ஞாயிறு, 2 டிசம்பர், 2018

கொடியில் காயும் பொம்மைகள்


வீட்டிலிருந்த பஞ்சு பொம்மைகள் அனைத்தையும் எடுத்து நீரில் ஊறவைத்துக்கொண்டிருந்தேன்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் பெரிய மகள் என்னிடம் கேட்டாள் "அப்பா, ஏன் பொம்மை எல்லாம் தண்ணியில கழுவுறீங்க".

"மக்ளே, இதெல்லாம் நீ வைச்சு விளையாடின பொம்மைகள், ரொம்ப நாளா பெட்டியில் இருந்ததால தூசி அடைஞ்சிருக்கும். கழுவி காய வச்சு குட்டி பாப்பாவுக்கு விளையாட கொடுக்கலாம்." என்றேன்.

"தங்கச்சி பாப்பாவுக்கு புது பொம்மை வாங்கி கொடுக்கலாம்ல." என்று கேட்டாள்.

"சரிதான், ஆனால் அக்காவோட பொம்மையை வச்சு விளையாடுறதுலதான் தங்கச்சிக்கு சந்தோசம்" என்று சமாளித்தேன்.

"அப்போ எனக்கு புது பொம்மை வாங்கி கொடுத்திருங்க" என்று சிரித்தாள்.

அவளை திசை திருப்பும்பொருட்டு, "பாப்பா என்ன செய்துட்டு இருக்கா-னு பாத்துட்டு வா" என்று அனுப்பினேன்.

ஓடிச்சென்று  உடனே திரும்பி வந்தவள்,
"அப்பா, பாப்பா கை சூப்பிக்கிட்டு இருக்கா" என்றாள்.

"அப்பா, குட்டி பாப்பா எவ்ளோ சேட்டை பண்றா, அம்மா சரியா தூங்ககூட முடியாம பாப்பாவை கவனிச்சுக்கிறாங்க, நானும் இதே மாதிரிதான் குட்டி வயசுல இருந்தேனா?" என்று வினவினாள்.

"ஆமா மக்ளே, எல்லா குழந்தைகளும் சின்ன வயசுல அப்படிதான். இப்போ அம்மாவும் நானும் எப்படி உங்களைப் பாத்துகிறோமோ, அதேமாதிரிதான் நான் குழந்தையா இருந்தபோது உன்னோட தாத்தாவும் பாட்டியும் அக்கறையா என்னை பார்த்திருப்பாங்க. இந்த உலகத்துல அம்மா அப்பாவோட அன்பாலும் அரவணைப்பாலும் வளர்ற எல்லா குழந்தைகளும் கொடுத்து வச்சவங்க."

ஒன்றாவது வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு என் விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருக்க, அதைக்கடந்து அடுத்த கேள்விக்கு தாவினாள் என் மகள்.

"அப்பா, தங்கச்சிக்கு ஏன் நெருதா-னு பேர் வச்சிங்க?"

"பாப்லோ நெரூடா-னு ஒரு கவிஞர் இருந்தார். சீலே நாட்டோட தேசியக் கவி. நோபல் பரிசு பெற்ற மக்கள் கவிஞர். அவரோட பெயரை அடிப்படையா வைச்சுதான் இந்த பெயர்" என்று சொல்லிவிட்டு,

"ஏன், பெயர் நல்லா இல்லையா?" என்று கேட்டேன்.

"நல்லாத்தான் இருக்குப்பா, ஆனா என்பெயரை ஒட்டி பெயர் வச்சிருக்கலாம்ல" என்று கேட்க,

"மக்ளே, உனக்கு அவள் தங்கை என்றாலும், நீங்கள் இருவரும் தனித்துவமானவர்களாகத்தான் வளரணும்" என்றேன்.

"அப்படினா?"

"நீ மஹதி, மகத்தானவள், ஆளப்பிறந்தவள்.
அவள் நெருதா, நெருப்பானவள், ஆக்கப்பிறந்தவள்."