செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மைனா

இந்தியாவில் எமர்ஜென்சி நடந்து கொண்டிருந்த நேரம். அது ஒரு பள்ளி விடுமுறைக் காலம். தங்கம், தனது தம்பி சேகரை தேடிக்கொண்டு புளியந்தோப்புக்கு வந்தாள். அங்குதான் வழக்கமாக சேகர் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பான். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினாள்.

"ஏட்டி தம்பி எங்க" என்று கேட்ட தாய் செல்லம்மாவிடம் "அவன் எங்க போனான்னு தெரியலம்மா" என்று பதில் சொல்லிவிட்டு தாய்க்கு சமையலில் உதவி செய்ய ஆரம்பித்தாள். அவள் தந்தை சின்னையா சந்தையில் மாம்பழங்களை விற்றுவிட்டு இரவு உணவுக்காக வௌமீன் வாங்கி வந்திருந்தார். துருவிய தேங்காயுடன் மிளகு பொருட்களை சேர்த்து தாய் கொடுக்க, மீன்கறிக்காக அம்மியில் வைத்து அரைக்கத் தொடங்கினாள் தங்கம். அரிவாள் மனையில் மீனின் செதில்களை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி எடுத்துக்கொண்டு வந்தாள் செல்லம்மா. சிறிது நேரத்தில் மீனின் தலை, புளி மற்றும் தேங்காய் கலந்த குழம்பும், மீனுடல் துண்டுகளுடன் மாங்காய் துண்டுகள் மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து வைத்த கூட்டும், சம்பா அரிசியில் வடித்த சோறும் தயாரானது.

"பசிக்குது, சோறு போடும்மா" என்றாள் தங்கம். "பொறுடி, தம்பி வரட்டும்" என்று தாய் பதிலுரைத்தாள். சிறிது நேரத்தில் சேகர் இரு கைகளையும் சேர்த்து பொத்தியபடியே வந்தான். அவனை கோபமாக திட்ட எழுந்த தங்கம், அவன் வந்த கோலத்தை பார்த்து ஆர்வமாக "தம்பி, என்னலே அது" என்று கேட்டாள். அவன் நடு வீட்டிற்குள் வந்து "அக்கா, விளக்க எடுத்துட்டு வா" என்றவுடன் தங்கம் ஓடிப்போய் மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வந்தாள். விளக்கின் அருகில் வந்து, கைகளை விரித்து சிறிய பறவைக் குஞ்சு ஒன்றை தரையில் வைத்தான்.

தங்கம் கண்கள் விரிய ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே "ஏல எங்க எடுத்த, என்ன குஞ்சு இது" என்று கேட்டாள். அதற்கு சேகர், "நம்ம ராஜனோட அண்ணன் இருக்கான்ல, அவன் நொங்கு பறிக்க பனைமரத்துல ஏறுனான். அங்க கூட்டுல இந்த குஞ்சு இருந்துச்சு, அதை எடுத்துட்டு வந்தான், நான் ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்தேன்". அவர்கள் தந்தை வந்து பார்த்துவிட்டு, "மக்ளே, இது மைனா குஞ்சு, மைனாவை வீட்ல வளக்குறது சரியா வராது, ஏழு தத்து கழிஞ்சாதான் அது நிலைக்கும், பேசாம திரும்ப மரத்துல விட்ருங்க" என்று சொன்னார்.

சேகர் அப்பாவின் பேச்சைக்கேட்டு கலவரமடைந்து அம்மாவை பார்க்க, "இப்போ இங்க இருக்கட்டும், காலைல பாத்துக்கலாம், எல்லாரும் சாப்பிட வாங்க" என்று அம்மா கூறியது ஆறுதலாக இருந்தது. பனை ஓலையால் வேயப்பட்ட சிறிய பெட்டி ஒன்றை எடுத்து, காற்று புகும் வகையில் கவிழ்த்து மைனாக்குஞ்சை மூடி வைத்துவிட்டு சாப்பிட சென்றான் சேகர்.

வேகவேகமாக சாப்பிட்டு முடித்து வந்த சேகருக்கு, மைனாக்குஞ்சுக்கு என்ன உணவளிப்பது என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டான், அம்மா தண்ணீர் மட்டும் வை என்றாள். கொஞ்சம் தண்ணீர் கையில் எடுத்து மைனா குஞ்சு முன் உடைந்த ஓட்டு துண்டு ஒன்றில் ஊற்றி வைத்தான். தான் இடம் மாறி வந்து விட்டதை உணர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த மைனாக்குஞ்சு தன் மிகச்சிறிய அலகைக் கொண்டு இரு நீர்துளிகளை குடித்தது. அதை கண்டு குதூகலித்தனர் அக்காளும், தம்பியும்.

அடுத்த நாள் காலை, சேகர் அம்மாவின் அறிவுறுத்தல்படி கடைக்கு சென்று இரண்டு மட்டி பழங்களை வாங்கி வந்தான். ஒரு பழத்தில் சிறிது பிய்த்து மைனாக்குஞ்சு முன் வைத்தான். அது ஆர்வத்துடன் கொத்தித் தின்றது. மரக்குச்சிகள் எடுத்து வந்து ஒரு சிறிய கூண்டு செய்து அதனுள் மைனாக்குஞ்சை பாதுகாப்பாக அடைத்துவைத்தான்.

அக்காவும் தம்பியும் அன்று முழுவதும் அந்த சின்னங்சிறிய பறவையின் செய்கைகளை ரசித்தபடியே இருந்தனர். அது 'க்கிவ்', 'க்கிவ்' என்று கத்தியபடியே அவர்கள் கைகளில் ஏறி விளையாடியது. அன்று இரவு வியாபாரம் முடிந்து திரும்பிய சின்னையா அக்காவும் தம்பியும் மைனாக்குஞ்சை கொஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தவர் பிள்ளைகளின் ஒளி பொருந்திய முகங்களை கண்டு, லேசாக புன்னகைத்துக்கொண்டார். அதன் பிறகு தினமும் சந்தையில் இருந்து வரும்பொழுது வாழைப்பழங்கள் கொண்டு வரத் தொடங்கினார்.

ஒருவாரம் கடந்த நிலையில், மைனாக்குஞ்சு கொஞ்சம் வளர்ந்து விட்டது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று அக்காளும் தம்பியும்  குழம்பி போனார்கள். அது 'ஆணா', 'பெண்ணா' என்பதை எப்படி கண்டறிவது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. தந்தையிடம் கேட்டான் சேகர், அவர் குஞ்சு பருவத்தில் பாலினம் அறிவது கடினம் என்று கூறினார். இறுதியில் இருவரும் ஒருமனதாக 'கிட்டு' என்று பெயர் சூட்டினார்கள்.

'கிட்டு' என்ற பெயர் அதன் நினைவில் நிற்கும் வகையில் தொடர்ந்து அந்த பெயரிலேயே அழைத்தார்கள். ஒரு மாத முடிவில் ஓரளவு வளர்ந்து, சிறு தொலைவு பறக்கவும் கற்றுக் கொண்டது கிட்டு. கூண்டை திறந்து வெளியே விட்டால் சில நிமிடங்கள் அருகிலேயே பறந்து விட்டு மீண்டும் கூண்டிற்கு வந்து விடும். கிட்டு கூண்டிற்குள் அங்கும் இங்கும் குதித்துக்கொண்டே இருந்ததால் சிறிய கூண்டு போதுமானதாக இல்லை. தந்தையிடம் அடம்பிடித்து பெரிய இரும்பு கூண்டு ஒன்றை வாங்கி கிட்டுவை இடம்பெயர்த்தான் சேகர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் சேகர். இந்த வருடம் அவனுக்கு பள்ளி இறுதி ஆண்டு என்பதால் கவனமாக படிக்க ஆரம்பித்தான். பகல் வேளையில் சேகர் பள்ளிக்கு சென்று விடுவதால் கிட்டுவை கவனித்து கொள்வது தங்கத்தின் வேலை. பள்ளி முடிந்து வந்தவுடன் கிட்டுவுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டுதான் பாடம் படிப்பான் சேகர்.

'கிட்டு' தற்பொழுது அதன் பெயரை நன்கு உள்வாங்கிக்கொண்டது, கூப்பிட்டவுடன் திரும்பி பார்க்கும். தினமும் காலையில் ஒரு சிறிய மண்பானை மூடியில் தண்ணீர் ஊற்றி வைப்பாள் தங்கம். கிட்டு அதில் நின்று கொண்டு, கால்களை குறுக்கி கழுத்தளவு மூழ்கி சிறகடித்துக்கொண்டே குளிக்கும்.

குஞ்சாக இருந்த பொழுது ஒருமாதிரி சாம்பல் நிறத்தில் தெரிந்த கிட்டு, வளர்ந்த பிறகு ஒவ்வொரு நிறத்தையும் துல்லியமாக பார்க்கும் வகையில் இருந்தது. தவிட்டு நிற உடல், கருமை நிற தலை மற்றும் வால், மஞ்சள் நிற அலகு மற்றும் கால்கள். இது மட்டுமன்றி, கண்களை சுற்றி மெல்லிய மஞ்சள் வளையம், சிறகுகளின் விளிம்பு மற்றும் உள்ளே மெல்லிய வெண்மை நிறம் என இருந்த வண்ணக்கலவையான கிட்டுவை தொட்டு தொட்டு ரசிப்பாள் தங்கம்.

பழங்கள் மட்டுமல்லாமல், கிட்டுவுக்கு நீரில் ஊறவைத்த பொரிக்கடலையை நன்கு மசித்து கொடுப்பாள் தங்கம். கிட்டுவும் மிகவும் ஆர்வத்துடன் உண்ணும். நன்றாக ஆறிய கருப்பட்டி காப்பியும் விரும்பி குடிக்கும் கிட்டு. நன்கு உண்டுவிட்டு, சீரான இடைவெளியில் குட்டித்தூக்கம் கொள்வது கிட்டுவின் இயல்பு. அதன் இரு கால்களிலும் அடையாளத்திற்காக இரும்பு வளையத்தை அணிவித்திருந்தான் சேகர்.

சில மாதங்களுக்கு பிறகு, ஒரு மதிய வேளையில் தங்கம் தாயுடன் சேர்ந்து பசு மாட்டிற்கு புல் பறிக்க தென்னந்தோப்பிற்கு சென்று விட்டாள். வீட்டில் யாரும் இல்லை. பசியை உணர்ந்த கிட்டு 'க்கிவ்' என்று கத்த ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, வீட்டின் அருகில் வரும் பொழுது "அக்கா" என்ற மெல்லிய குரல் கேட்பதை தங்கம் கேட்டாள். ஆனால், வீட்டின் முன்னால் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு கொல்லைப்புறம் போனாள். அவளை பார்த்தவுடன் கூண்டில் இருந்த கிட்டு மீண்டும் "அக்கா" என்று அழைத்தது. ஒருகணம் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனாள். உடனே,  சுதாரித்துக்கொண்டு ஓடோடி சென்று கிட்டுவை கையில் எடுத்துக்கொண்டாள்.

கிட்டு முதல் முறை பேசியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த தங்கமும் சேகரும் அதற்கு சிறு சிறு  வார்த்தைகளை கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார்கள். கிட்டுவும் "அக்கா வா", "அண்ணா வா" என்று பேச கற்றுக் கொண்டது. இது மட்டுமல்லாமல், பசித்தால் "காப்பி தா" என்று சொல்லவும் பழகிக்  கொண்டது.

கிளியை பேச வைப்பது மைனாவை பேச வைப்பதை காட்டிலும் எளிது. கிளி, நாம் சொல்வதை திருப்பி சொல்லும் திறமை கொண்டது. ஆனால், மைனா சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு தெரிந்ததை பேசும் நுண்ணறிவு கொண்டது என்பதை அக்காவும், தம்பியும் பலவேளைகளில் கண்டு கொண்டார்கள். மேலும், கிளியைவிட மைனா மிகவும் துல்லியமாக பேசுவதையும் கேட்டு வியந்தனர். பெரும்பாலும், அவர்கள் பேசுவதை அவர்கள் குரல் சாயலிலேயே கிட்டு திருப்பிச் சொல்லும். 

ஒருநாள் மாலை வழக்கம் போல் தங்கம் கிட்டுவை திறந்து விட்டாள். இரவு சூழ்ந்த பிறகும், கிட்டு கூடு திரும்பவில்லை. பக்கத்து தோப்புகளில் அக்காவும் தம்பியும் "கிட்டு", "கிட்டு" என்று கத்தியபடியே தேடிப் பார்த்தார்கள். கிட்டு கிடைக்காததால் சாப்பிடாமல் கவலையோடு காத்திருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் ஆகிவிட்ட கிட்டுவை காணவில்லை என்பதையறிந்து "மக்ளே, கவல படாதிங்க, கண்டிப்பா வந்திரும்" என்று தைரியமூட்டினார் சின்னையா.

அடுத்த நாள், அதிகாலையிலேயே அக்காவும் தம்பியும் ஓடோடிச் சென்று கூண்டை பார்த்தனர், கிட்டு இன்னும் வரவில்லை. பகல் முழுவதும் நண்பன் ராஜனோடு சேர்ந்து கிட்டுவை தேடினான் சேகர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாய் அல்லது பூனையிடம் அகப்பட்டு இறந்திருக்குமோ என்று பயந்தார்கள் அக்காவும், தம்பியும். "அது நல்லா வளர்ந்துடுச்சு, ஜோடி தேடி போயிருக்கும், அதை மறந்திட்டு வேலைய பாருங்க" என்று ஆறுதல் கூறும் வகையில் கண்டித்தாள் செல்லம்மா.

மறுநாள், இனிமேல் கிட்டு திரும்பி வராது என்று முடிவுடன் பள்ளிக்கு சென்றான் சேகர். பள்ளியில் பாடத்தில் கவனம் செல்லவில்லை. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவன், "அக்கா", "அண்ணா" என்று பழகிய குரல் கேட்க கொல்லைப்பக்கம் ஓடினான். தங்கமும் ஓடி வந்தாள். அங்கு வீட்டின் ஓட்டு கூரைமேல் கிட்டு அமர்ந்திருந்தது. பறந்து வந்து சேகரின் தோள் மேல் அமர்ந்து படபடவென சிறகடித்தது. நெடு நாள் பிரிந்திருந்த நண்பனை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இருவர் கண்ணிலும் கண்ணீர்த்துளிகள் துளிர்க்க ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டார்கள்.

"எங்க போன கிட்டு, நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா" என்று கேட்ட சேகரை ஏதோ புரிந்தவாறு தலையை ஆட்டியது கிட்டு. "இனிமேல் போகக்கூடாது" என்று கண்டிப்புடன் கூறினாள் தங்கம். அந்த வீடு திரும்பலுக்கு பிறகு கிட்டு வீட்டை விட்டு சென்றதே இல்லை.

கிட்டு தரையில் நடக்கும் அழகே தனி தான். ஓரிரு அடிகள் நடந்து, பின்னர் குதித்து, திரும்பவும் ஓரிரு அடிகள் நடந்து, குதித்து... என்று செல்லும். வெட்டுகிளியை கண்டால் மிகவும் உற்சாகமடையும், பாய்ந்து சென்று வெட்டுக்கிளியை பிடித்து உண்ணும். தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே விசிலடிப்பது போல் 'கிட்டு' பாடுவதை மொத்த குடும்பமும் சேர்ந்து ரசிப்பார்கள்.

பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்துவிட்டது. நண்பர்களுடன் விளையாட செல்கையில், ஒருசமயம் கிட்டுவையும் கூண்டுடன் எடுத்து சென்றான் சேகர். சேகரின் நண்பர்கள் தங்கள் பெயர்களை சொல்ல, 'கிட்டு' திருப்பி சொல்வதைக் கேட்டு நண்பர்கள் உளமகிழ்ந்து போனார்கள்.

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வர இருந்தன. சேகருக்கு ஒரு பொறி தட்டியது. நாம் ஏன் தேர்வு முடிவுகளை கிட்டுவை கொண்டு அறிய முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. உடனே தன் நண்பன் ராஜனையும் அழைத்தான். தங்கம் இரண்டு சீட்டுகளை எழுதி கொண்டு வந்தாள். ஒன்றில் 'வெற்றி' என்றும் இன்னொன்றில் 'தோல்வி' என்றும் எழுதி இருந்தாள். கிட்டு முன் இரண்டு சீட்டுகளையும் போட்டு முதலில் சேகருக்காக எடுக்கச்  சொன்னாள். கிட்டு ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்தது. அதை பிரித்து காண்பித்தாள் தங்கம். அதில் 'வெற்றி' இருந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் சேகர். சீட்டுகளை கலைத்து போட்டு மீண்டும் ராஜனுக்காக எடுக்க சொன்னார்கள். கிட்டு எடுத்துக்கொடுத்த சீட்டை காண்பித்தாள் தங்கம். அதில் 'தோல்வி' என்று இருப்பதைக் கண்டு கலங்கி போனான் ராஜன். இதை கவனித்துக்கொண்டிருந்த செல்லம்மா "பறவை சொன்னா சரியாயிருமா, நீ நல்லா எழுதி இருந்தா தோக்க மாட்ட" என்று ஆறுதல்படுத்தினாள். ஆனால், கிட்டு கணித்தது போலவே முடிவுகள் அமைந்தன.

அன்று இரவு நன்றாக மழை பெய்தது. 'கிட்டு' மழையில் நனையக்கூடாது என்பதற்காக கூண்டை திறந்து கிட்டுவை பிடித்து வீட்டிற்குள் கொண்டு விட்டான் சேகர். குளிரின் காரணமாக விடிந்தது தெரியாமல் தூங்கி கொண்டிருந்தாள் தங்கம். "ஏட்டி, எழும்பு, நிறைய வேலை கிடக்கு" என்ற தாயின் குரலை கேட்டு எழுந்தாள். மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து வீட்டு முற்றத்தை பெருக்கினாள். சேகர் 'பியுசி' படிக்க விண்ணப்பித்திருந்த கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறதா என்றறிய பேருந்தில் கிளம்பி சென்றான்.

வெயில் லேசாக எழும்பி வர ஆரம்பித்தவுடன், குளிப்பதற்காக தனது வழக்கமான இடத்தில் வந்து பார்த்தது கிட்டு. அங்கு மண்சட்டி மூடி இல்லை. காலையில் மழையால் மண் பொதிந்திருந்த அந்த மூடியை கழுவுவதற்காக எடுத்து வைத்திருந்தாள் செல்லம்மா. வேலை கவனத்தில் கிட்டு குளிப்பதற்காக தண்ணீர் எடுத்து வைக்க மறந்து விட்டாள் தங்கம். தண்ணீர் நிறைந்த மூடி இல்லாதது கண்டு சுற்றும் முற்றும் பார்த்தது கிட்டு. அருகில் ஒரு சரிந்த மண்பானை தெரிந்தது. அந்த மண்பானை விளிம்பில் அமர்ந்து உள்ளே எட்டிப்பார்த்தது. மழைநீர் அதில் நிரம்பி இருந்தது. இதைத்தான் நாம் குளிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் போலும் என்றெண்ணி உள்ளே  குதித்தது கிட்டு. வழக்கமாக காலளவு தண்ணீரில் நின்று குளிப்பதை போல அந்த பானையினுள் நிற்க முயற்சி செய்தது கிட்டு. ஆழத்தை உணர்ந்து சுதாரிப்பதற்குள் தண்ணீரில் மூழ்கி விட்டது கிட்டு.

சிறிது நேரத்திற்கு பிறகு, தங்கம் ஞாபகம் வந்தவளாய் மண்சட்டி மூடியை கழுவி, அதில் தண்ணீர் நிரப்பி கொல்லைப்புறம் கொண்டு வந்தாள். கிட்டுவை காணாமல் "கிட்டு", "கிட்டு" என்றழைத்தாள். சில நிமிட காத்திருப்புக்கு பின்னும் 'கிட்டு' வராமல் போகவே, தேடத் தொடங்கினாள். பக்கத்தில் இருந்த அந்த சரிந்த பானையில் ஏதோ மிதப்பது போல் தெரிய ஓடிச் சென்று பார்த்தாள். கிட்டு மிதப்பது கண்டு பதறிப்போய், உடனே கையில் எடுத்தாள். எந்த சலனமும் இல்லாமல் மரத்துண்டு போல் அசைவின்றி கிடந்தது கிட்டு.

"கிட்டு" என்று தங்கம் அலறிய சத்தம் கேட்டு செல்லம்மா ஓடி வந்தாள். "அம்மா, கிட்டு செத்துபோச்சும்மா" என்று கத்தி அழத்தொடங்கினாள் தங்கம். அந்நேரத்தில் தோப்பில் இருந்து திரும்பிய சின்னையா, நடந்ததை அறிந்து வருந்தினார். வீட்டின் பின்புறம் ஒரு சிறிய குழிதோண்டி கிட்டுவை அடக்கம் செய்தார். மாலை தான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைத்த உற்சாகத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் சேகர். தமக்கை சோகமாக இருப்பதை பார்த்து வினவினான். தகவலறிந்து அவன் கண்களும் கலங்கின. கிட்டு புதைக்கப்பட்ட இடத்தை நெடுநேரம் பார்த்துக்கொண்டே நின்றான். அன்று இரவு பிள்ளைகள் உணவு உண்ணாததால் யாரும் உணவு உண்ணவில்லை.

மறுநாள் காலை சோகத்தில் இருந்த இரு பிள்ளைகளிடமும் சின்னையா "மக்ளே, சாவை தவிர்க்க முடியாது. நான், என் அப்பா அம்மா சாவை கடந்துதான் வந்தேன். இன்னைக்கு கிட்டுவுக்கு வந்த சாவு, நாள எனக்கும் வரும். செத்துப்போனவங்கள நினைச்சு நாம வாழாம இருந்தா, இந்த உலகத்துல யாரும் வாழமுடியாது. கிட்டுகூட இருந்த நல்ல நாட்கள நினைச்சிட்டே அடுத்த வேலைய பாருங்க" என்று கூற அக்காவுக்கும் தம்பிக்கும் தெளிவு பிறந்தது.