வியாழன், 27 பிப்ரவரி, 2025

ராஜேஷும் சபரியும் ஹரியும் பின்ன நானும்

ஒருமாத்திற்கு முன்பு பள்ளிக்கால நண்பன் ராஜேஷ் அழைத்தான். பள்ளி நண்பர்களில் தொடர்ந்து தொடர்பில் இருப்பவன் இவன் மட்டும்தான். வேலை காரணமாக ஜப்பானில் இருந்து பெங்களூரு வந்திருக்கிறேன், சந்திக்கலாம் என்றான். சபரீசன், ஹரிஹரபுத்ரன் என்று பெங்களூருவில் இருக்கும் இரு பள்ளி நண்பர்களையும் இணைத்து வாட்ஸாப் குழுமம் ஆரம்பித்து, ஆலோசனை செய்து, சந்திக்கும் நாள், நேரம், இடம் அனைத்தையும் முடிவு செய்தான் ராஜேஷ்.

24/01/2025, மாலை 7:00 மணிக்கு குறிப்பிட்ட உணவு விடுதியில் நானும் சபரீயும் ஹரியும் முதலில் சந்தித்துக்கொள்ள, பின்னர் வந்து இணைந்து கொண்டான் ராஜேஷ். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு நேரில் பார்க்கிறோம். அடையாளம் காண்பதற்கே சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும், "டேய், ஸ்கூல்ல பார்த்த மாதிரி அப்படியே இருக்கிறடா" என்று மாறி மாறி கூறிக்கொண்டதில் உற்சாகமாக ஆரம்பித்தது அந்த மாலை. அவரவர் வேலை, மனைவி, குழந்தைகள் என்று தகவல் பரிமாற்றம் செய்துகொண்டோம்.
தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு, பேச்சு பள்ளி நாட்களை நோக்கி சென்றது. கூட படித்தவர்கள் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று அவரவர்க்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொண்டோம். சரியாக சொல்வதென்றால், நான்தான் தகவல்களை அறிந்து கொண்டேன். பள்ளி நண்பர்களின் தொடர்பிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேனென்று புரிந்து கொண்டேன். அவரவர் கைபேசியில் இருந்த புகைப்படங்களை காட்டி 'இது யார்', 'இது யார்' என்று கண்டுபிடிக்கும் விளையாட்டு ஆரம்பமானது. அருண், நாகராஜன் என்று மிக நெருங்கிய நண்பர்களை மிகவும் சிரமப்பட்டுதான் அடையாளம் காண முடிந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பது என்பது சிரமம்தான்.
நடராஜன், ஆனந்த், நவீன், என்று பல நண்பர்கள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்களென அறிந்து கொள்ள முடிந்தது. சில நண்பர்கள் தவறிவிட்டதையும் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் அனைவருக்கும் நெருங்கிய நண்பன் பெஹின் பற்றிய சரியான தகவல் எங்கள் யாரிடமும் இல்லை என்பது எங்களுக்கே ஆச்சர்யம்தான். முகபுத்தகத்தின் மூலம் அவன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்பது தெரிந்தது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், காலமாற்றத்தில் தொடர்புகள் விடுபட்டு, பள்ளிக்கால நண்பர்கள் நினைவில் மட்டுமே உறைந்து போய் நிற்கிறார்கள். 12-வது வகுப்புக்கு பிறகு ஆளுக்கொரு திசையில் சிதறிப்போனோம். எனக்கு தெரிந்து நண்பன் செல்வம் தவிர்த்து (மருத்துவக் கல்லூரி) எல்லோருமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தோம். கல்லூரிகளில் புதிய நட்புகள் கிடைக்கப் பெற்றதில் பழைய நட்புகள் நினைவுகள் ஆயின. அந்த காலக்கட்டம் கைபேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். நாம் விரும்பினாலும் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
கல்லூரி நண்பர்களிடமாவது தொடர்பு தொடர்கிறதா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். சில நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான் நட்பு தொடர்கிறது. கல்லூரிக்குப்பின், வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்தில் அடைந்து கொள்கிறோம்.
நாங்கள் படித்த நாகர்கோயில் எஸ்.எல்.பி பள்ளிக்கூடம் ஒரு சேவல் கூடம். அதனால், பெண்கள் பற்றிய பேச்சும், குறுகுறுப்பும் எப்போதுமே இருந்து கொண்டு இருக்கும். வெவ்வேறு பள்ளி மாணவர்கள் சந்தித்துக்கொள்ளும் டியூஷன் சென்டர்கள் பல உண்டு. எங்கள் அனைவருக்கும் மிகப் பிடித்த வேதியல் டியூஷன் கதைகளும் பேச்சில் வந்தது. நடராஜன் வாத்தியார், அங்கு படித்த பிற பள்ளி மாணவர்கள், மாணவிகள் என்று பேச்சு சென்றது.
பள்ளிப்பருவத்தில் தந்தையை புரிந்துகொள்ள மறுத்த நாம், தற்பொழுது நாற்பதுகளில் தத்தமது தந்தையை போலவே மாறிக்கொண்டிருக்கிறோம். நண்பன் ராஜேஷை தற்பொழுது பார்க்க அவன் தந்தையை பார்ப்பது போலவே இருக்கிறது. அவரவர் தாய் தந்தையரை பற்றியும் பகிர்ந்துகொண்டோம்.
ஆடியோ காஸெட்டை ராஜேஷிடமிருந்து கடன்வாங்கி பாட்டு கேட்பது என் பள்ளிக்கால வழக்கம். அந்த பாடல்களை தற்பொழுது கேட்கும்பொழுது, என் மனைவியிடம் அந்த ஞாபகங்களை பகிர்ந்துகொள்வதுண்டு. அப்பாவிடம் அடம்பிடித்து காஸெட் வாங்கிய கதையை ராஜேஷ் நினைவுகூர்ந்தான்.
இவர்கள் எல்லோரும் நாகர்கோயிலில் இருந்து பள்ளிக்கு வந்தபொழுது, நான் தேரிமேல்விளையில் இருந்து தினமும் பேருந்தில் சென்றதால், பள்ளிக்குப் பிறகான சினிமா போன்ற பொழுதுபோக்குகளில் பங்குகொண்டதில்லை. அவ்வப்போது விளையாட்டுகளில் மட்டும் கலந்துகொள்வதுண்டு. +2 முடித்து விடுமுறையில் நண்பன் ஹரியுடன் "காதலர் தினம்' படத்திற்கு சென்றதை நினைவுபடுத்திக்கொண்டோம்.
யாருமே காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்துகொண்டு காதலித்துக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு பெரிய ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நண்பன் ராஜேஷ் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது ஜப்பானுக்கு மாற்றலாகி சென்றவன். அவன் பெங்களூரு எப்படி எல்லோரையும் உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது என்று வினவினான். நாங்களும் பெங்களூருவின் நேர்மறை அம்சங்களை கூறிக்கொண்டோம். வெளியூரில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் சந்திப்பதென்பது அழகிய நனவு. குறிப்பாக, சபரீசனுடைய நாகர்கோயில் வட்டார வழக்கு ஊரில் இருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.
கல்லூரி நாட்களில், ராஜேஷ் ஹரியின் விடுதியறைக்கு சென்று அதிர்ச்சி அடைந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டது ரகளையாக இருந்தது. நண்பர்கள் ஹரி மற்றும் சபரீசனுடைய கல்லூரிக்கு பிறகான சில வருட சென்னை வாழ்க்கையையும் அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, அவர்களுடைய ஓஜா போர்டு அனுபவம் 'ரோமாஞ்சம்' போன்று திகிலாகவே இருந்தது.
அவரவர் வெளிநாட்டு பயண அனுபவங்களையும் பகிர்ந்தபொழுது, கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஹரி ஆறு மாதங்கள் அமெரிக்காவில் மாட்டிக்கொண்ட செய்தியும் தெரிய வந்தது. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து, நண்பர்களின் உதவியால் மீண்ட கதை அது.
நாம் மாணவர்களாக இருந்த பருவங்களை தாண்டி வந்து, தற்பொழுது நம் பிள்ளைகள் மாணவர்களாக இருப்பதை நோக்கி பேச்சு திரும்பியது. யாரும் பிள்ளைகளுக்கு அவ்வளவாக அழுத்தம் கொடுக்காமல் வளர்க்கிறோம் என்று புரிந்து கொள்ள முடிந்தது. நமது தாய் தந்தையர்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி நமக்கு இல்லாத காரணமாக இருக்கலாம்.
சினிமா பற்றி சிறிது பேசினோம். புத்தகம், புத்தக விழா பற்றி நானும் ஹரியும் மட்டும் பேசிக்கொண்டோம். அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை எனபது எனக்கே ஆச்சர்யம்தான்.
பள்ளி/கல்லூரி கால நிகழ்வுகளை எவ்வளவு பேசினாலும் அலுக்காது. அதுபோல, நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. நினைவலைகளில் சேமிக்க, சில புகைப்படங்களை எடுத்தோம். என்னதான் மூச்சை பிடித்தாலும் தொப்பை தெரிவதை தடுக்க முடியவில்லை என்ற கிண்டலுடன் பலமாக சிரித்துகொண்டோம்.
"மீண்டும் சந்திப்போம்" என்று நிறைவுபெற்றது சந்திப்பு.



நண்பர்களை சந்திப்பது நமது இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, 'நட்புத்தன்மை' பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போல் இருந்தால் போதுமானது, சந்திக்கும்பொழுது மலர்ந்துகொள்ளும்.
பல நினைவுகளை மீட்டெடுத்ததற்கும், நட்பினை புதுப்பித்ததற்கும், தொடர்ந்து சந்திப்பதற்கான உத்வேகத்தை கொடுத்ததற்கும் நன்றி நண்பர்களே.

- பூபேஷ் பாலன்

கருத்துகள் இல்லை: