வியாழன், 8 ஜனவரி, 2009

சினிமா சினிமா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்களே, நம்மிடையே பரவிக்கிடக்கும் சினிமா மோகம் குறித்த சிந்தனைதான் இந்தக் கட்டுரை. சினிமா, மிகவும் சக்தி வாய்ந்த பொழுதுபோக்கு ஊடகம். சினிமா, மக்கள் தலைவர்களை, முதல்வர்களை உருவாக்கிய ஊடகம்.

நமது நாட்டில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சினிமா நடிகர்கள் தங்களுடைய நடிப்பால் மக்களை மகிழ்ச்சிபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், மக்களிடையே செல்வாக்கையும் மிக எளிதாக பெற்று விடுகிறார்கள். ஆனால் இத்தகைய செல்வாக்கு எல்லா வகையான நடிகர்களுக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதாநாயகனாக அரிதாரம் பூசும் நடிகர்களுக்கு மட்டுமே தலைவர் பட்டம் கிடைக்கிறது. எதிர்மறையான வேடங்கள் (வில்லன்) புனையும் நடிகர்களுக்கு தலைவர் அந்தஸ்து கிடைப்பது மிகவும் அரிது. நமது மக்கள் நிழலை நிஜமாக கருதுவதால் இந்த அவலம் தொடர்ந்து வருகின்றது.

கடந்த காலங்களில் நடிகர்கள் மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார்கள். இன்றைய நடிகர்கள் அதே பாணியை பின்பற்றி புகழ்பெற விரும்புகிறார்கள். அதன் விளைவாக நடிப்பைத்தவிர எல்லாவற்றையும் திரையில் காண்பித்து மக்களை கவர முற்படுகிறார்கள். 'தன் பின்னால் தமிழகமே இருக்கிறது' என்கிற வகையில் வசனங்களும் காட்சிகளும் தன்படங்களில் இடம்பெறுவதை முக்கியமாக கருதுகிறார்கள். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு உள்ள வியாபார மதிப்பை கணக்கில்கொண்டு இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகிறார்கள். வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று எடுத்துக்கொண்டால் இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதையும் மீறி நாற்காலி கனவு இதன் பின்னணியில் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.

நமது நாட்டை பொறுத்தவரை சேவை எண்ணம் கொண்ட எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் நடிகர்கள் நாடாள வருவது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அதற்கு களமாக சினிமா என்னும் பொழுதுபோக்கு ஊடகத்தை பயன்படுத்திக்கொள்ள முனைவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அறிவியல் வளர்ச்சி முழுமையாக இல்லாத காலகட்டங்களில் சினிமாவை மக்கள் நிஜம் என்று நம்பி, நடிகர்களை தெய்வமாக ஆராதித்திருக்கலாம்.. அறிவியல் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டங்களில் மக்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான மக்கள், திரையில் நடிகர்கள் செய்யும் வித்தைகளை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். ஆனால் இன்றும் சிலர் நடிகர்களுக்கு காவடி தூக்கிக்கொண்டு, நடிகர்களுடைய வார்த்தையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்கையை வீணடித்துக்கொண்டு இருப்பது மிகவும் வேதனையான விஷயம். இத்தகைய அப்பாவி மக்களுடைய அறியாமையை திரையுலகினர் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரை உலகத்தினரை திருத்த முற்படுவதை விட நம் மனதில் மாற்றங்கள் கொண்டு வர முற்படுவது நல்லது.

'என் ரசிகர்கள் (?) விரும்புகிறார்கள்' என்கிற போர்வையில் மசாலாப் படங்களை தருவதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் பல நடிகர்கள்.
பொழுதுபோக்கிற்க்கான மசாலா படங்கள் மட்டுமன்றி, நல்ல படங்கள் தருவதற்க்கான முயற்சிகளையும் அத்தகைய நடிகர்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். நடிகர்கள், தங்களை சுற்றி தாங்களே ஏற்ப்படுத்திக்கொண்ட போலியான பிம்பத்தை (இமேஜ்) உடைத்து எறிந்துவிட்டு நடிப்பை மட்டும் திரையில் காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற செய்தி ஊடகங்கள் வியாபார நோக்கில் சினிமாத்துறையினருக்கு அதிமுக்கியத்துவம் தந்து வருகின்றன. நடிகர்களை, மக்கள் தலைவர்களாக உருமாற்றும் பணியை இத்தகைய செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு பண்டிகை தினங்களின்போதும் நடிகர்/நடிகைகளை சாதனையாளர்களாக கருதி நேர்காணல் செய்வதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இத்தகைய பிரச்சாரங்கள் குறைக்க அல்லது தவிர்க்கப்பட வேண்டும்.

உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தருவது விவசாயிகளின் வேலை. ஆனால் அது அவர்கள் கடமை என்று அவர்களையே நாம் கண்டுகொள்வது இல்லை. ஆனால் நமது பொழுதுபோக்கிற்கு மட்டும் உத்தரவாதமான நடிகர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நடிப்பு ஒரு தொழில். நாம் எவ்வாறு நம்முடைய திறமையை வைத்து பணம் ஈட்டி வாழ்கிறோமோ, அதுபோல நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். சினிமாவிற்கு இருக்கும் வியாபாரம் பெரிது. சினிமா, மக்கள் எல்லாருக்கும் சென்றடைவதால், சினிமாத்துறையினர் மக்கள் மத்தியில் எளிதாக புகழ் பெறுகிறார்கள். மற்றபடி, அவர்களும் நம் எல்லோரையும் போலத்தான். இன்னும் சொல்ல போனால் நாம் பொழுதுபோக்கிற்க்காக செலவு செய்யும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. ஆகையால் சினிமாத்துறையினருக்கு கொடுக்கப்படும் அளவுகடந்த முக்கியத்துவம் தேவையற்ற ஒன்று. ரசிகர்கள் தங்கள் மனங்கவர்ந்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, படப்பெட்டிகளுக்கு பூஜை செய்வது, கோயில் கட்டுவது போன்ற அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மைபோலதான் நடிகர்கள் என்று உணர்ந்து, சினிமாவில் நடிகர்களின் நடிப்பை மட்டும் ரசித்து, தனிப்பட்ட வகையில் நடிகர்களை துதி பாடுவதை நிறுத்திக்கொண்டோம் என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைகள் பல விளையும்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன