
‘அடிக்கிற கை அணைக்கும்’ என்பதும்
புரியும்.
வாராவாரம்
தூத்துக்குடியில் இருந்து தேரிமேல்விளை செல்வது, பிள்ளைகள் வெளியூரில் இருக்கின்றபொழுதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஊர் மக்களிடமான தொடர்பு
தொடர்கிறது. ஊரில் வருடா வருடம் நடக்கும் மகாத்மா காந்தி மன்றவிழாவில் அவருடைய பங்களிப்பு எப்பொழுதும் இருக்கும்.
அவருடைய
அண்ணன் வேலாயுத பெருமாள் சொல்லை எப்போதும் தட்டுவதில்லை. அண்ணனுடைய இறுதிக்காலத்தை நன்றாக கவனித்துக் கொண்டார் (இறப்பு: 2015). அவருடைய சகோதரி செல்ல நாடாச்சியின் இறுதிக்காலத்தையும் நன்றாக கவனித்தார் (இறப்பு: 2022).
ஊர்
தலைவராக இருந்த சமயத்தில் இசக்கியம்மன் கோயில் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார். ஊருக்கு தேவையான உதவிகள் புரிவதில் எப்போதும் முன்னோடியாக இருப்பார்.
அருணாச்சல
வடிவு அவர்களின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம். வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் உணவளித்து உபசரிப்பது அவர் வழக்கம். அவரை
நாடி வரும் ஊரில் உள்ள வயதான பெரியவர்களுக்கு
பணம் கொடுத்து ஆதரிப்பதும் வழக்கம். குடும்பத்தில் இளைய மகனாக பிறந்தாலும்,
தன் சுற்றம் முழுவதையும் ஆதரித்து அரவணைத்து செல்லும் “பெருந்தந்தை” அருணாச்சல வடிவு அவர்கள்.
பெருந்தாய்
என்
அம்மா மண்டைகாட்டம்மனின் தீவிர பக்தை. அம்மனிடம் முறையிட்டு நேர்ச்சை செய்யும் பல விஷயங்கள்
அப்படியே நடந்திருக்கின்றன. அடிப்படையில் யாருக்கும் தீங்கு நினைக்காமல் நல்லதே விழைவோர்க்கு
வரும் துன்பங்கள் பனிபோல் விலகிவிடுவது இயல்பு.
எனது
தாய், தான் பிறந்த குடும்பத்தில் மூத்தவர் என்பதால், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மட்டுமல்லாமல்,
அவர் தந்தை வழி சித்தப்பா பிள்ளைகளிடமும், தாய் வழி மாமன் பிள்ளைகளிடமும் எப்பொழுதும்
மாறாத அன்பு செலுத்துபவர்.
என்
அப்பாவின் பட்டறிவிற்கு இணையான உலக ஞானம் உள்ளவர் என் அம்மா. எங்கள் குழந்தை பருவத்தில்
எங்கள் அப்பா பெரும்பாலும் வெளியூர்களில் பணி செய்ததால் எங்களை எல்லா விதத்திலும் கவனித்துக்கொண்டவர்.
எனக்கும் என் தங்கைக்கும் பிறப்பு சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல்களால், தனியாளாக
நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்றுத் தந்தவர். பள்ளியில் சேர்வதற்கான அனுமதி
பெறுவதில் இருந்து படிப்பிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி தருவது வரை எந்ததொரு
சிரமமும் எங்களுக்கு தராமல் பார்த்துக்கொண்டவர். நான் நாகர்கோயிலுக்கு பள்ளி செல்லும்
காலங்களில் டியூஷன் செல்வதற்காக அதிகாலை 5:45 பேருந்தில் செல்வது வழக்கம், அதற்கு முன்னரே
எழுந்து காலை உணவு, மதிய உணவு இரண்டும் தயாரித்து தந்து அனுப்புவார்கள்.
குடும்பத்தை
கவனிப்பது மட்டுமல்லாமல், பொழுதுபோக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். தினசரி
சமையல் மட்டுமல்லாமல், வாராந்திரி புத்தகங்கள் படிப்பது, சிறு தோட்ட வேலைகள் செய்வது
என்று எந்நேரமும் பணி செய்து கிடப்பார். வெள்ளமோடியில் இருந்த சிறுவயதில், கிணற்றடி
வீட்டிற்கு சென்று எனது அம்மா படிப்பதற்காக வாரமலர் வாங்கி தருவேன். அப்பொழுது சிறுவர்மலர்
படிப்பது எனது வழக்கம். எனது புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு அடிப்படை இதுதான்.
வெள்ளமோடி
தாத்தாவின் காலத்திற்கு பிறகு ஒரு சில ஏடுகள் எங்கள் வீட்டிற்கு வந்தன, இன்றும் பாதுகாப்பாக
உள்ளன. ஒரு ஏடு கதையை புத்தகமாக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் அம்மா.
அப்பா
யாருக்கு பொருளாதார உதவி செய்தாலும், எந்த தடங்கலும் செய்யாதவர் அம்மா. அப்பாவின் அதீதமான
விருந்தோம்பல் சில சமயங்களில் சிரமத்தை தந்தாலும், எப்பொழுதுமே தன்நலன் கருதாது பிறருக்கு
உணவு செய்து கொடுப்பவர் அம்மா.
நானும்
என் தங்கையும் வேலை காரணமாக பெங்களூருவில் இருப்பதால் அப்பா அம்மாவுடன் உடனிருக்கும்
காலங்கள் குறைந்து விட்டன. ஆனாலும் நாங்கள் ஊருக்கு செல்வதும் அவர்கள் இங்கு வருவதும்
வழக்கம்தான். பேரப்பிள்ளைகள் மேல் அவர்கள் செலுத்தும் பாசம் அளப்பரியது.
அப்பா
நிறுவனத்தை இன்றளவும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். அம்மா, அப்பாவுக்கு துணையாக
இருப்பதோடு மட்டுமல்லாமல் மகளிர் குழுவும் நடத்தி வருகிறார்.
அம்மாவின்
சமையல் எப்பொழுதுமே சிறப்புதான். குறிப்பாக மீன் குழம்பு, மீன் அவியல், மீன் வறுவல்,
இட்லி, தோசை, வடை, முறுக்கு என எப்பொழுதுமே சிறப்பாக செய்து தருவார்கள். பொதுவாக அதுவேணும்
இதுவேணும் என்று கேட்கும் பழக்கம் கொண்டவனல்ல நான். ஆனாலும் தேவையான உணவு வகைகளை எந்த
சலிப்புமின்றி செய்து தருவார்கள். எனது தந்தை உணவினை ஆரோக்கிய அடிப்படையில் தேர்ந்தெடுத்து
உண்ணும் பழக்கம் கொண்டவர். அவர் எதிர்பார்ப்பினை எப்பொழுமே பூர்த்தி செய்வது எனது தாயின்
வழக்கம்.
கொண்ட
கணவனுக்காகவும் பெற்ற பிள்ளைகளுக்காகவும் பார்த்து பார்த்து சமைக்கும் தாய்குலங்கள்
பெற்றவர்கள் பாக்கியவான்கள். தற்காலத்தில் பெண்கள் பொருளாதார பங்களிப்பும் செய்வதால்,
வருங்காலங்களில் சமையல் என்பது பாலினத்திற்கு அப்பாற்பட்டு தேவைக்கேற்ப அவரவர் செய்யும்
நடைமுறை வந்துவிடும்.
மா,
பாலா, வாழை மற்றும் கனிதரும் மரங்கள் அனைத்தும் எனது தாயின் பெருவிருப்பங்கள். 30 வருடங்களுக்குமுன்
அவர் தோட்டத்தில் வளர்த்த பலா, மா செடிகள் மரமாகி தற்பொழுது பயன் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
காய்த்த மா, பலாப்பழங்களை பிள்ளைகளுக்கும், பேரன் பெயர்த்திகளுக்கும், உறவினர்களுக்கும்,
சுற்றத்தார்களுக்கும், நட்புகளுக்கும் கொடுப்பதில் அப்படியொரு ஆனந்தம் அடைவார்கள்.
‘தான்’, ‘தனது’ என்று சுருங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், தனது எதிர்கால
சந்ததியினரும் பயன்படும் வகையில் செயல்படும் இது போன்ற மனதுடையவர்களைத்தான் “பெருந்தாய்”
என்கிறோம்.
குடும்ப வாழ்வு
அப்பா
அம்மா சிந்தனைகளில் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. இருவருக்கும் புத்தகம் படிக்கும்
வழக்கம் உண்டு. வேறு வேறு வகையான புத்தகங்கள். அவர்கள் பேசுவதை/படிப்பதை கேட்டு/படித்து
வளர்ந்ததால் எனக்கும் இருவர் கருத்துக்களிலும் உடன்பாடான விஷயங்களும் உண்டு, எதிர்
கருத்துகளும் உண்டு. ஆனால் இரண்டையும் சமன்செய்யும் ஒரு பக்குவம் வந்து விட்டது.
அதிகார
வர்க்கத்தின் ஏவல்களை அனுபவித்தவர் எனது தந்தை. அதனால்,
பிள்ளைகளில் ஒருவரை இந்திய ஆட்சி பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஆசையை எங்களால்
நிறைவேற்ற முடியவில்லை, பேரப்பிள்ளைகள் யாராவது நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம்.
சிறு
வயதில் பள்ளி செல்லும்போதே உழைக்கத் தொடங்கியவர் எனது தந்தை. தற்பொழுது 70 வயது கடந்த
நிலையிலும் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கிறார். கம்யூனிச கட்சி செயல்பாடுகளிலும் அவ்வப்போது
கலந்துகொள்வதுண்டு. உழைப்புதான் இளமையின் ரகசியம் என்பது அவர் நமக்கு அளிக்கும் பாடம்.
எனது
தந்தையும் தாயும் சேர்ந்து சில வெளிநாட்டு பயணங்களும் சென்றிருக்கிறார்கள். இலங்கை
பயணம் மற்றும் எகிப்து இஸ்ரேல் பயணம் அதில் அடங்கும். நைல் நதியில் படகு பயணம் சென்று
கொண்டிருந்தபொழுது, எனது அம்மாவின் பிறந்தநாள் என்பதை அறிந்து பயண நண்பர்கள் கேக் வெட்டி
கொண்டாடியது என் அம்மாவின் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று.
தனது
பள்ளிக்கால நாட்களில் எந்தவொரு உல்லாச பயணத்திற்கும் செல்ல முடியவில்லை என்றாலும் திருமணத்திற்கு
பின்பு உலக பயணங்கள் எல்லாம் சென்றுவிட்டேன் என்பது எனது தாயின் பெருமிதங்களில் ஒன்று.
எனது
தந்தை நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் விருந்தோம்பல் நண்பர்கள்
வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். அதுபோல் எனது தந்தையின் பலமான சிரிப்பு அவரது அடையாளங்களில்
ஒன்று.
இரு
சகோதரிகள், மற்றும் தம்பியின்மீது மிகுந்த பாசம் கொண்டவர் எனது தாய். அன்றாட நிகழ்வுகளை
தினமும் தங்கைகளிடம் பகிர்ந்துகொள்வது அவரது வழக்கங்களில் ஒன்று.
தினமும்
தூங்குவதற்கு முன் டைரி எழுதும்
பழக்கம் கொண்டவர் எனது தந்தை. அவரது
பலதரப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை வைத்து பார்க்கும்பொழுது, எல்லா வருட டைரி குறிப்புகளையும்
தொகுத்தால் ஒரு அருமையான சுயசரிதை
புத்தகம் நமக்கு கிடைக்கும்.
நமது
குழந்தை பருவத்தில் நமது தாய் தந்தையர் நமது கதாநாயகர்கள். நமது வளர்ந்த பருவத்தில்
அவர்கள் செய்த தியாகங்களை எல்லாம் பொருட்படுத்தாத மனநிலை நமக்கு வந்துவிடுகிறது. பிறகு,
நமக்கு பிறந்த குழந்தைகளை வளர்க்கும்பொழுதுதான் நமது தாய் தந்தையரின் உண்மையான மகத்துவம்
நமக்கு புரிகிறது.
இந்த
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. எனது அப்பா அம்மாவின் பெயர்களை
நானும் என் சகோதரிகளும் மட்டுமல்ல அவர்கள் உடன்பிறந்தவர்களும், நண்பர்களும், உடன்பணிபுரிந்தவர்களும்,
பணிபுரிபவர்களும், சுற்றத்தார்களும் சொல்லி கொள்ளும்படியான சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பிள்ளையாக பிறந்தது என் பெரும் பேறு.
எனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்ற படிகளிலும் அப்பாவும் அம்மாவும் கூட இருந்தது எனக்கு யானை பலம் அளித்தது. தற்பொழுதும் துவண்டுவிடும் சிக்கலான தருணங்களில், அலைபேசியில் அவர்களிடம் பேசிவிட்டால் புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.
“தற்காத்துத்
தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்கிற
குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் எனது தாய்.
(விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும்
தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக்
காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.)
“இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” என்கிற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து
கொண்டிருப்பவர் எனது தந்தை.
(விளக்கம்: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.)
கற்காலத்தில்
விலங்குகளாய் வாழ்ந்த மனிதன், இன்று புது புது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நவீன
வாழ்க்கை வாழ்வதற்கு பலகோடி தாய் தந்தையர்களின் தியாகம் பின்னால் உள்ளது. மனித குலம்
தழைத்தோங்க நமது பங்களிப்பும் சேர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் நமது பிள்ளைகளுக்கு
நல்ல அப்பா அம்மாவாக இருக்க வேண்டியது அவசியம்.
கால மாற்றங்கள், மனிதனின் சிந்தனை வளர்ச்சிகள், சுதந்திர எண்ணங்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குடும்ப அமைப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய காலகட்டங்களில் ஒரு தாய் தந்தையின் நீண்ட நெடிய “குடும்ப வாழ்வு” என்பது பிள்ளைகளுக்கு கொடுப்பினை. இந்த உலக சக்கரம் தொடர்ந்து இயங்குவதற்கான அச்சாணி அதுதான்.
- பூபேஷ் பாலன்