வியாழன், 11 டிசம்பர், 2008

ஒலிம்பிக்ஸ்

நண்பர்களே, விளையாட்டுத்துறையில் நமது நாடு கடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய தூரம் குறித்த சிந்தனைதான் இந்த கட்டுரை. உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள நாம் விளையாட்டு துறையில் பின்தங்கி இருப்பதற்கான காரணங்கள் பல.

நமது நாடு சுதந்திரமடைந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், போதுமான வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறோம் என்பது மறுப்பதற்க்கில்லை. ஆனால், விளையாட்டுத்துறையில் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒலிம்பிக் போட்டிகளில் நாம் இது வரை பெற்றுள்ள பதக்கங்கள் பதினைந்து (சுதந்திரத்திற்கு பிறகு) மட்டுமே. மொழி, இனம், அரசியல், பணம் என்று பல காரணங்கள் இருந்தாலும் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைவு என்பதே முதன்மையான காரணம்.

விளையாட்டு, மனித குலத்திற்கு ஒரு முக்கிய பொழுதுபோக்கு. இந்தியர்களுக்கு பொழுதுபோக்கில் நாட்டம் அதிகம். மற்ற எல்லா விளையாட்டுகளைவிடவும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம் இருப்பதற்கு காரணம், வேலை வெட்டி செய்யாமல் அதிக நேரம் பொழுதுபோக்கலாம் என்பதே. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பணபலம் படைத்த அமைப்பாக இருப்பதற்கு ரசிகர்களாகிய நாம்தான் காரணம். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட்டை விளையாட்டாக நினைப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்பொழுது கிரிக்கெட் விளையாட்டை தொழிலாக கருதி செயல் பட்டு வருகின்றது. அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அன்று கிரிக்கெட்டில் நமது அணி இலங்கையிடம் தோற்றுப்போனது. தங்கப்பதக்கத்திற்காக மகிழ்ந்தவர்களைவிட இந்திய அணி கிரிக்கெட்டில் தோற்றதற்காக வருந்தியவர்கள் அதிகம். இத்தகைய மோகம் மிகவும் ஆபத்தான ஓன்று. எல்லா விளையாட்டையும் ஆதரிக்க, ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுடைய ஆளுமையை காண்பிக்க, விளையாட்டிற்கு நிறைய நிதி ஒதுக்கி, அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் நிறைய பதக்கங்களை பெற்று வருகின்றன. நமது நாட்டின் ஆளுமையை உலக அரங்கில் காண்பிக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

இந்தியர்கள் உடல் வலிமையைவிட மூளை பலம் மிக்கவர்கள் என்பது பொதுவான கருத்து. அதற்கு எடுத்துக்காட்டாக விஷ்வநாதன் ஆனந்தை (உலக முதனிலை சதுரங்க ஆட்டக்காரர்) கூறலாம். கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகள் கூட ஒருவகையில் இதுபோன்ற விளையாட்டுகள்தான். ஆனால் இந்த கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஹாக்கி விளையாட்டில் தொடர்ந்து எட்டு தங்க பதக்கங்களை பெற்றவர்கள் நாம். அதனால் முறையாக கொடுக்க படும் பயிற்சி எந்த ஒரு விளையாட்டிலும் நாம் சாதிக்க ஏதுவாக அமையும்.

மற்ற நாடுகளை போல அல்ல நம் நாடு. பல்வேறு மொழி, மதம் கொண்ட நாடு. அதனால் குழு விளையாட்டு என்று வரும்போது வெவ்வேறு மாநில வீரர்களுக்கு இடையேயான புரிந்துணர்வு என்பது மிகவும் இன்றியமையாத ஓன்று. இதற்கு மாநிலங்களுக்கு இடையேயான உறவு சுமூகமாக பேணப்பட வேண்டும்.

தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்ற பிரிவினை அரசியல் நமது நாட்டின் விளையாட்டு வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது/பாதித்துவருகிறது என்பதை நாம் அறிவோம். இந்த பிரிவினைகள் களையப்பட வேண்டும். திறமையான வீரர்கள் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் முறையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும.

வளர்ந்துகொண்டிருக்கும் நமது நாட்டால் விளையாட்டிற்கு தேவையான அளவு நிதி ஒதுக்க முடியாதது நாம் பதக்கங்கள் பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டால் நல்ல முன்னேற்றம் எதிர் பார்க்கலாம்.

அபினவ் பிந்த்ரா ஒரு பணக்கார குடும்ப்பத்தை சார்ந்தவர். அவரால் தன்னுடைய சொந்த செலவில் பயற்சி எடுத்து தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது. ஆனால் அது எல்லோராலும் முடியாது. பொருளாதார வசதி குறைந்த வீரர்களை அரசு தத்து எடுத்து முடிந்த அளவு பொருள் உதவி செய்தால் உலக அரங்கில் பல சாதனைகளை நம் வீரர்களால் செய்ய முடியும்.

லியாண்டர் பய்ஸ், மகேஷ் பூபதி, சாய்னா நெஹ்வால், ஜோஷ்ணா சின்னப்பா, சரத் கமல் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையால் தத்தமது விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார்கள். இந்த விளையாட்டுகளில் நாம் முன்னேறி வருவது மிகவும் போற்றபடவேண்டிய ஓன்று. இது போன்று தடகள போட்டிகளில் நாம் சிறந்து விளங்க சிறிது மெனக்கெட வேண்டும். தடகள போட்டிகளை பொறுத்தவரை மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோருக்கு பிறகு குறிப்பிட்டு சொல்லும் வகையில் யாரும் வரவில்லை. சிறந்த தடகள மையங்களை உருவாக்கி, நல்ல மைதானங்களை அமைத்து, நல்ல வீரர்களை இனம் கண்டு பயிற்சி தருவதன் மூலம் இந்த குறைபாட்டினை களைய முடியும்.

நமது நாட்டை பொருத்தவரை அரசியலின் தலையீட்டை தவிர்க்க முடியாது . ஆனால் முறையற்ற தலையீட்டை தவிர்ப்பது முக்கியம். விளையாட்டை பற்றி தெரிந்தவர்கள், அந்தந்த விளையாட்டு அமைப்புகளுக்கு தலைவராக இருப்பது மிகவும் அவசியமான ஓன்று. விளையாட்டு அமைப்புகளில் இருப்பவர்கள் விருப்பு வெறுப்பு அன்றி திறமைக்கு மட்டும் மதிப்பளித்து, வீரர்களை தேர்ந்தெடுத்து தயார் படுத்தும்பொழுது விளையாட்டு வளருவதை யாராலும் தடுக்க முடியாது.

இன்னும் பல காரண காரியங்களை அலசிக் கொண்டே போகலாம். அதுவல்ல இந்த கட்டுரையின் நோக்கம். விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் சிறிது சிந்திக்க வைப்பதே எண்ணம்.

நமது நாட்டு மக்களுக்கு இடேயே உள்ள பிணைப்பை தக்கவைத்து கொள்வது, நமது நாட்டின் இறையாண்மைக்கு மிகவும் இன்றியமையாத ஓன்று. ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் மொழி மதம் கடந்து இந்தியர்கள் என்ற நிலையில் ஒன்றுபட்டு மகிழ்ச்சியடைகிறோம் அல்லவா, அதுதான் விளையாட்டின் மகத்துவம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன