வெள்ளி, 19 செப்டம்பர், 2014

யூபெர்லிங்கென் (Ueberlingen) - பூலோக சொர்க்கம்

அழகான ஏரி, கண்கவர் மலர் தோட்டங்கள், பசுமையான பழத்தோட்டங்கள், நீண்ட நெடிய மரங்களை கொண்ட காடுகள், ஏரிக்கரையில் அமைந்த வீடு, அந்த வீட்டில் நமக்கு பிரியமானவர்களுடன் நாம், எல்லோரும் காணும் கனவு இதுதான். அத்தனையும் நிஜமாக அமைந்த ஒரு இடம்தான் யூபெர்லிங்கென்.

பணி நிமித்தமாக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுளில் ஜெர்மனி (Germany) நாட்டின் யூபெர்லிங்கெனில் வசிக்க நேரிட்டது. தற்போதைய 2014 ஆண்டிலும் இங்கு வசிக்க நேர்ந்தது இனிய அனுபவமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் இன்ஸ்ப்ருக் (Innsbruck, Austria), பாரிஸ் (Paris, France), இன்டர்லேகன் (Interlaken, Switzerland), வெனிஸ் (Venice, Italy), பெர்லின் (Berlin, Germany) என்று சில சுற்றுலா பயணங்கள் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம்விட யூபெர்லிங்கென் சிறந்த சுற்றுலாதலமாக உணர்ந்தபடியால் அதைப்பற்றி எழுத முனைந்ததில் விழைந்த கட்டுரைதான் இது. இதை ஒரு பயணக்கட்டுரையாக எழுத முயற்ச்சிக்காமல், இங்கு வாழ்ந்த/வாழ்கின்ற அனுபவத்தை எழுத விழைகிறேன்.
யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நகரம், முன்னொரு காலத்தில் ரோமானியர்களால் (Romans) ஆளப்பட்டு பின்னர் சுதந்திரமடைந்து ஜெர்மனி ஆட்சியின் கீழ் வந்து, தற்பொழுது மிக முக்கியமான சுற்றுலாதலமாக விளங்குகிறது. கான்ஸ்டன்ஸ் ஏரியை போடன்ஸீ (Bodensee) என்றும் குறிப்பிடுவார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லான்ட் (Switzerland) மற்றும் ஆஸ்ட்ரியா  (Austria) ஆகிய மூன்று நாடுகளையும் போடன்ஸீ இணைக்கிறது.


யூபெர்லிங்கெனை சுற்றி திராட்சை தோட்டங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக திராட்சை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் இது. ஆப்பிள் (Apple) தோட்டங்களும் நிறைய உள்ளன. இதை தவிர்த்து ஸ்ட்ராபெர்ரி (Strawberry), ஹிம்பெர்ரி (Himberry), ப்ரோம்பெர்ரி (Bromberry) மற்றும் செர்ரி (Cherry) பழங்கள் விளைகின்ற பூமி இது. ஹாஸல்நஸ் (Haselnuss), வால்நஸ் (Walnuss) போன்ற கொட்டைகளும் இங்கு விளைகின்றன.

இங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்த நாட்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத வகையில், மனம் முழுவதும் இனிமையான நினைவுகளை யூபெர்லிங்கென் வழங்கியுள்ளது.

யூபெர்லிங்கெனில் மார்ச் (March) மாதத்தில் நடைபெறும் குளிர்கால விழா மிகவும் அருமையாக இருக்கும். ஆண்கள் அனைவரும் கருப்பு நிற உடையால் கண்களை தவிர்த்து உடல் முழுவதும் மறைத்து ஊர்வலமாக வருவார்கள். சவுக்கு போன்ற ஒன்றை வைத்து காற்றில் அடித்து ஒலி எழுப்புவார்கள். பெண்கள் சிகப்பு நிற உடை அணிந்து வருவார்கள். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இனிப்புகளை வாரி வழங்குவார்கள். குளிரில் நடுங்கிக்கொண்டே இரண்டு முறை இந்த கொண்டாட்டத்தை கண்டு களித்திருக்கிறேன்.

இலையுதிர் காலம், வசந்த காலம், வெயில் காலம், மழை காலம், பனி காலம் என்று எல்லா விதமான கால மாற்றங்களையும் மிகவும் துல்லியமாக பார்த்து உணர்ந்து அனுபவிக்கும் வகையில் வருடம் முழுவதும் கால நிலை அமைந்திருக்கும். குளிர் காலங்களில் குறைந்தபட்சம் -20 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அதிகபட்சம் 30 டிகிரி வரை கோடைகாலங்களில் இருக்கும்.


வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் கடும் குளிர் நிரம்பி இருந்தாலும், மே (May) மாதம் முதல் ஆகஸ்ட் (August) மாதம் வரை சூரியன் முகம் காட்டும். இந்த மாதங்களில் கோடையை அனுபவிக்க
ஐரோப்பிய (Europe) மக்கள் யூபெர்லிங்கென் நோக்கி படை எடுப்பார்கள். அதனால் தங்குவதற்கு இந்த மாதங்களில் வீடு கிடைப்பது மிகவும் சிரமம். 2012 ஆம் வருடம் மனைவி மற்றும் மகளுடன் வசிப்பதற்கேற்ற இடம் இங்கு கிடைக்காததால் அருகாமையில் இருக்கும் ஃப்ரிக்கிங்கன் (Frickingen) என்ற இடத்தில் 2 மாதங்கள் தங்கி இருந்தோம். ஃப்ரிக்கிங்கன் ஆப்பிள் தோட்டங்கள் நிரம்பிய மிகவும் அழகான கிராமம். ஆப்பிள் தோட்டங்களில் என் மகள் தவழ்ந்து விளையாடிய தருணங்கள் மறக்கமுடியாதவை.

அதன்பிறகு இரண்டு மாதங்கள் ஆன்டல்ஷாஃபன் (Andelshofen) என்னும் இடத்தில் குடியிருந்தோம். இங்கு நிறைய ஸ்ட்ராபெரீ பழத்தோட்டங்கள் இருக்கின்றன. ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த வீட்டு உரிமையாளருடைய தோட்டத்தில் பழங்கள் பறித்து என் மகளுக்கு கொடுத்தேன். பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் சுவையில் மயங்கிய என் குழந்தை செடிகளில் இருந்து பழங்களை பறித்து உண்ண
த் தொடங்கினாள். ஒரு கட்டத்திற்கு மேல் பழத்தை பறிக்க பொறுமை இல்லாமல் செடியில் இருந்து நேரடியாகவே சாப்பிட்டாள். என் காமிரா (Camera) கண்களுக்குள் சிக்கிய அந்த தருணம் ஒரு கவிதை.

யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் திரைபெர்க் (Triberg) என்னும் இடத்தில் ப்ளாக் ஃபாரஸ்ட் (Black Forest) அருவி அமைந்துள்ளது. இங்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் (Cake) தவிர்த்து குக்கூ க்ளாக் (Cuckoo clock) மிகவும் பிரசித்தம். இங்கு வாங்கிய குக்கூ சுவர் கடிகாரம் கன்னியாகுமரியில் என்வீட்டு வரவேற்பு அறையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

கோடைகாலமான ஜுலை (July), ஆகஸ்ட் மாதங்களில் போடன்ஸீயில் நீச்சல் அடிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிறிய வயதில் ஊரில் குளம் குட்டைகளில் நீச்சலடித்த சுகானுபவங்களை மீட்டு கொடுக்கிறது போடன்ஸீ. போடன்ஸீ தெர்மே (Therme) என்னும் புகழ்பெற்ற ஸ்பா (Spa) இங்கு அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கான ஸானா (Sauna), மஸாஜ் (Massage) மற்றும் வெந்நீர் குளியல் இங்கு பிரசித்தம். இங்கு பலமுறை சென்றிருந்தாலும் ஒவ்வொரு முறையும் தெர்மே புத்துணர்ச்சி தரத்தவறுவது இல்லை.

யூபெர்லிங்கெனில் இருந்து போடன்ஸீ ஏரியை தாண்டி கான்ஸ்டன்ஸ் (Konstanz) என்னும் நகரம் உள்ளது. அங்கு மனைவி குழந்தையுடன் சென்று ஸீ வர்ல்ட் (Sea World) என்னும் மீன் அருங்காட்சியகத்தில் பென்குயின் (Penguin) பார்த்தது மறக்க முடியாதது. யூபெர்லிங்கெனுக்கு அருகில் மீர்ஸ்பர்க்-ல் (Meersburg) மிகவும் பழமை வாய்ந்த கோட்டை (Castle) ஒன்று உள்ளது. பழம்பெருமை மாறாமல் இருக்கும் அந்த கோட்டை காணத் தகுந்த இடங்களில் ஒன்று.

போடன்ஸீ ஏரியில் மீன்களை தவிர்த்து வாத்துகள் அதிகமாக வசிக்கின்றன. ஜெர்மனியின் முக்கிய பறவையான அன்னபறவையையும் (Swan) இந்த ஏரியில் காணலாம். ஒருமுறை குடும்பமாக எரிக்கரையில் அமர்ந்திருந்தோம். கரைக்கு வந்த அன்னபறவை ஒன்று நாங்கள் கொடுத்த ப்ரெட் துண்டுகளை சாப்பிடத்தொடங்கியது. திடீரென்று என் மகள் கையில் இருந்த ப்ரெட் துண்டை கொத்தி தின்றது. அந்நிகழ்வுக்கு பிறகு அன்னப்பபறவையை கண்டாலே என் மகள் அழுதாள்.


யூபெர்லிங்கெ
னுக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நகரம் ஃப்ரிட்ரிச்ஷாஃபென் (Friedrichshafen). இங்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் கார் ட்யூனிங்க் ஷோ (Car Tuning Show), ஏர் ஷோ (Air Show) போன்றவை மிகவும் பிரசித்தம். ஃப்ரிட்ரிச்ஷாஃபென் செல்லும் வழியில் சேலம் (Salem) என்று ஒரு இடம் உள்ளது. முதலில் நம்மூரை போல் இங்கேயும் ஒரு சேலம் என்று ஆச்சர்யப்பட்டபோது, இது சேலம் இல்லை ஸாலம் என்று உச்சரிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.


எதிர்வருபவர் நமக்கு தெரியாதவராக இருந்தாலும் ஹலோ (Hello) சொல்லி மரியாதை செய்யும் வழக்கத்தை இங்கு எல்லோருமே கடைபிடிக்கிறார்கள். முதலில் இதைக் கண்டு வியப்பாக இருந்தாலும், மிகவும் நல்ல பழக்கம் என்று புரிந்ததால் எளிதில் கைக்கொள்ள முடிந்தது. உடல் ஆரோக்கியம் பேணுவதில் ஜெர்மனியர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். நம்மூரில் நாம் மிதிவண்டியை (Cycle) மறந்து வரும் நிலையில் இங்கு ஸைகிளிங்க் (Cycling) முக்கிய பொழுது போக்காக உள்ளது.

வாரம் முழுவதும் நன்கு உழைக்கும் மக்கள், வார இறுதி சனிக்கிழமையில் மது, உணவு என்று கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீட்டுக்குள் அடைந்து விடுகிறார்கள். அன்று உணவகங்களை தவிர்த்து வேறு எந்தக் கடைகளும் திறப்பதில்லை. ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நாடான ஜெர்மனியில், மக்கள் அனைவரும் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதால் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது மிகை இல்லை என்றாலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை கொண்டாடவும் தவறுவது இல்லை.

இங்கு பெரும்பாலும் தாய் மொழியான ஜெர்மன் மொழிதான் பேசப்படுகிறது. இளம் தலைமுறையினர் ஆங்கிலம் பேசுகிறார்கள். இந்தியர்களாகிய நாம் ஜெர்மன் மொழியில் பேசினோம் என்றால், நம்மை தங்கள் சக நாட்டவராகவே பாவிக்கிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக பல நாடுகளுக்கு நாம் சென்று பணியாற்றினாலும், அந்தந்த நாடுகளின் மொழி அறிந்து கொண்டோம் என்றால் நல்ல அங்கீகாரத்தை பெறலாம்.

யூபெர்லிங்கெனுக்கு அருகில் போடன்ஸீ ஏரியை தாண்டி மைனௌ (Mainau) என்று அழைக்கப்படுகிற அழகிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இத்தீவு முழுவதும் மலர்கள் மலர்கள் மலர்கள். காலநிலையினை பொறுத்து மலர் வகைகள் மாறுபடும். இம்முறை ஏப்ரல் (April) மாதத்தில் சென்ற பொழுது தீவு முழுவதும் துலிப் (Tulip) மலர்களால் நிறைந்திருந்தது. சுற்றுலா பயணிகளில் நிறைய இந்திய புது மண தம்பதிகளை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. இத்தீவுக்கு அருகே ரேசெநௌ (Reichenau) தீவு உள்ளது, இந்தத்தீவு காய்கறி தோட்டங்களால் ஆனது.

நமது உணவு முறைக்கும், ஜெர்மனிய உணவு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அரிசி சாதம், அதற்கான குழம்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையாலான உணவு வகைகள் என்பது நமது உணவு முறை. இதை தவிர்த்து பழங்கள் காய்கறிகள் மற்றும் மாமிசம் போன்றவையும் நமது உணவுமுறையில் உண்டு. கிட்டத்தட்ட இந்த வகையில்தான் ஜெர்மனிய உணவு முறை என்றாலும், சாப்பிடும் முறை மிகவும் வித்தியாசப்படுகிறது. பொறித்த/வேகவைத்த மாமிசத்துண்டு, பச்சையான இலை தழை காய்கறிகளாலான சாலட், பழங்கள், ப்ரெட் வகைகள் இதுதான் ஒரு வேளைக்கான உணவு பழக்கம்.
  
பாலின பாகுபாடின்றி தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக்கொள்கிறார்கள். நம்மை போலல்லாமல் எப்பவாவது ஒரு முறை  சாதமும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தினம் உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எனக்கு தெரிந்த அளவில் உருளைக்கிழங்கு ஒரு உலகளாவிய உணவு என்று உரக்கச் சொல்லுவேன்.

நாம் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் இங்கு பெரும்பாலும் குளிர் பானங்கள், பழச்சாறுகள், மற்றும் சோடா கலந்த தண்ணீர் அருந்துகிறார்கள். இதய வடிவிலான பிரெட்செல் (Pretzel) என்று அழைக்கப்படும் ப்ரெட் உணவு குறைந்த விலையில் கிடைக்கும். இந்த உணவு கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் தேசிய உணவு என்று சொல்லத்தக்க வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கப் பெறுகிறது.


ஆண் பெண் பேதமின்றி பள்ளி பருவத்திலேயே மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகிறார்கள். வளர வளர பெரும்பாலானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுவிடுகிறார்கள். 'களவும் கற்று மற' என்று நம் முன்னோர் சொன்னதை இவர்கள் சரியாக கடைபிடிக்கிறார்கள்.

பெரும்பாலும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக குழந்தையுடன் வாழ்கிறார்கள். பாய் ஃப்ரென்ட் (Boy Friend) அல்லது கர்ல் ஃப்ரென்ட் (Girl Friend) என்று அறிமுகம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். திருமண பந்தத்தில் இருந்து விடுபடுவது மிகவும் செலவு வைக்கும் என்பதால் இப்படி ஒரு ஒப்பந்தம். திருமணம் புரிந்த ஜோடிகளை போல பெரும்பாலான இவர்களும் வாழ்வு இறுதி வரை ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது சம்பிரதாயமான முறைகளை தாண்டியும் நம்பிக்கை வெற்றி பெறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

டிஸெம்பர் (December) மாதத்தில் பனி மழை பொழிந்து எங்கும் பனியால் சூழப்பட்டு கருப்பு வெள்ளை காட்சிகளாகவே தெரியும். முதல் பனியில் நடக்கும்பொழுது பஞ்சில் நடப்பது போல் அருமையாக இருக்கும். தொடர்ந்து வரும் நாட்களில் பனி இறுகி பாறைபோல் ஆகிவிட, வழுக்கி விழாமல் செல்ல கவனமாக நடக்க வேண்டும். 

பனி சூழ்ந்த சாலைகளை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சரிசெய்ய தினமும் காலையில் பனிக்கட்டிகளை அள்ளி செல்லும் லாரியை தவறாமல் பார்க்கலாம். வீட்டின் முன்னால் குவிந்திருக்கும் பனியை விலக்கி வழி ஏற்படுத்துவது மக்களின் அன்றாட கடமை ஆகிவிடும். இது போன்ற காட்சிகளை நம்மூரில் கற்பனையில் கூட பார்க்க முடியாது. நம்மூரை போலல்லாமல் இங்கு பெரும்பாலான வீடுகள் பனிக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஓடு வேய்ந்த கூரை வீடுகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. கம்பி தடுப்புகள் இல்லாத வெறும் கண்ணாடியாலான ஜன்னல்கள் மற்றுமொரு சிறப்பு அம்சம்.

இந்திய வெப்ப சூழ்நிலையில் வளர்ந்துவிட்ட நமக்கு, குளிர்காலத்தை இங்கு எதிர்கொள்வது சிரமமான காரியம்தான். கண்களை தவிர அனைத்தையுமே அங்கி, கையுறை, பூட்ஸ் (Boots), தொப்பி போன்ற குளிர் தாங்கும் வெப்ப அணிகலன்களால் மறைத்தாலும் குளிர் உள்ளே போய் எலும்பை குத்துவதை தவிர்க்க முடியாது. வீடுகளில் ஹீட்டர் (Heater) இருப்பதால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம்.

சக குடும்ப உறுப்பினராகவே பாவித்து செல்ல பிராணியான நாய் வளர்ப்பது, கிட்டத்தட்ட எல்லோருமே இங்கு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்ல பிராணிகளுக்கும் அனுமதி உண்டு. பஸ் (Bus) மற்றும் டிரெய்னிலும் (Train) நாய்களை கூட்டி செல்லலாம். மனிதர்களை விட ஒழுக்கமாக அந்த நாய்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வரும் பஸ்ஸும் டிரெய்னும் இன்னுமொரு ஆச்சர்யம்.

கோடைக்காலத்தில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போடன்ஸீ ஏரியில் பயணிப்பது மிகவும் அலாதியான அனுபவம். அமைதியான ஏரி, தெளிவான குளிர்ந்த நீர், மிதமான சூரியன், மெல்லிய காற்று என்று மிகவும் அற்புதமாக இருக்கும். தெளிந்த வானிலை அமைந்த தருணங்களில் ஏரிக்கு அந்தப்புறம் பனியால் சூழப்பட்ட ஆல்ப்ஸ் (Alps) மலை தொடரின் காட்சி சொல்லொண்ணா அழகைத் தரும்.

தேனிலவு செல்வதற்கு மிகவும் சிறந்த இடம் யூபெர்லிங்கென். மிக அருகாமையில் ஸ்விட்சர்லான்ட் மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகள் அமைந்துள்ளதால், ஆல்ப்ஸ் மலைசிகரங்களில் அமைந்த மலைவாசத்தலங்களுக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் போடன்ஸீரிக்கரையில் அமர்ந்து உலகை மறந்து பொழுதுபோக்க மிகவும் அருமையான இடம்.



மாலை வேளைகளில் போடன்ஸீரிக்கரையில் காலாற நடந்து செல்வது மிகவும் உன்னதமான அனுபவம். ஒவ்வொரு முறை நான் நடைபயணிக்கும் பொழுதும் என் உதடுகள் தானாகவே முணுமுணுக்கும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!".

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பாரிஸ் (Paris) நகர வீதிகளில்...

பணி நிமித்தமாக கடந்த 2012 ஆம் ஆண்டு முழுவதும் ஜெர்மனி (Germany) நாட்டில் யூபெர்லிங்கென் (Ueberlingen) என்னும் இடத்தில் வசிக்க நேரிட்டது. யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது.

ஜெர்மனி உட்பட 26 யுரோப்பியன் (European) நாடுகள் இணைந்து, தமக்கிடையில் பயணம் செய்வதற்காக, பொதுவான ஒற்றை அனுமதி (visa) கொள்கையை வகுத்துள்ளன. இந்த கொள்கையின் கீழ் வரும் நாடுகள் அமைந்த பகுதி செங்கென் (Schengen) பகுதி என்று அழைக்கப்படுகிறது. ஜெர்மனியில் பணி புரிவதற்கான அனுமதி சீட்டு மூலம் செங்கென் நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதால், இரண்டாவது சுற்றுலா பயணமாக ஃபிரான்ஸ் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஃபிரான்ஸ்

அக்டோபர் 6,7,8 - 2012

முதல் நாள்

இம்முறை எங்களுடன் (நான், எனது மனைவி மற்றும் எங்கள் 11 மாத பெண் குழந்தை), நண்பன் நடராஜ் குடும்பம் (அவன், அவன் மனைவி மற்றும் அவர்கள் 10 மாத பெண் குழந்தை), நண்பர்கள் சக்ரவர்த்தி, ரவிஷங்கர் மற்றும் மோன்ராஜ் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

முந்தைய நாள் (அக்டோபர் 5) இரவு, யூபெர்லிங்கெனிலிருந்து ட்ரெயின் (train) மூலமாக பக்கத்து ஜெர்மன் நகரமான உல்ம் (Ulm) வந்தோம். உல்மிலிருந்து சி.என்.எல் (City Night Line) ட்ரெயினில் இரவு முழுவதும் பயணம் செய்து அடுத்த நாள் காலை பாரிஸ் ஈஸ்ட் (Paris Est) வந்தடைந்தோம்.

உலகின் பல இன மக்களும் பாரிஸில் வாழ்கிறார்கள் என்பதை அந்நகரத்தில் கால் பதித்தவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. பாரிஸ் மெட்ரோ (Metro) ட்ரெயின் பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும், அதை அனுபவித்பொழுது எவ்வளவு நேர்த்தி என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. மொத்த நகரத்தையும் 5 மண்டலங்களாக பிரித்து 16 வகையான மெட்ரோ வழித்தடங்கள் அமைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தடத்திற்கும் ஒரு தடம் எண் மற்றும் வித்தியாசமான வண்ணம் கொண்டு மெட்ரோ வரைபடத்தில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு நாளைக்கு 45 லட்சம் பயணிகளை பாரிஸ் மெட்ரோ ஏற்றிச் செல்கிறது என்று விக்கிபீடியா சொல்லும் செய்தி உண்மைதான் என்பதை உணரமுடிந்தது.

லௌரெ மியூஸியம் (Louvre Museum) உலகின் மிகப்பெரும் அருங்காட்சியங்களுள் ஒன்று, ஸீன் (Seine) நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு கிட்டதட்ட 35000 கலை பொருட்கள் உள்ளன. ஒரு வருடத்தில் கிட்டதட்ட ஒரு கோடி பேர் வந்து செல்லும் மியூஸியம் என்பதன் மூலம், அதிக உலக மக்கள் விரும்பும் மியூஸியமாக இது திகழ்கிறது.

எங்களுடைய முதல் இலக்கு லௌரெ மியூசியம், மெட்ரோ ட்ரெயினில் பயணம் செய்து மியூஸியம் வந்தடைந்தோம். முக்கிய நுழைவாயிலுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள முழுவதும் கண்ணாடியிலான பிரமிட் (pyramid) வழியே உள் நுழைந்தோம். அனுமதி சீட்டு பெற்று கொண்டபின் வரைபடத்தின் உதவியுடன் அருங்காட்சியகத்தை கண்டுகளிக்க சென்றோம். எகிப்டியன் (Egyptian), கிரேக்கம் (Greek), ரோமன் (Roman) என்று 8 வகையாக வகைப்படுத்தி வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியங்களை கண்டுகளிக்க ஒரு நாள் போதாது என்பது நிதர்சனம் என்றாலும் முக்கியமான கலை பொருட்களை எல்லாம் முடிந்தவரை கண்டுகளித்தோம்


அந்த அருங்காட்சியகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது மோனாலிஸா (Monalisa) ஒவியம் முன்புதான். என்னதான் சிறப்பு அம்சங்கள் வாய்ந்தது என்று சொல்லப்பட்டாலும் அதைவிட கண்கவர் ஒவியங்களை அங்கு காண முடிந்தது. கலைபொருட்களை கண்டு கண்கள் விரிந்து, யம் நிறைந்து, மனம் மகிழ்ந்தாலும் ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு கால்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இத்தோடு முடித்துகொள்வது என்று முடிவு செய்தோம். மோனாலிஸா புகைப்படம் மற்றும் சில நினைவு பொருட்கள் வாங்கிக்கொண்டு மியூசியம் விட்டு வெளியே வந்தோம்.

மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. பாரிஸ் நகரத்திலிருக்கும் முக்கியமான இடங்களை பார்க்க முடிவெடுத்து மீண்டும் மெட்ரோவில் பயணமானோம். மழை தூறலுக்கிடையில் Arc de Triomphe (Triumphal Arch), Place de la Concorde போன்ற இடங்களை கண்டு களித்தோம். மேலும் மழையில் சுற்றிக் கொண்டிருப்பது குழந்தைக்கு நல்லதல்ல என்று எண்ணிய நண்பன் நடராஜ் ஹோட்டல் (Hotel) செல்ல முடிவெடுத்து, நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த ஹோட்டல் அமைந்திருந்த இடமான டார்சி (Torcy) நோக்கி கிளம்பினான். என் குழந்தை இன்னும் உற்சாகம் குறையாமல் இருக்க நாங்கள் பிற நண்பர்களுடன் ஐஃபில் டவர் (Eiffel Tower) இரவில் பார்க்க எண்ணி பயணமானோம். இரவு விளக்குகளுடன் ஒளிர்ந்த ஐஃபில் டவரை சிறிது நேரம் கண்டு களித்து விட்டு, மழை மிகவும் வலுத்ததால் ஹோட்டல் செல்வது என்று முடிவெடுத்து கிளம்பினோம்.

காலையில் இருந்து சரியாக சாப்பிடாததால் ஏதாவது இந்திய உணவகம் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றோம். ஒரு சீன உணவகம் கண்ணில்பட அங்கு சென்று நூடுல்ஸ் (Noodles), கொஞ்சம் சாதம், மற்றும் கோழி வகையறாக்களை சாப்பிட்டுவிட்டு டார்சி வந்தடைந்தோம். அடுத்த நாள் செல்ல வேண்டிய டிஸ்னி லாண்ட் (Disney Land) ஹோட்டல் இருக்கும் இடத்தில் இருந்து மிகவும் பக்கம் என்பதால் நிதானமாக தூங்கி கிளம்பி செல்லலாம் என்பதால் நிம்மதியாக தூங்கினோம்.

இரண்டாவது நாள்

ஹோட்டலிலிருந்து டிஸ்னி லாண்ட் பக்கம் என்றாலும் தீம் பார்க் (theme park) செல்லும் உற்சாகத்தில் அனைவரும் காலையிலேயே எழுந்து சரியாக எட்டு மணி அளவில் தயாராகி, அந்த ஹோட்டலிலேயே சிற்றுண்டி முடித்து 9 மணி அளவில் டிஸ்னி லாண்ட் அடைந்தோம். ஏற்கனவே நண்பன் சக்ரவர்த்தி ஆன்லைன்-னில் (on-line) டிக்கெட் (ticket) முன்பதிவு செய்திருந்ததால் காத்திருப்பு ஏதுமின்றி டிஸ்னி பார்க் (park) சென்றோம்.

நாங்கள் சென்றிருந்தபொழுது 20-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் ஹல்லோவீன் (Halloween) விழா கொண்டாட்டம் என்று களை கட்டியது டிஸ்னி லாண்ட். ஹல்லோவீன் திருவிழாவின் பிண்ணனி சரியாக தெரியவில்லை என்றாலும், காணுமிடம் எல்லாம் பூசனிக்காயை வைத்து கொண்ட்டாடுவதை பார்த்த பொழுது பொங்கல் போன்ற ஒருவகையான திருவிழா என்ற எண்ணம் வந்து சென்றது.  

அட்வென்சர் லாண்ட் (Adventure Land) , ஃப்ராண்டியர் லாண்ட் (Frontier Land) , டிஸ்கவரி லாண்ட் (Discovery Land), ஃபான்டஸி லாண்ட் (Fantasy Land) என்று 4 பகுதியாக பிரிக்கப்பட்ட டிஸ்னி பார்க்கில், முதலில் எங்கு செல்வது என்ற குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தபொழுது அலங்கார ஊர்தி ஒன்றில் மிக்கி (Mickey), மின்னி (Minnie) போன்ற கார்டூன் (cartoon) பாத்திர வேடமணிந்தவர்கள் பாட்டுப்பாடி ஆடிக்கொண்டு வந்தனர். ஒட்டுமொத்த சுற்றுலாபயணிகளும் அங்கு கூடிவிட, அந்த கூட்ட நெரிசலில் நண்பர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்துவிட நாங்கள் தனியாக சுற்ற கிளம்பினோம்.

நேராக ஸ்லீபிங்க் பியூட்டி கோட்டை (sleeping beauty castle) நோக்கி சென்றோம். அதனுள் சென்று பார்த்துவிட்டு, "சின்ட்ரெல்லா மற்றும் ஏழு குள்ளர்கள்" கதை உணர்த்திடும் ஒவியம் மற்றும் சிலைகள் அடங்கிய குகைக்குள் பொம்மை ட்ரெயின் மூலம் சென்று ரசித்தோம். கோட்டையை விட்டு வெளியே வர, அங்கே மிக்கியுடன் சேர்ந்து நடன கலைஞர்கள் பலர் ஹல்லோவீன் (Halloween) திருவிழா கொண்டாட்டமாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்த என் குழந்தை அம்மாவின் கையில் இருந்தே ஆடத்தொடங்க, என் மனைவி குழந்தையை கீழே விட்டார். என் குழந்தை உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்க மக்கள் கூட்டம் எங்களை வேடிக்கை பார்க்க தொடங்கியது. சிறிது நேரம் அங்கு களித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம்.

அடுத்து மிக்கி மவுஸ் (mouse) கார்டூன் ஒடிக்கொண்டிருந்த அரங்கத்திற்குள் நுழைந்தோம். சிறிது நேரம் கார்டூன் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஸ்டுடியோ-விற்குள் நுழைந்து மிக்கி மவுஸ் வேடமணிந்ததவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அட்வென்சர்லாண்ட்டை வேடிக்கை பார்த்துவிட்டு, ஃபான்டஸிலாண்ட்டை கண்டுகளித்துவிட்டு டிஸ்கவரிலாண்ட் வந்தடைந்தோம். பசி வயிற்றை கிள்ளத்தொடங்க அங்கிருந்த உணவகத்திற்குள் நுழைந்தோம். அங்கு, பிரிந்து சென்ற நண்பர்கள் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். நாங்களும் சில பர்கெர் (burger) மற்றும் ஃப்ரெஞ்ச் ஃப்ரெஸ் (French fries) வாங்கிக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத்தொடங்கினோம். குழந்தைக்கு பால் பாட்டில் கொடுத்தவுடன் ஜாலியாக பால் குடித்துக்கொண்டிருந்தது.

டிஸ்கவரிலாண்டில் இருந்த ஸ்பேஸ் மௌண்டைன் (space mountain) என்னும் அட்வென்சர் (adventure) பயணத்திற்கு ஏற்கனவே சென்று வந்த நண்பர்கள் எங்களையும் செல்ல வற்புறுத்தினர். அங்கு நல்ல கூட்டம் இருந்ததால் டிஸ்னி ஸ்டுடியோ (studio) செல்வது என்று முடிவு எடுத்து அங்கு சென்றோம்.

டிஸ்னி ஸ்டுடியோ-வில் கார்டூன் படங்கள் எடுப்பது குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் ஒரு தியேட்டர் (theater) தவிர்த்து பல அட்வென்சர் விளையாட்டுகள் இருந்தன. குழந்தையை வைத்துக்கொண்டு கடினமான விளையாட்டுகளுக்கு செல்வது உசிதமல்ல என்பதால், விளையாட்டுகளை தவிர்த்துவிட்டு திரைப்படம் எடுக்கும் செயல் முறை விளக்கம் நிறைந்த ஹாலிவுட் (Hollywood) ஸ்டுடியோ-விற்குள் ட்ரெயின் மூலம் சுற்றினோம். பெருவெள்ளம் வருவது, தீ கொளுந்துவிட்டு எரிவது, கார்கள் (cars) ஒன்றோடு ஒன்று மோதி விழுவது, டைனோசர் (Dinosaur) சிற்பங்கள் என்று மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது அந்த பயணம்.

டிஸ்னி ஸ்டுடியோ முடித்து டிஸ்னி வில்லேஜில் (village) சிறிது ஷாப்பிங் (shopping) செய்து விட்டு, மீண்டும் டிஸ்னி பார்க் வந்தோம். இருள் கவியும் நேரம் என்பதால் அங்கு கூட்டம் கொஞ்சம் குறைய, குழந்தையை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நானும் என் மனைவியும் ஸ்பேஸ் மௌண்டைன் சென்றோம். மிகவும் த்ரில்லிங்கான (thrilling) அனுபவமாக அமைந்த பயணத்தில், அலறி அலறி நாக்கு வறண்டு போனாலும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
மணி எட்டாகி விட்டது, கிளம்பலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபொழுது, ஸ்லீபிங்க் பியூட்டி கோட்டை முன் லேசர் (laser) காட்சி நடக்கும் என்பதை அறிந்து அங்கு சென்றோம். 9 மணி அளவில் லேசர் காட்சி என்றறிந்து, தவறவிட்ட இடங்களை பார்க்க கிளம்பினோம். மர வீடு, பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் (Pirates of the Caribbean) கப்பல், அலாவுதீன் குகை என்று சுற்றிவிட்டு மீண்டும் கோட்டை முன் வரவும் லேசர் காட்சி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. டிஸ்னியின் எல்லா கார்டூன் பாத்திரங்களும் லேசர் காட்சியில் வந்து நம்மை குதூகலப்படுத்த அரைமணி நேரம் அற்புதத்தை காண முடிந்தது. காட்சி முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்ல, நாங்கள் வெளியே செல்ல மனமின்றி மெதுவாக நகர்ந்தோம். முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்த டிஸ்னி லாண்டின் அழகை கண்டுகளித்தபடியே வெளியே வந்தோம்.

டிஸ்னி லாண்ட் முழுவதும் அனுபவிக்க ஒருநாள் போதாது என்றாலும், ஒரு நாள் அனுபவத்தை எழுத ஒரு பக்கம் போதாது என்பதும் உண்மை. முதல்நாள் போல் அல்லாமல், இன்று மழை பெய்யாமல் இருந்தது மிகவும் உதவியாக அமைந்தது. என்னுடைய இரு குழந்தைகளுக்கும் (குழந்தையாக மாறிய என் மனைவி மற்றும் எங்கள் பெண்) டிஸ்னி லாண்ட் மிகவும் பிடித்து போனது. மிகவும் அசதியாக உனர்ந்ததால் ஹோட்டல் வந்தது, தூங்கியது, அடுத்தநாள் காலை எழுந்தது எல்லாம் கணப்பொழுதில் நடந்ததுபோல் இருந்தது.

மூன்றாவது நாள்

1889-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் புரட்சியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட முழுவதும் இரும்பிலான டவர்தான் ஐஃபில் டவர். இந்த டவரை வடிவமைத்து கட்டிய குழுமத்தின் தலைமை எஞ்ஜினியர் (Engineer) குஸ்டவ் ஐஃபில்-யை (Gustave Eiffel) குறிக்கும் வகையில் பெயர் அமைந்துள்ளது. 324 மீட்டர் (1063 அடி (feet)) உயரம் கொண்ட இந்த கட்டிடம் உலகத்தின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று. மூன்று தளங்கள் மற்றும் 9 லிப்ட் (lift) கொண்ட இந்த டவர் மொத்தம் 10,000 டண் (tonne) எடை கொண்ட உலோகங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த டவர் பாரிஸ் நகரத்திற்கும் ஃபிரான்ஸ் நாட்டிற்கும் ஒர் தனித்துவமான அடையாளம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

ஐஃபில் டவர் செல்வதுதான் இன்றைய திட்டம். நேற்று போல் இல்லாமல் காலையிலேயே மழை பெய்து கொண்டிருந்ததால் நிதானமாக கிளம்பி, அறையை காலிசெய்துவிட்டு, மண்டலம் 5-ல் இருந்து மண்டலம் 1-ற்கு வந்தோம். அங்கு பாரிஸ் ஈஸ்ட் ரெயில்வே நிலையத்தில் குழந்தைக்கு தேவையான பால் முதலியன எடுத்துக்கொண்டு பிற பொருட்களை பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்தோம். பின்பு அங்கிருந்து ஐஃபில் டவர் அடையும் பொழுது சரியாக காலை மணி 11 ஆகிவிட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த அனுமதி சீட்டின்படி மதியம் 1 மணிக்கு டவர் மேல் செல்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மழை மேகம் சூழ்ந்து இருந்ததால், ஐஃபில் டவர் உச்சி பனி புகையால் மறைக்கபட்டிருந்தது. டவரின் கீழே நின்று அதன் பிரம்மாண்டத்தையும், வரலாற்று பின்ணணியையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தோம். சில பல புகைப்படங்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அங்கு குழுமியிருந்த பல நாட்டு சுற்றுலா பயணிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் மகள் மனிதர்களை விட்டுவிட்டு அங்கிருந்த புறாக்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அரை மணிநேரம் முன்னதாகவே டவரில் பயணிப்பதற்கு சென்றோம்.

லிப்ட் மூலம் இரண்டாவது தளத்திற்கு வந்தோம். அங்கிருந்து வேறொரு லிப்ட் மூலம் உச்சியை அடைந்தோம். பலமாக மழை பெய்து கொண்டிருந்ததால், வெளியே செல்லாமல் உள்ளேயே அமைந்திருந்த கண்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். மகள் உடனிருக்க குஸ்டவ் ஐஃபில் விஞ்ஞானி தாமஸ் எடிஸனுடன் அந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்த காட்சி அங்கு மெழுகு சிலையாக வடித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஐஃபில் டவரின் வரலாறு படங்களாகவும் குறிப்புகளாகவும் கொடுக்கப்பட்டிருந்தன. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியமான நகரங்கள் அங்கிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்கிற தகவலும் பொறிக்கப்பட்டிருந்தது. டவர் அமைந்து பல வருடங்களுக்கு பிறகு உச்சியில் ரேடியோ ஆன்டெனா (Radio antenna) அமைக்கப்பட்ட தகவலும் தெரிந்து கொள்ள முடிந்தது. 

பலமான மழையின் காரணமாக பனி மூட்டம் விலகி விட மேலிருந்து கீழே நகரத்தின் அழகை பறவை கோணத்தில் பார்க்க முடிந்தது. கட்டிடங்கள் நிரம்பிய நகரத்தின் ஊடே ஓடிக்கொண்டிருக்கும் ஸீன் நதி என்று மிகவும் ரம்மியமான காட்சி காணக்கிடைக்காத அற்புதம். குழந்தையுடன் மனைவியை உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு மழையை பொருட்படுத்தாமல் நண்பர்களுடன் வெளியே வந்தேன். திறந்தவெளி உச்சியில் நின்று கொண்டு நகரத்தை காண்கையில் சிலிர்ப்பாக உணர்ந்தேன். சரியாக 4 வருடங்களுக்கு முன்பு தாஜ் மஹால் உள்ளே இருந்தபொழுது உணர்ந்த அதே சிலிர்ப்பு; இது போன்ற உன்னத உணர்வை உலக அதிசயங்கள் தர தவறுவதில்லை என்பது நான் உணர்ந்த உண்மை. காற்றுடன் கூடிய மழை, ஐஃபில் டவரின் உச்சி, அடடா, வாழ்க்கையில் இன்னொருமுறை வாய்க்குமா இப்படியொரு தருணம், அட்டகாசம்! 

மழை நின்று வானிலை தெளிவாக, உச்சியிலிருந்து கீழே இரண்டாவது தளத்திற்கு வந்தோம். அங்கிருந்த ரெஸ்டாரென்டில் (restaurant) சிறிது பசியாறிவிட்டு, அத்தளத்திலிருந்து நகரின் அழகை ரசித்தோம். புகைப்பட ஆர்வலரான நண்பன் மோஹன் புகைப்படங்களை சுட்டு தள்ள, நண்பன் ரவி மாடலாக (model) மாறி போஸ் (pose) கொடுத்துக்கொண்டிருந்தான். அங்கிருந்து கீழே வந்து சேரும் பொழுது 3 மணி ஆகிவிட்டிருந்தது. ஐஃபில் டவரின் உருவம் ஒத்த நினைவு பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.  

ஸீன் நதியில் படகு சவாரி மூலம் நகரை வலம் வரலாம் என்பது ஏற்கனவே இருந்த திட்டம். காலநிலை எந்நேரமும் மோசமாகலாம் என்பதாலும், கடந்த 3 தினங்களாக சரியான சாப்பாடு இல்லாததாலும், அந்த திட்டத்தை கைவிட்டு, சரவண பவன் செல்வது என்று முடிவு செய்தோம். மொபைல் கூகுள் மேப் (mobile Google map) மூலம் சரவண பவன் வழி கண்டுபிடித்து மெட்ரோ மூலம் அங்கு சென்றோம்.
பொன்னி சாதம், சம்பார், ரசம், பாயாசம், பொரியல் என்று அதி அற்புதமான உணவு உண்டோம். இரவு உணவிற்கு இட்லி, தோசை என வகையறாக்களை பார்சல் (parcel) வாங்கிக்கொண்டோம். மீண்டும் பாரிஸ் ஈஸ்ட் ரெயில்வே நிலையம் வந்து, பாதுகாப்பில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சரியாக இரவு 7:30 மணிக்கு ட்ரெயின் தளத்திற்கு வந்தோம். 8 ணிக்கு சி.என்.எல் ட்ரெயின் பிடித்து மீண்டும் வசிப்பிடமான யூபெர்லிங்கென் நோக்கி பயணமானோம்.
 
3 நாள் பாரிஸ் பயணத்தில், உலக அதிசயத்தை தவிர்த்து மிகவும் கவர்ந்த விஷயம் மெட்ரோ ட்ரெயின். 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம், மற்றும் ஆண்டுதோறும் பலலட்சம் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்யும் நகரமான பாரிஸில், தேவையை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு தடத்திலும் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ட்ரெயின் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நேர்த்தியான மெட்ரோ ட்ரெயினை அனுபவித்தபொழுது, ஏனோ நம் நாடு மனதில் தோன்றி மறைந்தது. நம் நாட்டில் பெருகி வரும் மக்கள்தொகைதான் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை என்பது பொதுவான வாதம். யுரோப்பிய நாடுகளின் ட்ரெயின் சேவையை பார்க்கும்பொழுது, ரெயில்வே சேவையில் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக விளங்கும் நமது நாட்டிலும் இவ்வகையான திட்டங்கள் சாத்தியமே என்று தோன்றியது. நமது ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு விரைந்து செயல்படவேண்டிய தருணம் இது. பயணங்கள் எளிதானால்தான் வாழ்க்கைத்தரம் உயரும்.

வெள்ளி, 31 மே, 2013

ஆல்ப்ஸ் (Alps) மலை காற்றினிலே ...


பணி நிமித்தமாக கடந்த 2012 ஆம் ஆண்டு முழுவதும் ஜெர்மனி (Germany) நாட்டில் யூபெர்லிங்கென் (Ueberlingen) என்னும் இடத்தில் வசிக்க நேரிட்டது. யூபெர்லிங்கென் நகரம் தென்மேற்கு ஜெர்மனியில் பேடன்-வுர்ட்டேம்பெர்க் (Baden-Wuerttemberg) மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் (Lake Constance) அமைந்துள்ளது. பேடன்-வுர்ட்டேம்பெர்க் மாநிலம் ஜெர்மனி சுவிட்சர்லாந்து (Switzerland) எல்லையில் அமைந்துள்ளபடியால் முதல் சுற்றுலா பயணமாக சுவிட்சர்லாந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து

செப்டம்பர் 1,2,3 - 2012

முதல் நாள்

நான், எனது மனைவி மற்றும் எங்கள் 10 மாத பெண் குழந்தை ஆகிய மூவரும் காலை 6 மணி யூபெர்லிங்கெனிலிருந்து ட்ரெயின் (train) மூலமாக சஃபாசென் (Schaffhausen) வந்தடைந்தோம். எங்களுடைய முதல் இலக்கு மௌண்ட் டிட்லிஸ் (Mt.Titlis). சஃபாசென்னிலிருந்து சூரிச் (Zurich), லுசெர்ன் (Luzern) வழியாக 10 மணி அளவில் எங்கெல்பெர்க் (Engelberg) வந்தடைந்தோம். எனக்கு ஏற்கனவே பனி பரிச்சயம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. என் மனைவி முதல் முறை பனி மலையில் நடை பழக மிகுந்த ஆவலுடன் இருந்தார். எங்கெல்பெர்கிலிருந்து கிட்டத்தட்ட அரை மணி நேர ரோப் கார் (rope car) பயணத்தில் டிட்லிஸ் சிகரத்தை அடைந்தோம்.

பஞ்சு பொதி போன்று பனி சூழ்ந்திருந்த ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான டிட்லிஸ் சிகரத்தை கண்டவுடன் என் மனைவியின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிவதை நான் பெருமையுடன் பார்க்க, எங்கள் குழந்தை சிரிக்க ஒரு அற்புதமான அனுபவத்திற்கு தயாரானோம். குழந்தையை என் கையில் ஒப்படைத்துவிட்டு கால் முட்டு அளவு பனியில் இறங்கி என் மனைவி விளையாடிக்கொண்டிருக்க நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். மலை உச்சியில் இருந்து அடிவாரத்தை பார்க்க அமைக்கப்பட்ட டவர் (tower), அதிகமான பனி பொழிவின் காரணமாக முழுவதும் பனியால் சூழப்பட்டு இருந்தது. பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் தடை செய்ய பட்டிருந்தன. சுவிட்சர்லாந்த்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகமாக வருகை புரிவார்கள் எனபதை உணர்த்தும் வகையில் ஷா-ருக்-கான் கஜோல் ஜோடி கட்டவுட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தாயார் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த மகள், தானும் கலந்துகொள்ள என் பிடியில் இருந்து நழுவ எத்தனித்து கொண்டிருந்தாள். அவளை சிறிது நேரம் தாயிடம் ஒப்படைத்து விட்டு என் கேமரா கண்களால் படமெடுக்க தொடங்கினேன். குழந்தை பனியை தொட்டு பார்த்து குதூகலித்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென்று பனிப்புயல் அடிக்கத் தொடங்க மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு இருந்த கட்டிடதிற்குள் நுழைந்தேன்.

அங்கு இருந்த போட்டோ ஸ்டுடியோ-வில் (photo studio) வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தபொழுது, கிரிக்கெட் வீரர் சேவாக் அவர் மனைவியுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் பாரம்பரிய உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில் பட்டது. அதுபோல் புகைப்படம் எடுக்க எண்ணி ஸ்டுடியோ-விற்குள் நுழைந்தோம். புகைப்படத்திற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்றாலும் அந்த பாரம்பரிய உடையால் ஈர்க்கப்பட்டு புகைப்படம் எடுக்க முடிவு செய்தோம். அங்கிருந்த உதவியாளர் உதவியுடன் நான், என் மனைவி மற்றும் குழந்தை ஆடை அணிந்து புகைப்படத்திற்கு தயாரானோம். புகைப்படக்காரர் அறிவுரைப்படி என் மனைவி அமர்ந்திருக்க, நான் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்தேன். குழந்தை வழக்கம்போல் அடம்பிடிக்க, முடிவில் அம்மா குழந்தையை வைத்துக்கொள்ள நான் அருகில் அல்ப்ஹொர்ன் (Albhorn) என்னும் மரத்தாலான இசைக்கருவி ஏந்திக்கொண்டிருக்கும் வகையில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

பனிபொழிவு நின்றுவிட, மேலும் பனியில் நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தோம். மீண்டும் ரோப் கார் மூலம் கீழிறங்கி மலை அடிவாரத்தை எட்டுகையில் நேரம் மாலை 5 மணி ஆகி இருந்தது. பன், பிரட் வகையறாக்களை சாப்பிட்டு மதிய உணவை தவிர்த்ததால் மிகவும் பசியாக உணர்ந்தோம். நல்ல வேளையாக ஒரு நடமாடும் இந்திய உணவகம் கண்ணில் பட்டது. இட்லியை பார்த்தவுடன் பசி அதிகரிக்க இட்லி வாங்கி சாப்பிட்டோம். குழந்தைக்கு சிறிது இட்லி ஊட்டியவுடன் உற்சாகமான குழந்தை தரையில் விளையாட ஆரம்பிக்க, நாங்கள் குளிருக்கு இதமாக மசாலா டீ (tea) அருந்தினோம்.

முதல் நாள் பயணம் வெற்றிகரமாக முடிய, மீண்டும் லுசெர்ன் வழியாக பெர்ன் (Bern) வந்து, அங்கிருந்து இன்டர்லேகன் (Interlaken) வந்தடைந்தோம். அங்கு தங்குவதற்கு நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த வீட்டின் முதலாளி, ஸ்டேஷன் வந்து அவரது காரில் அழைத்து சென்றார். அந்த வீடு ப்ரியன்ஸ் ஏரிக்கரையில் (Lake Brienz) அமைந்திருந்தது. வீடிற்கு முன் அருமையான தோட்டம் அமைந்திருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் தோட்டத்தில் அமர்ந்தபடி ஏரியை ரசித்துக்கொண்டிருந்தது இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

இரண்டாவது நாள்

டாப் ஆஃப் ஈரோப் (Top of Europe) என்று அழைக்கப்படும் யுங்க்ப்ராயொக் (Jungfraujoch) பனி மலை சிகரத்திற்கு செல்வதுதான் இன்றைய திட்டம். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி இன்டர்லேகன் வந்தோம். அங்கிருந்து டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழி கிரின்டெல்வேல்ட் (Grindelwald), இன்னொரு வழி லாடெர்ப்ருன்னேன் (Lauterbrunnen). கிரின்டெல்வேல்ட் வழியாக செல்வது என்று முடிவு செய்து ட்ரெயினில் கிளம்பினோம்.

கிரின்டெல்வேல்ட் வரை சாதாரண ட்ரெயினில் சென்று, பின்பு அங்கிருந்து சிறப்பு மலை ட்ரெயின் மூலம் டாப் ஆஃப் ஈரோப் நோக்கி பயணமானோம். வழக்கமான ரயில் தடத்தில் ட்ரெயின் சக்கரம் செல்வதற்க்காக ஒன்றோடு ஒன்று இணையாத இரண்டு இரும்பிலான தடங்கள் இருக்கும். ஆனால் இந்த மலை ட்ரெயின் செல்வதற்கான பாதையில் இரு தடங்களுக்கு மத்தியில் ட்ரெயினில் அமைந்துள்ள பல்சக்கரங்களுக்காக ஒரு தடமும் உள்ளது. இந்த தடம் மலையில் ஏறும்பொழுது ட்ரெயினுக்கு தேவையான பிடிமானத்தை கொடுக்கும். போகும் வழியில் பனியால் சூழ்ந்த மலைகளை ரசிப்பதற்காக ஆங்காங்கே ட்ரெயின் 5 நிமிடம் நின்றபடியே சென்றுகொண்டிருந்தது. மனைவியும் குழந்தையும் பனியை ரசித்துக்கொண்டிருக்க, டாப் ஆஃப் ஈரோப் செல்வதற்கான இந்த பாதையை எப்படி அமைத்திருப்பார்கள் என்று நான் வியந்து கொண்டிருந்தேன். சரியாக காலை 10:30 மணி அளவில் சிகரத்தை அடைந்தோம்.

நாங்கள் சென்ற பொழுது அந்த இடத்திற்கு ட்ரெயின் சேவை தொடங்கப்பட்டு 100 வருடம் நிறைவு செய்ததற்கான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. நாங்கள் அனுமதி சீட்டுடன் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் அங்கு சென்தற்கான தேதியுடன் கூடிய அடையாளத்தை பதிவு செய்து கொண்டோம்.  

முதலில் பனியில் செதுக்கப்பட்ட சிலைகளை கொண்ட பனி மாளிகைக்கு சென்றோம். வழுக்கி விழுவதற்க்கு ஏதுவான பனியால் அமைக்கப்பட்ட தரையில் மிகவும் கவனமாக நடந்து பனிச்சிலைகளை கண்டு ரசித்தோம். அதன் பிறகு கட்டிடத்திற்க்கு வெளியே வந்து பனியில் விளையாட தொடங்கினோம். மைனஸ் 20 டிகிரி சென்ற்றிக்ரேட் (Degree Centigrade) கால நிலையில் குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச, அணிந்திருந்த குளிர் தாங்கும் உள்ளாடைகள் சட்டை ஸ்வெட்டர், ஜாக்கெட் இவை எல்லாவற்றையும் மீறி லேசான வலியினை இதயத்தில் உணர முடிந்தது. குழந்தையை அங்கு அதிக நேரம் வைத்துக்கொண்டிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த என் மனைவி கட்டிடத்திற்க்குள் சென்றுவிட நான் மட்டும் பனிமலையில் பிற சுற்றுலா பயணிகளுடன் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தேன். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டது போன்ற பெருமித உணர்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அதன் பிறகு அங்கு இருந்த சீன ரெஸ்டாரென்டில் (Chinese restaurant) ஒரு மசாலா டீ குடித்துவிட்டு 3571 மீட்டர் (meter) - 11782 அடி உயரத்தை குறிக்கும் டவருக்கு லிப்டில் (lift) சென்றோம். அங்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே வந்தோம். என்னதான் சுவிட்சர்லாந்து அதிக செலவு வைக்கும் சுற்றுலாதலம் என்றாலும் இந்தியர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடம் என்பதை அங்கேயும் உணர முடிந்தது. பாலிவுட் ரெஸ்டாரென்ட் (Bollywood Restaurant) என்ற பெயரில் ஒரு உணவருந்தும் இடம் டாப் ஆஃப் ஈரோப்-ல் அமைந்துள்ளது.


இந்தியர்களை தவிர்த்து சீன மக்களையும் அங்கு நிறைய காண முடிந்தது. அங்கு சென்று வந்ததற்கான நினைவாக சில நினைவு பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கு வந்திருந்த இந்தியாவை சேர்ந்தவர்களிடம் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டு மீண்டும் அடிவாரத்தை நோக்கி ட்ரெயினில் கிளம்பினோம்.

இம்முறை லாடெர்ப்ருன்னேன் வழியாக இன்டர்லேகன் வந்தடைந்தோம். மாலை 5:30 மணி அளவில் வந்து விட்ட படியால் அந்த நகரத்தை சுற்ற கிளம்பினோம். ஜெர்மனியில் பெரும்பாலான மக்கள் ஜெர்மன் மொழியில்தான் பதிலளிப்பார்கள். ஜெர்மனி போல் அல்லாமல் அங்குள்ள மக்களிடம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிந்தது. நகர்வலம் முடிந்த பிறகு லிட்டில் இந்தியா (Little India) என்னும் இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கியிருந்த வீட்டுக்கு வந்தடைந்தோம். அடுத்தநாள் செல்லவேண்டிய இடங்களை திட்டமிட்டபடியே தூங்கிப்போனோம்.

மூன்றாவது நாள்

மூன்றாவது நாள், தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு இன்டர்லேகன் நகரத்திற்கு வந்தோம். குழந்தைக்கு தேவையான பொருட்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பிற பொருட்களை ரயில்வே நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துக்கொண்டு ட்ருமெல்பெக் (Trummelbach) நீர்வீழ்ச்சி நோக்கி ட்ரெயினில் பயணமானோம்.இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் பாறைகளுக்கு உள்ளே பாயும் வகையில் அமையப் பெற்றது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எதுவும் தெரியாது. பாறைகள் ஊடே பயணித்து மலை உச்சி வரை சென்று பார்க்கும் வகையில் படிகள் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாறையில் மோதி விழுவதால் எழும் கடும் இரைச்சல் சத்தம் குழந்தைக்கு ஆபத்து என்று அனுமதிக்க மறுத்து விட்டார்கள். அதனால் தன்னந்தனியாக அருவியை உச்சி வரை சென்று பார்த்து ரசித்து வந்தேன்.

இன்டர்லேகன் நகரம் ப்ரியன்ஸ் மற்றும் துன் (Thun) என்னும் இரண்டு பெரிய ஏரிகள் சங்கமிக்கும் இடத்தில அமைந்துள்ளது. இந்த சங்கமத்தை பறவை பார்வையில் பார்க்கும் வகையில் நகரத்தின் மத்தியில் இருக்கும் மலை குன்றின் மேல் அமைந்துள்ள இடம்தான் ஹர்டர் குல்ம் (Harder Kulm). அங்கு செல்வதற்க்கு செங்குத்தாக மலை மேல் ஏறும் ஒரே ஒரு பெட்டி மட்டும் கொண்ட ட்ரெயின் அமைக்கப்பட்டுள்ளது

அருவியை கண்டு கழித்தபின் மீண்டும் நகரத்திற்க்கு வந்து ஒற்றை பெட்டி ட்ரெயின் மூலம் ஹர்டர் குல்ம் வந்தடைந்தோம். அந்த ரயில் பயணம் குறைவான நேரம் என்றாலும் த்ரில்லான அனுபவத்தை தர தவறவில்லை. மலை விளிம்பில் நின்று கொண்டு பார்க்கும் வகையில் அமைந்த இடத்தை நோக்கி என் மனைவி உற்சாகமாக செல்ல, நான் குழந்தையை வாங்கி கொண்டு பின் வாங்கினேன். உயரம் எனக்கு அலர்ஜி (allergy) என்பதால், விளிம்பில் நின்று கொண்டு இரு ஏரிகளும் இணையும் அழகை ரசித்துக்கொண்டிருந்த என் மனைவியை படம் எடுத்துக்கொண்டிருந்தேன். குழந்தை வழக்கம் போல் அடம் பிடிக்க, குழந்தையை நான் கீழே விட பயம் அறியாத குழந்தை உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது



மாலை ஆகிவிட்டபடியால் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்டர்லேகனில் இருந்து மீண்டும் யூபெர்லிங்கென் வர வேண்டும். சிறிது நேரம் ஷாப்பிங் (shopping) செய்துவிட்டு, மெக்டொனல்ட்ஸ்-ல் (McDonalds) பர்கர் (burger) சாப்பிட்டோம். பின்னர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு, இன்டர்லேகனில் இருந்து ட்ரெயின் மூலம் பெர்ன் வந்து, அங்கிருந்து சூரிச் வழியாக சஃபாசென் வந்தடைந்தோம். அங்கிருந்து யூபெர்லிங்கென் வந்து வீடு சேர இரவு 10:30 மணி ஆகிவிட்டது. மூன்று நாள் பயணம், காலம் முழுவதும் நினைவு கொள்ளத்தக்க வகையில் வெற்றிகரமாக அமைந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.