சனி, 30 மே, 2015

நௌஸ்வான்ஸ்டைன் காஸில் (Neuschwanstein Castle)

தென்கிழக்கு ஜெர்மனியில் அமைந்திருக்கும் மாநிலம் பவாரியா (Bavaria). நான் வசித்துவரும் பாடன்வுர்டெம்‌பர்க் (Baden-wuerttemberg) மாநிலத்தின் அண்டை மாநிலம் இது. ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ம்யூனிக் (Munich) இம்மாநிலத்தின் தலைநகரம். அழகிய இந்த மாநிலத்தில் அமைந்த ஒரு கோட்டைதான் நௌஸ்வான்ஸ்டைன்.

19-ஆம் நூற்றாண்டில் ரோமனெஸ்‌க் ரிவைவல் (Romanesque Revival) கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கோட்டை இது. இது ஃப்யுஸ்ஸென் (Fuessen) என்னும் இடத்தில் ஹோஹெங்ஸ்சுவன்கௌ (Hohenschwangau) கிராமத்தில் அமைந்துள்ளது. பவாரிய மன்னர் லுட்விக் 2 (Ludwig 11) நிர்ணயித்த கோட்டை இது. கட்டி முடிப்பதற்கு வருடங்கள் 17 பிடித்த இந்த கோட்டை சிறிய மலை குன்றில் அமைந்துள்ளது. டிஸ்னிலான்ட்-ல் (Disneyland) அமைந்திருக்கும் ஸ்லீப்பிங்க் ப்யூட்டீ (Sleeping Beauty) கோட்டைக்கான முன்மாதிரி இந்த கோட்டைதான். இந்த பூவுலகில் அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் கோட்டையும் இதுதான். மேலும் அதிகப்படியான தகவல்களுக்கு கூகிள் (Google) மற்றும் விக்கி (wiki) பக்கங்களை நாடவும்.

2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நண்பர்கள் யூதா வசந்த் மற்றும் ஆனந்த்துடன் இந்த கோட்டைக்கு முதன் முறை சென்றேன். உலகின் அற்புதங்களில் ஒன்றான இந்த கோட்டை எனக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த முறை மனைவி, குழந்தை ற்றும் நண்பன் நட்ராஜ் குடும்பத்தோடு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் அங்கு சென்றேன். அளவுகடந்த சுற்றுலா பயணிகளின் காரணமாக, அனுமதி சீட்டு கிடைக்காததால் கோட்டைக்கு உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். மீண்டும் 2015-ல் மே மாதம் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு இந்த கோட்டைக்கு வந்தேன். 2012-ல் ஏமாற்றத்தோடு திரும்பிய என் மனைவிக்கு இந்த முறை இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அனுமதி சீட்டு பெற்ற பிறகு கோட்டையை காண மலையேறி சென்றோம். மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மந்தமாக இருந்த கால நிலை ஒத்துழைக்க எளிதாக கோட்டையை அடைந்தோம். வந்த வழியில் ஜாமூன் போன்ற மென்மையான இளஞ்சூடான உருண்டைகளை வாங்கி பசியாறினோம், என் குழந்தைக்கு மிகவும் பிடித்து போனது அந்த உணவு. கோட்டைக்கு முன் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு உள் சென்றோம். இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என்று உலகின் பல பக்கங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.


எங்கள் முறை வந்தவுடன் கோட்டைக்குள் சென்றோம். நாங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 பேர் கொண்ட கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் வழிகாட்டியாக வந்து கோட்டையின் வரலாற்றை விளக்கியபடியே சுற்றி காண்பித்தார். கோட்டைக்குள் புகைப்படம் எடுக்க தடை என்பதால் சொந்த கண்கள் கொண்டு கோட்டையை முழுவதும் ரசிக்க முடிந்தது. கோட்டை கட்டி முடியும் தருவாயில் மன்னர் லுட்விக் மர்மமான முறையில் இறந்து  போனதால், மன்னர் வம்சம் வாழ்வதற்கு முன்னமே பொதுமக்கள் பார்வைக்கு வந்துவிட்டது இந்த கோட்டை.

பலதளங்கள் கொண்ட இந்த கோட்டை சுண்ணாம்பு கற்கள், செங்கற்கள், மார்பிள் கற்கள், மரப்பலகைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாகவும் வலிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தர்பார், இசை வளாகம், மன்னர் அறை, விருந்தினர் அறைகள், மரக்கட்டில்கள், மேஜைகள், நாற்காலிகள். தொங்கும் விளக்குகள், ஓவியங்கள் என்று அனைத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக மன்னரின் கட்டில் வேலைப்பாடுகள் செய்ய மட்டும் 4 வருடங்கள் எடுத்துக்கொண்டது என்பதை கேட்ட பொழுது, ஒட்டு மொத்த கோட்டையை இழைப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்து இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. தினமும் சராசரியாக 6000 சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், மெருகு குறையாத வகையில் மிகவும் கவனமாக பாராமரிக்க பட்டு வருவதை காண முடிந்தது.

இறுதியாக சமையல் அறையை பார்த்துவிட்டு, கோட்டையை ஒத்த நினைவு பொருள் வாங்கிவிட்டு, 1 மணிநேர சுற்றலுக்கு பிறகு வெளியே வந்தோம். கோட்டையின் பிரம்மாண்டத்தை காண்கையில் பார்த்த இடங்கள் மிகவும் குறைவாக தெரிந்ததால், சில இடங்கள் பொது மக்கள் பார்வைக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொள்ள முடிந்தது.

மலை உச்சியில் அமைந்துள்ள மனித படைப்பின் உச்சமான இந்த படைப்பு சொல்லொண்ணா ஆச்சர்யத்தை எனக்கு அளித்தது என்றால் என் மனைவிக்கும் அதே உணர்வுதான். இது போன்ற கலைபடைப்புகளை பார்க்கும் பொழுது நிர்மாணித்தவர்களை "அவன் ரசிகன்-டா" என்று நம்மூர் சொலவடையில் கூறுவது மன்னர் லுட்விக்-கு மிகப் பொருந்தும். கோட்டைக்கு உள்ளே அற்புதம் என்றால், கோட்டைக்கு உள்ளே இருந்து ஏரிகள், காடுகள் கொண்ட பவாரியன் வெளி அழகை ரசிப்பது அதியற்புதம்.


அடுத்து, இந்த கோட்டையின் அழகை எட்ட நின்று ரசிப்பதற்காகவே இரு மலை குன்றுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட மரின்ப்ருக்க (Marienbrucke) பாலத்தை நோக்கி எங்கள் கால்கள் நடந்தன. அந்த பாலத்திற்கு நடுவில் சென்று கோட்டையை பின்னணியாக கொண்ட புகைப்படங்களை சுட்டு தள்ளினோம். மிகச்சிறிய பாலம் என்றாலும் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் என் கால்கள் நடுங்குவதை தடுக்க முடியவில்லை.  

இந்த கோட்டையின் அழகுக்கு அழகு சேர்ப்பது அது அமைந்திருக்கும் இடம்தான், அந்த அழகை ரசித்தபடியே கீழே இறங்கினோம். துள்ளி ஓடி வந்து கொண்டிருந்த என் மகளிடம் கேட்டேன், 'நாம எங்கே போயிட்டு வரோம்?', யோசித்தபடியே அவள் கூறினாள் 'பெரிய haselnuss', ரசித்து சிரித்த படியே 'அது castle மகளே' என்றேன்.

யுபெர்லிங்கென் (Ueberlingen) வரும் வழியில் காஃப்பய்ரென் (Kaufbeuren) என்னும் இடத்தில் முதியவர் கூட்டம் ஒன்று பீர் அருந்தியபடியே அப்பாக்கள் தினம் (Father's Day, 14 மே 2015) கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்களை கண்டவுடன் அழைத்த அவர்கள், என்ன வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றனர். அன்பு தொல்லைக்கு செவிமடுத்து காபி வாங்கி பருகினோம். அக்கூட்டத்தில் இருந்த பெண்மணி எங்களை பற்றி கேட்டறிந்து கொண்டு, 'salute to IT people' என்று சல்யூட் செய்தார். கணிப்பொறியாளன் என்பதற்காக நான் மகிழ்ந்த ஒரே தருணம் அதுதான்.