சனி, 2 ஏப்ரல், 2016

சுனாமி அலைகள்

தென்னைவிளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமம். செல்வராஜ், முப்பது வருட மாநில பணிக்கு பிறகு கடந்த ஒரு வருடமாக சொந்த கிராமமான தென்னைவிளையில் வாழ்ந்து வருபவர். பணிக்காலத்தில் மிகவும் நேர்மையாக பணி செய்த காரணத்தால், நல்ல பெயரைத்தவிர பெரிதாக ஒன்றும் சம்பாதித்து சேர்த்து வைக்காதவர்.

செல்வராஜ் தம்பதியினருக்கு திருமணமாகி  எட்டு வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண்தான் கலா. பல வருடம் கழித்து பிறந்த ஒரே பெண் என்பதால் செல்வராஜுக்கு மகளின் மேல் பாசம் அதிகம். உண்ணும் உணவாகட்டும், உடுக்கும் உடையாகட்டும், படிக்கும் பள்ளி ஆகட்டும் எல்லாம் தன்னுடைய சக்திக்கு மீறி மகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பார்த்து பார்த்து செய்து வந்தார்.  
  
செல்வராஜின் பால்யகால நண்பர் சேகர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சேகருடன் கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடிப்பது செல்வராஜுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. கடல் அழகை கண்டு ரசிப்பதற்கு வசதியாக கடற்கரைக்கு மிக அருகில் உயரமான காட்சி கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அந்த காட்சி கோபுரத்தின் உச்சியில்  இருந்து கொண்டு கடல் காற்றை வாங்கியபடியே அளவளாவுவது இருவருக்கும் வழக்கமான நடைமுறை.

"என்னடே செல்வராசு, ஒரு மாதிரி இருக்க?" கேள்வி கேட்ட நண்பர் சேகரை உற்றுப்பார்த்தார் செல்வராஜ்.

“உனக்கே தெரியும், என் தகுதிக்கு மீறி பொண்ணை இன்ஜினியரிங் படிக்க வைச்சிட்டு இருக்கேன். அவளும் இந்த வருஷத்தோட படிச்சு முடிக்க போறா. அப்புறம் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பெருசா எந்த சேமிப்பும் இல்லை. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று பதிலுரைத்தார் செல்வராஜ்.

“இதுக்கு ஏண்டே யோசிக்கிற, பொண்ணு எப்படியும் படிச்சிட்டு வேலை பார்க்கும், வேலை பார்க்கிற பொண்ணுக்கு பையன் கிடைக்க மாட்டானா என்ன”

“நீ சொல்றது சரிதான், வேற மாவட்டம்-னா பரவாயில்லை. நம்ம மாவட்டத்தில்தான் பொண்ணு கலெக்டரா இருந்தாலும் 100 பவுன் நகை, கையில அஞ்சு லட்சம் இல்லாம கட்டி கொடுக்க முடியாதே”.

“அதுவும் சரிதான், ஏன்டே, உனக்கு பூர்வீக சொத்து எதுவும் இல்லையா?”

“பூர்வீக சொத்து இருந்திருந்தா, அதை வித்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். எனக்கு அந்த கொடுப்பினை இல்லை, நானும் எந்த சொத்தையும் சேக்கலை.”

“அரசாங்க வேலையில கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருந்தா நிறைய சொத்து வாங்கி போட்டிருக்கலாமே” 

“என்னை பத்தி உனக்கு தெரியாதா, முடிஞ்ச அளவுக்கு நேர்மையாவே வாழ்ந்துட்டேன், அதுல வருத்தப்பட ஒன்னும் இல்லை, சந்தோஷம்தான்.” 

"உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று அன்றைய பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார் சேகர்.

சில நாட்களுக்கு பிறகு, மிகவும் உற்சாகத்துடன் இருந்தார் செல்வராஜ். காலையில் அவர் பெண் கலா கூறிய வார்த்தைகள்தான் காரணம். “அப்பா, நீங்க எதுக்கும் கவலைப்படவேண்டாம், நான் இந்த வருஷம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு, ஒரு நல்ல வேலையா தேடிட்டு, உங்களையும் அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன்” என்று சொல்லியிருந்தாள்.

“நீ நல்லபடியா படிப்ப முடிச்சாலே எனக்கு போதும். எங்களுடைய வாழ்க்கைக்கு என்னோட பென்ஷன் இருக்கு” என்று பதில் கூறினாலும், மகள் சொன்ன வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுக்க தவறவில்லை.

அன்று வழக்கம்போல் சமைப்பதற்கு மீன் வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழக்கத்திற்கு மாறாக இருந்த கடலை பார்த்தபடியே நண்பர்கள் இருவரும் காலை பத்து மணிக்கு காட்சி கோபுரத்தில் ஏறி அமர்ந்தார்கள். 

கடல் மிகவும் உள்வாங்கி இருந்தது. கரையில் இருந்த பாறைகள் எல்லாம் தெளிவாய் தெரிந்தன. இந்த திடீர் மாற்றத்தால் குட்டி மீன்கள் மற்றும் நண்டுகள் கடற்கரை மணலில் துடித்துக் கொண்டிருந்தன. அக்கம் பக்கத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீன்களை பொறுக்கிக் கொண்டிருந்தனர்.

“கடல் ஏண்டே ரொம்ப உள்வாங்கி இருக்கு” என்று கேட்ட சேகருக்கு பதில் சொல்லாமல்,

“நாமும் போய் நண்டு பிடிக்கலாமா” என்று உற்சாகமாக கேட்டார் செல்வராஜ்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

அதற்கு செல்வராஜ் “இந்த கடல் இப்படியே உள்வாங்கி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.”

சேகர் குழப்பத்துடன், “ஏண்டே அப்படி சொல்ற?”

“கடல் அப்படியே உள்வாங்கி இருந்தா, அந்த கடற்கரை பூமியை நான் எடுதுக்கலாம்ன்னு இருக்கேன். அதுல தென்னை மரங்களை வளர்த்து தோப்பாக்க போறேன்” என்று உற்சாகமாக சொன்னார். 

சேகர் மேலும் குழப்பத்துடன் அவரை பார்க்க, “டே, ஜாலியா ஒரு விஷயம் சொன்னா, அதை ஆராய்ச்சி பண்ணாம சந்தோஷபடு” என்றார்.

குழப்பம் நீங்கிய சேகர், “அப்படின்னா, எனக்கும் பாதி கடற்கரை வேணும்” என்று கடுமையான தொனியில் கேட்பதுபோல் நடிக்க, நண்பர்கள் இருவரும் சேர்ந்து பலமாக சிரித்தனர். 

அப்போது, கடலின் வெகு தூரத்தில் இருந்து பேரிரைச்சல் சத்தம் கேட்கத் தொடங்கியது. பெரும் அலை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் இருவரும் அலட்டிக்கொள்ளவில்லை. இதைப்போல பல அலைகளை பார்த்தவர்கள்தானே நாம் என்ற எண்ணத்தில் கடற்கரையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். 

மீன் பொறுக்கி கொண்டிருந்தவர்கள், அலை வருவதை பார்த்தவுடன் சிறிது கலவரமடைந்து விலகி ஓடத்துவங்கினர். சில வினாடிகளில் வந்த பெரிய அலை உள்வாங்கிய கடற்கரை பகுதியை நிரப்பி சென்றது. அதை காட்டிலும் பெரிய அலைகள் தொடந்து வருவதை கண்ட செல்வராஜும் சேகரும் “பெரிய அலை வருது, எல்லாரும் ஓடுங்கள்” என்று பலமாகக் கத்தினர்.

அடுத்த வந்த அலை கடற்கரையில் நின்றவர்களை தனக்குள் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் செல்ல, இதை பார்த்த நண்பர்கள் இருவரும் விக்கித்து நின்றனர். தங்கள் கண் முன்னாலே மக்கள் அலையால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்து பதட்டமடைந்த செல்வராஜ் சேகரிடம், “நாம உடனே இங்கிருந்து போகணும்” என்று கூற நண்பர்கள் இருவரும் கீழே பார்த்தனர். கடலலைகள் கட்டிடத்தின் தரை தளம் வரை வந்திருப்பதை பார்த்த அவர்கள் அந்த எண்ணத்தை கைவிட்டனர். 

“எப்படியும் இந்த கட்டிடம் பனிரெண்டு அடி உயரம் இருக்கும், இந்த உயரத்துக்கு அலை வர வாய்ப்பே இல்ல” என்று சேகர் கூற, இங்கு இருப்பதுதான் பாதுகாப்பு என்ற முடிவுடன், உயிர்ப்பசி கொண்டு ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்த அலைகளை பயத்தால் உடல் நடுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக கடல் விஸ்வரூபமெடுத்து பேரலைகள் மூலம் இந்த பூமியை தன்னுள் சுருட்டி கொள்ளும் ஆவேசத்தில் ஊருக்குள் வர எத்தனிக்க, தற்பொழுது வந்த அலை காட்சி கோபுரத்தின் பாதி வரை தொட்டுச் சென்றது.

இதை கண்டு மிரண்டு போன செல்வராஜும் சேகரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் அடுத்த அலை உச்சி வரை வந்து இருவரையும் நனைத்து செல்ல இருவரும் ஆளுக்கொரு தூணை இறுக்கி பிடித்துக்கொண்டனர். 

மேலும் ஒரு அலை வந்து அவர்களை தாக்க, செல்வராஜின் பிடி சிறிது தளர அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அலை அவரை கடலுக்குள் இழுத்துச்செல்ல, தன் கண்ணெதிரேயே நண்பன் அடித்துச்செல்லப்படுவதை கண்டும் காப்பாற்ற முடியாமல் கதறினார் சேகர்.

ஆழிப்பேரலைகளின் கோரத்தாண்டவம் சிறிது நேரத்தில் அடங்கிவிட, அலைகளின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது, பாதிக்கப்பட்ட மக்களின் ஓலம் பெருகத் தொடங்கியது. 

மீண்டும் இது போன்ற அலைகள் இனிமேல் வரக்கூடாது என்று இயற்கையிடம் வேண்டியபடியே காட்சி கோபுரத்தின் உச்சியில் நண்பனை இழந்த சோகத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார் சேகர்.
        
கடற்கரையோரத்து மக்களையும், வீடுகளையும், தென்னந்தோப்புகளையும் அழிப்பதற்கு சில நிமிட பேரலைகள் போதுமாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் இருந்த, இந்த காட்சி கோபுரம் மட்டும் கடல் அலையில் இருந்து தப்பிவிட, அதில் இருந்து உயிர் பிழைத்த சேகர் மட்டும் நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருந்தார். அதன் பிறகு சேகர் கடற்கரைக்கு செல்வதே இல்லை.

கலாவின் வருங்காலம் எப்படி இருந்தது. தந்தையை இழந்ததால் தடம் மாறிப்போனதா, இல்லை, தாயையும் காத்து தன்னையும் காத்துக்கொண்டாளா, அந்த சுனாமி அலைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

(பின்குறிப்பு: 26 டிசம்பர் 2004 -ஆம் ஆண்டு நடந்த இயற்கை பேரழிவான சுனாமியை பின்னணியாக கொண்டு புனையப்பட்ட கதை.)