செவ்வாய், 24 மார்ச், 2009

ஓட்டு போடு

நண்பர்களே, இந்தியா உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் மக்கள். மக்களை ஆள்வதற்கு, மக்களை தேர்ந்தெடுக்க, மக்களால் பயன்படுத்தப்படும் ஜனநாயக நடைமுறை தேர்தல். தேர்தல் நடைமுறை சிறப்பாக நடைபெறுவதற்கு மக்களுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம் ஓட்டு. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நாம், செய்ய வேண்டிய ஓட்டளிக்கும் கடமை குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை.

ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் 40 முதல் 45 சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்க்கான காரணங்கள் பல. பல பேர் சொல்லும் காரணம், "எனக்கு அரசியல் பிடிக்கவில்லை; எந்த அரசியல் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை; அதனால் ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை". இன்னும் சிலர், எதற்கு விடுமுறை நாளை வீணடிக்க வேண்டும் என்று ஓய்வு எடுப்பார்கள். இந்த இரு அணுகுமுறைகளும் ஆபத்தான விஷயங்கள்.

அரசியலை மக்கள் வெறுப்பதற்க்கான காரணங்களை சிறிது அலசுவோம். ஜனநாயகம் பிறந்த ஆரம்ப காலக்கட்டங்களில் மக்கள்பணி செய்வதற்க்காக சேவை எண்ணத்துடன் கூடிய தலைவர்கள் பலர் இருந்தார்கள். சிறப்பாக மக்கள் பணி செய்தார்கள். பின்னாட்களில் மக்களுக்கு பணி புரிவதற்க்கான எண்ணம் குறைந்து பணம், புகழ் விரும்பிய தலைவர்கள் பலர் தோன்றினார்கள். தற்பொழுது ஆள்பலம், பணபலம் கொண்டவர்களின் தொழில்கூடமாக மாறிவிட்டது அரசியல். இதில் நம்மைப்போன்ற மக்கள் இந்த நிலைகண்டு வருந்தி அரசியலையே வெறுத்து ஒதுக்கி, ஓட்டு உரிமையைக்கூட செய்ய விரும்பாமல் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

அரசியல் இல்லாமல் நம் நாடு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. நம் நாட்டின் முன்னேற்றம் அரசியல்/அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஜனநாயகத்தை மீட்க குடிமக்களாகிய நாம் அரசியலுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்று. தற்போதைய அரசியல் சூழ்நிலை, சேவை எண்ணம் கொண்ட சாமான்யரும் அரசியலில் பங்கு பெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. எனவே நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், நமது ஓட்டு உரிமையை முறையாக பயன்படுத்துவதன்மூலம் அரசியலை மேம்படுத்த முயலலாம்.

அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் நாம் ஒதுங்கிப் போக போக அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே போகும். நேர்மையற்ற அரசியல்வாதிகள் பெருகிக் கொண்டே போவார்கள். அதனால் நம்முடைய வாக்கை முறையாக பதிவு செய்து, நல்ல வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் அரசியலின் தரத்தை மேம்படுத்தலாம். யார் ஆட்சி செய்தால் எனக்கு என்ன, என்று ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

சரி, ஓட்டு போடலாம் என்று முடிவு செய்தாகி விட்டது, ஆனால் எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை, என்ன செய்வது என்று ஒரு குழப்பம் வரலாம். இந்த மாதிரி ஒரு மோசமான சூழ்நிலை வரும் பொழுது பயன்படட்டுமே என்று நமது அரசியல் சட்டங்களை வகுத்தவர்கள் வகுத்த முறைதான் 49 ஓ. அப்படி என்றால் என்ன என்று பார்போம். எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.


எதற்க்காக இந்த முறை என்ற கேள்வி எழுகிறது அல்லவா? எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும், ஏற்கனவே போட்டியிட்ட யாரும் போட்டியிட முடியாது என்பது விதி. விளைவாக, 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும்.

நமது அரசியல் தலைவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்படி ஒரு பிரிவு (49 ஓ) அரசியல் சாசனத்தில் இருக்கிறது என்பதை மக்கள் இவ்வளவு நாளும் தெரியாத வகையில் பார்த்துக்கொண்டார்கள். தற்பொழுது சமூக ஆர்வலர்கள் மூலமாக இந்த விஷயம் மிகவும் விரைவாக மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வேட்பாளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மிகவும் ரகசியமான வாக்கு முறையில் இதுவும் வந்து விடும். மக்களும் எந்தவிதமான பயமின்றி மிகவும் எளிதாக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.

இந்த முறை (49 ஓ) வருவது ஒருபுறம் இருக்கட்டும். இதனை பயன்படுத்தினால் அரசியல் சீரடையும் வாய்ப்பு ஒருபுறம் இருக்கட்டும். எல்லா தேர்தல்களிலும் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் சிறிது சிந்தித்து வாக்களிப்பது மிகவும் அவசியம். தன் ஜாதி, தன் மதம், தன் கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் சிறந்த வேட்பாளரை தேர்ந்து எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு இதுதான் தேவை. அதனால் கண்டிப்பாக ஓட்டு போடுவோம், போடுகின்ற ஓட்டை திறமையான நேர்மையான சேவை எண்ணம் கொண்ட நல்ல வேட்பாளருக்கு போடுவோம்.