வெள்ளி, 1 ஜூன், 2012

குற்றம் - நடந்து கொண்டிருப்பது என்ன? தமிழக அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு விடைகொடுத்து, அ.தி.மு.க-வுக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!

திருச்சி, சங்கரன்கோவில் என்று இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து, புதுக்கோட்டை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. பொதுத்தேர்தலே  முறையற்று நடக்கும்பொழுது இடைத்தேர்தல் எல்லாம் சம்பிரதாயமாகவே நடைபெற்றுவருகின்றன. வருங்காலங்களில் இடைத்தேர்தல் நடத்தாமலே ஆளும்கட்சி ஜெயித்ததாக அறிவித்துவிட்டால், மிச்சமாகும் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

தமிழகம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்சினை மின்சாரத் தட்டுப்பாடு. பல வருடங்களாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை தீட்டாமல், இந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு செய்யும் செயல்களால் மின்சாரத் தட்டுப்பாட்டை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சி மின்சார தேவை பற்றி கண்டுகொள்ளாமல் இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை மக்களுக்கு வழங்க, தற்போதைய ஆளும் அ.தி.மு.க தன்னுடைய பங்கிற்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற மின் உபகரணங்களை வழங்கிக்கொண்டிருக்க, மக்கள் மின்சாரத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மக்களுக்கும்  உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கப்பெற்றபின் அவர்களுக்கு தேவையான பிற வசதிகளை இலவசமாகவோ மானியவிலையிலோ அரசாங்கம் செய்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அடிப்படை வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் தமிழகத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும்பொழுது, அதைப்பற்றி  கவலைப்படாமல் ஓட்டுக்காக இரு கட்சிகளும் இலவச அரசியல் நடத்தி கொண்டிருப்பது நகைப்புக்குரியது. மின்சார தேவையை பெருக்குவதற்கு எல்லா வகையான வழிமுறைகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு கண்டறிந்து செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மக்களை அறிவுறுத்துவதும் அரசின் தலையாய பணிகளில் ஒன்று.

சாலை விதிகளை மீறுவது, போதையில் வாகனங்களை இயக்குவது, போதிய ஓய்வு இல்லாமல் தொடந்து வண்டி ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வண்டி ஓட்டுவது, முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களை இயக்குவது என்பன போன்ற பல காரணங்களால் தமிழகத்தில் தினம் தினம் நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் ஏராளம். ஆட்சியில் இருப்பவர்கள் விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து புது திட்டங்களை வகுக்க வேண்டும். வழக்கில் இருக்கும் சட்டங்களை தவறிழைப்போர் மீது முறையாக பிரயோகிக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டால் பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்து வரும் வருமானத்தை கணக்கில்கொண்டு, பூரண மதுவிலக்கு கொண்டுவரும் எண்ணத்தில் அரசு இல்லை என்று தெரிந்தாலும், தீவிர குடிப்பழக்கதிற்கு ஆளாகுபவர்களை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முற்படவில்லை. உயர்ரக மதுபான வகைகளை விற்பனை செய்வதற்காக எலைட் பார்களை திறப்பதில் ஆர்வம் காட்டும் அரசு மக்கள் நலனில் ஆர்வம் காட்டாமல் தவிர்ப்பது வேடிக்கை.

கட்டணம் உயர்ந்திருக்கிறதே தவிர, பேருந்துகளின் தரம் உயர்த்தப்படவில்லை. தமிழக அரசு விரைவு பேருந்து ஒன்றில் நமது முதல்வர் அல்லது மந்திரிகள்  தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரைக்கும் ஒரு பயணம் செய்து பார்த்தால்தான் தெரியும், மக்களின் சிரமம் மற்றும் அரசு பேருந்துகளின் அவல நிலைமை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் இருந்தாலும் அரசு பேருந்துகள் இன்னும் 20-ஆம் நூற்றாண்டை தாண்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வசதியான பேருந்துகள், முறையான பராமரிப்பு இருந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டு மோனோ ரயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை மோனோ தீர்த்து வைக்குமா எனபது சந்தேகமே. இந்த திட்டத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு முன், அரசு போலி கவுரவத்தை விட்டொழித்து நிபுணர்களை கூட்டி ஆலோசனை செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் மோனோவுக்கு முன்மாதிரியான ஜப்பானிலேயே மிகவும் குறைந்த அளவில்தான் மோனோ செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் விலைவாசிக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீஸல் விலை உயர்வே. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி செய்தால் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

சேவை மனப்பான்மையில் செய்ய வேண்டிய கல்விக்கொடை, தனியார் பள்ளிகளின் கையில் கொள்ளையாக மாறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு இருக்கிறது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு இதில் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆசை.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற நில மோசடிகளை வெளிக்கொணர்வது மிகவும் நல்ல விஷயம் என்றாலும், நில மோசடியில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினைகளை சட்டத்தின் துணைகொண்டு தீர்க்க முற்படுவதைவிட, இருமாநில மக்களின் நெடுநாள் நன்மைக்காக அந்தந்த மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்படுவது சாலச்சிறந்தது.

நியாயமான பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் போராடும் மக்களை, சமூக விரோதிகள் போல கையாளுவதை காவல்துறை தவிர்த்தால்தான் மக்களுக்கு நண்பனாக விளங்கமுடியும்.

ஏழை மக்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டம் நல்ல விஷயம் என்றாலும், அரசு மருத்துவமனைகள் கண்டிப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்.

முதல்வராய் இருந்தாலும், மந்திரியாய் இருந்தாலும், தான் தலைவன் மட்டுமல்ல, மக்கள் தொண்டன் என்ற எண்ணம் மனதில் இருந்தால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தானாக வரும். விமர்சனங்களை எதிர்கொண்டு, மக்கள் குறைகளை களைபவன்தான் நல்ல தலைவன். மக்கள் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணவேண்டிய சட்டசபையில், அளவுக்கு மீறிய தனிநபர் துதி தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

அரசு இயந்திரம் முறைப்படுத்தபடவேண்டும் என்றால் முதல்வர், மந்திரிகள், உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று எல்லோரும் மாத ஊதியத்தை தவிர்த்து எந்தவிதமான லஞ்சத்தையும் வாங்க மறுத்து பணி செய்ய வேண்டும். நினைப்பதற்கு கனவு போல் இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமானதே.

இப்படி இன்னும் ஏராளமான தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்க, அரசு பல கோடி ரூபாய் செலவழித்து ஓராண்டு சாதனை என்று விளம்பரம்தேட முயற்சிப்பது மக்களாட்சிக்கு அழகல்ல. ஒரு சாமானியன் இவ்வளவு யோசிக்க முடியும் என்றால் அரசு இயந்திரம் எவ்வளவு யோசிக்க வேண்டும். ஒட்டு அரசியலை விட்டொழித்து, மக்கள் நலத்திட்டங்களில் எல்லாம் பண மோசடிகளை தவிர்த்து, மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எல்லா வளங்களிலும் தன்னிறைவு பெறுவதற்கான தொலை நோக்கு பார்வையில் அரசு செயல்படும் என்றால் புகழ் தானாக தேடி வரும் எனபதில் ஐயமில்லை.