திங்கள், 11 ஏப்ரல், 2011

குற்றம் - நடக்கப்போவது என்ன? தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2011

ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி, தாங்கள்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் மேற்கண்ட எதாவது ஒரு அணியில் ஐக்கியமாகிவிட, தேர்தல் அரசியலின் சூட்சுமம் தெரியாத ம.தி.மு.க ஒதுங்கிவிட, கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க அணியில் சேர்ந்துகொள்ள, மூன்றாவது அணி என்று பெயரளவில் பா.ஜ.க போட்டியிட, தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு சாதாரண குடிமகன், நல்லவன், பொதுநலம் மிக்கவன், ஆளுமை பண்பு உடையவன். தன்னுடைய தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவன். தன்னால் இயன்ற அளவு பொது சேவை செய்து வருபவன். தொகுதி முழுவதும் அறிமுகம் உடையவன். ஆனால், எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இப்படிப்பட்ட ஒருவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனால் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, அவன் கட்டிய வைப்புத்தொகை (deposit) கூட அவனுக்கு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.

அரசியல்வாதியின் வாரிசு, சினிமா நடிகன் இவர்கள்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்கிற அவல நிலைதான் தற்பொழுது இருக்கிறது. கட்சிகளும் உண்மையான தொண்டனை கண்டுகொள்வதில்லை. வாரிசுகளை தவிர்த்து, யாரால் கோடிகணக்காக செலவு செய்ய முடியும், யாரால் குறிப்பிட்ட சாதி அல்லது மத ஓட்டுகளை பெற முடியும், யாருக்கு போதுமான படைபலம் உள்ளது என்ற அடிப்படையிலேயே கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன.

ஒரு வேட்பாளருடைய தேர்தல் செலவிற்கு தேர்தல் கமிஷன் தற்பொழுது நிர்ணயித்துள்ள தொகை 16 லட்சம். ஆனால், பிரபல கட்சி வேட்பாளர்கள் 2 கோடி முதல் 20 கோடி வரை செலவு செய்கிறார்கள் என்றாலும், 16 லட்சம் கணக்கு காட்ட முடிகிறது என்றால் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு முன்னதாகவே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. மக்களாட்சியின் அடிப்படையே இந்த இடத்தில இருந்துதான் ஆட்டம் காண்கிறது. இவ்வளவு பணம் ஒரு வேட்பாளருக்கு எப்படி கிடைக்கிறது. சொந்த பணம், கட்சி நிதி, ஆட்சியில் இருந்த பொழுது ஊழல் செய்த பணம், என்று பல வகைகளில் இந்த பணம் வருகிறது. இத்தனை கோடிகள் செலவு செய்து அதை அடுத்த 5 வருட ஆட்சிக் காலத்தில் சம்பாதிக்க முற்படும்போது 'மக்களாட்சி' வியாபாரமாக மாறி விடுகிறது.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தற்பொழுது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்றால், கடந்த தேர்தலின்பொழுது அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தையும், தற்பொழுது தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். தன்னுடைய மக்கள் பணிக்காக மாதம் 30 ஆயிரம் ஊதியம் பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சொத்து மதிப்பு இடைப்பட்ட காலத்தில் எப்படி இவ்வளவு உயர்ந்தது என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

தேர்தலின் பொழுது ஓட்டுக்காக மக்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று விட்டால், மக்கள் தொண்டன் என்பதை மறந்து, 'நானே அரசன்' என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் காலில் விழாத குறையாக இவர்கள் உத்தரவுக்கு காத்திருக்க, சாதாரண மனிதர்கள் போல இவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்கிற அதிகாரம் தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு வழங்கப்பட்டுவிட, பதவி மோகம் இவர்களை ஆட்கொண்டு விடுகிறது. அதனால், சாகும் வரை பதவியில் இருந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் கட்சி நிதிக்காக உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டப்படுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், தற்பொழுது அப்பழக்கம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிகள் நிதி பெற்று கொள்கின்றன. இதற்கு கைமாறாக கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல், மக்களுக்காக செய்யப்படும் எல்லாவிதமான வளர்ச்சி திட்டங்களிலும் ஊழல் செய்வது, அரசியல் வாதிகளின் குடும்பத்திற்காக மட்டுமல்ல, கட்சிக்கும் சேர்த்துதான். உண்டியல் ஏந்தித்தான் அரசியல் நடத்த வேண்டும் என்கிற நிலை மீண்டும் வர வேண்டும், அப்பொழுதுதான் ஊழல் குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.

எவ்வளவுதான் ஊழல் புகார்கள் எழுந்தாலும், அரசியல்வாதிகள் ஊழல் செய்ய துணிகிறார்கள் என்றால், என்ன காரணம். பிக்பாக்கெட் திருடனுக்கு கிடைக்கும் தண்டனை கூட ஊழல் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில்லை. நீதிமன்றம் தண்டிப்பதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை எச்சரித்து விடுதலை செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே போராடி வருவது வரவேற்கத்தக்கது.

மக்களாட்சி முறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து மன்னராட்சி முறை நோக்கி சென்று கொண்டு இருக்கும் அவலத்தை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அடுத்த முன்னேற்றத்திற்கான படி என்று எண்ண தோன்றாமல், 'குற்றம் - நடக்கப்போவது என்ன' என்ற பீதிதான் கிளம்புகிறது.

இம்முறை தேர்தல் நியாயமாக நடைபெற, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இம்முயற்சி மக்களாட்சியை மீட்டெடுக்க ஓரளவேனும் உதவும்.

மக்களாட்சியின் தற்போதைய நிலை குறித்து சிந்தித்தால் வெறுப்புதான் மிஞ்சும், ஒதுங்கி போக மனம் எண்ணும். நாம் ஒதுங்கி செல்லச் செல்ல சீரழிவு அதிகமாகி கொண்டேயிருக்கும். மக்களாட்சி தழைத்தோங்க நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யலாம். ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்கலாம். இலவசங்களை பொருட்படுத்தாமல், கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். எந்த ஒரு வேட்பாளரும் தகுதி இல்லை என்று எண்ணும் பட்சத்தில் 49-ஓ பயன்படுத்தலாம். மக்களாட்சி தத்துவத்தை சரியான பாதையில் பயணிக்க வைக்க 'ஓட்டு' என்னும் ஆயுதத்தை தவறாமல் பயன்படுத்துவோம்.