வியாழன், 22 ஜூன், 2023

தவமின்றி கிடைத்த வரம்

என்னுடைய தந்தை, பணி நிமித்தமாக பெரும்பாலும் வெளியூரில் இருந்த காரணத்தால் அம்மா, அக்கா, தங்கை என்று இந்த மூன்று பெண்களுடன்தான் என்னுடைய பால்ய வாழ்க்கை அமைந்தது. அதுபோல் தற்பொழுதும் மனைவி, இரு பெண் குழந்தைகள் என்று மூன்று பெண்களுடன் என்  வாழ்க்கை இனிதாகவே சென்று கொண்டிருக்கிறது.

நெருதா, என் இரண்டாவது மகள். 22 ஜூன் 2023 அன்று 5 வது பிறந்தநாள் காணும் எனது மகள் குறித்ததொரு நினைவோட்டம். மனித வாழ்வில் சுயமாக சிந்தித்து செயலாற்றும் பருவம் வருவதற்கு முன்னான காலகட்டம் மகத்தானது. நமக்கு நினைவில்லாத நமது அந்த குழந்தை பருவத்தை நம் குழந்தையின் வழியாக நாம் கண்டடைகிறோம்.

10 வருடங்களுக்குமுன் மஹதியின் குறும்புகள், மழலையை ரசித்துக்கொண்டிருந்த நான், தற்பொழுது நெருதாவின் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நெருதா, இளையமகள் ஆதலால், அடம் அதிகம், சேட்டை அதிகம், அழுகை அதிகம், சிரிப்பு அதிகம். பெரும்பாலும் மஹதியை ஒத்திருந்தாலும், சிற்சில வேறுபாடுகளையும் கவனிக்க முடிகிறது. சரியாக 5 வருடங்களுக்கு முன் இதேநாள், பெங்களுருவில் அதிகாலையில்  நான் பார்த்து மகிழ்ந்த பிஞ்சுவின் முகம் அப்படியே மனதில் இருந்தாலும், இந்த ஐந்து வருடங்களின் மாற்றங்களையும் உணரமுடிகிறது. உலகிலேயே மிருதுவானது குழந்தையின் ஸ்பரிசம், அழகானது மென்சிரிப்பு மற்றும் வேறெங்கும் உணரமுடியாதது அந்த மழலையின் நறுமணம்.

பொம்மைகள், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள் மட்டுமல்ல, அவர்களுடைய ஆராய்ச்சி பொருளும் அதுதான். பொம்மையை பிரித்து பார்க்க முயல்வது குழந்தைகளின் இயல்பு. ஆனால் பெற்றோர் கோபப்படுவார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு செலவு. நெருதா பொம்மையை உடைத்தபோதெல்லாம், அவள் அக்கா மஹதியின் மேல் பழி போட்டாள். ஒரு நாள் அவளிடம் கேட்டேன், "மக்ளே, எதுக்கு நீ உடைச்சிட்டு அக்கா மேல பழி போடுற". அதற்கு அவள் "ஏன்னா, நீங்க திட்டுவீங்க, அதான் அக்காமேலே பழி போடுறேன்" என்றாள். குழந்தைகளின் பொய்கள் கூட மிக அழகானவை.

மொழியின் இலக்கணம் நாம் அறிவோம். நாம் பேசுவதைக் கேட்டு, சொல்வதைக் கேட்டு பேசிப்பழக ஆரம்பிக்கும் குழந்தைகள் இலக்கணம் அறியாது. கடந்த காலத்திற்கு செல்ல நினைப்பதும், எதிர்காலத்திற்கு செல்ல விளைவதும் நமது கனவுகளில் ஒன்று. ஆனால், குழந்தைகள் தங்களுடைய மழலை மொழியால் மிக எளிதாக காலத்தை முன்னும் பின்னுமாக கலைத்து  போடுவதில் வல்லவர்கள். எங்க போயிட்டு வந்தன்னு பாட்டி கேட்டபொழுது "நாளைக்கு ஜூஸ் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தோம்" என்று நெருதா சொன்ன பொழுது டைம் மெஷினை தேடினேன் நான். குழந்தைகள் இலக்கணம் மீறிய கவிதைகள்.

நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு கதை சொல்வது வழக்கமான ஒன்றுதான். இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தை குறித்த சுவாரஸ்யங்களும் கதைகளும் எண்ணிலடங்காதவை. ஒருநாள் இரவு நிலா, நட்சத்திரங்களை நெருதாவுக்கு காட்டிக் கொண்டிருக்கையில் "அப்பா, அந்த ஸ்டார் ஓடி போயிடிச்சு" என்று குதூகலித்தாள் என் மகள். என்னவென்று கூர்ந்து பார்த்தால் அது ஒரு ஆகாய விமானத்தின் ஒளி.

அர்த்தம் புரியாமல் குழந்தைகள் பேசுவது வாடிக்கை, நமக்கு அது வேடிக்கை. தூங்குவதற்கு முன் "அப்பா, ஸ்டோரி கேளுங்க" என்று நெருதா கூறியபொழுது  'ஓ, பேபி நமக்கு கதை சொல்ல போகுது' என்று ஆவலாக கேட்க தயாரானேன், "அவள் கதை கேட்கிறாள், சொல்லுங்க" என்று அவள் அம்மா புரிய வைத்தாள். நான் என்னதான் விதவிதமாக கதை சொன்னாலும் சில வேளைகளில் அவள் சொல்லும் கற்பனை கதைகள் அவ்ளோ அழகாக இருக்கும்.

ஒருநாள்  தூங்கிக்கொண்டிருந்த பொழுது "அப்பா, எரிங்க" என்ற குரல் கேட்டு எழுந்தேன். எழுந்திருங்க எனபது மருவி எரிங்க என்றானதைக் கேட்டு சிரித்தேன். இதுகூட பரவாயில்லை, "நான் எரிஞ்சிட்டேன்" என்று அவள் சொல்லும்பொழுது இன்னும் நன்றாகவே இருக்கும்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

திருவள்ளுவரின் என்னவொரு அனுபவமிக்க வரிகள்!

மூஞ்சல் (ஊஞ்சல்), கோலிஸ்  (போலீஸ்), உருவி (உதவி), உருண்டி (உருண்டு)...என்று வார்த்தைகளை மாற்றி சொல்லும்பொழுது எதைச் சொல்கிறாள் என்று கண்டுபிடிப்பது அவள் அக்காவுக்கும் அம்மாவுக்கும் எனக்கும் நல்ல விளையாட்டு.

பள்ளி முடிந்து வந்தவுடன் A, B, C, D அல்லது பள்ளியில் நடந்த விஷயங்கள் என்று ஏதாவது சொல்லுவது நெருதாவின் வழக்கம். 'இதையெல்லாம் யாருகிட்ட கத்துக்கிட்ட' என்று கேட்டபோது "நானா கத்துக்கிட்டேன்" என்று பதில் வந்தது. 'ஆமால்ல', நாம என்னதான் கற்றுக்கொடுத்தாலும் குழந்தைகள் அவங்களா கத்துக்கிறதுதான் அதிகம்.

ஒருமுறை நெருதாவுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, வானத்தை பார்த்துக்கொண்டே கூறினாள் "நாம பறக்குறோம்" எப்படி என்று கேட்டதற்கு, நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை சுட்டிக் காட்டினாள். இதற்கு என்ன அர்த்தம் என்று இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

'மேக் பண்றது', நெருதா அடிக்கடி பயன்படுத்தும் சொல். அவளுக்கு பிடித்தமான ஒரு வீடு, ஒரு மரம், ஒரு சூரியன் சேர்ந்த படத்தை வரைந்து "அப்பா நான் மேக் பண்ணியிருக்கேன்" என்பாள். விளையாடும்பொழுது "அப்பா நான் கிட்சன் மேக் பண்ணிருக்கேன்" என்று சொல்வாள்.

நாம் பேசும் சொற்களை கவனித்து அப்படியே பயன்படுத்துவது குழந்தைகளின் வழக்கம். "கடுப்பாகுது" நெருதா அடிக்கடி பயன்படுத்தும் அப்படியான ஒரு வார்த்தை. நாங்கள் ஜெர்மன் கதைகளை பேசும்போது உண்மையிலேயே கடுப்பாவாள். என்னை ஏன் கூட்டிப்போகவில்லை என்று சண்டையிடுவாள். நீ பிறப்பதற்கு முன் உன்னை எப்படித்தான் கூட்டிப் போவது. நீ வளர்ந்த பிறகு எங்களையும் சேர்த்து கூட்டிப்போ என்று சமாளிப்போம்.

எறும்பு, தேனீ போன்ற சிறு சிறு பூச்சிகளை கண்டால் தெறித்து ஓடுவாள். ஒரு முறை எறும்பு கடித்துவிட்டதால் சத்தமிட்டுக்கொண்டே ஓடி வந்தவள், "அப்பா, கடிச்சு விடுங்க" என்று கேட்கவும், நான் முழிக்கவும், வழக்கம்போல் அவள் அம்மா "சொறிஞ்சு விடுங்க" என்று சொல்ல, 'ஓ, அதைத்தான் கேட்டாளா' என்று சிரித்துக்கொண்டேன்.

அலுவலக பணியில் ஒரு பெரும்கூட்டத்தையே கட்டி மேய்க்க வேண்டி இருந்ததால் வீட்டில் இரு குழந்தைகளிடம் செலவிட நேரம் இல்லாமலே இருந்தது. இந்நிலையில் மூத்த பெண் மஹதிக்கான சிகிச்சைக்காக ஒரு வாரம் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டோம். 2022 தீபாவளியை ஒட்டி இந்த பயணம் அமைந்தது. தினம் காலை லாலேந்தல் வீதியில் இருக்கும் கண் பார்வை முன்னேற்ற மையத்திற்கு மஹதியும் அவள் அம்மாவும் சென்றுவிட, நானும் நெருதாவும் பாண்டிச்சேரி கடற்கரை வீதியில் நடை பயணம் செய்வோம். நெருதா சொன்ன கதைகள், கேட்ட கேள்விகள் என்று அவளின் குழந்தைதனத்தை  நன்றாக புரிந்த கொண்ட நாட்களாக அமைந்தன. 'அவள், இவ்ளோ பேசுவாளா' என்று ஆச்சரியமடைந்த நாட்கள்.

கடற்கரையின் ஒரு ஓரத்தில் இருந்த குகையை பார்த்துக்கொண்டே, "இதை யார் கட்டியிருப்பார்கள்" என்று நான் கேட்க, சற்றும் தாமதிக்காமல் "கரடிதான் கட்டியிருக்கும்" என்று பதில் வந்தது. 'அது என்ன பில்டிங்', 'இந்த தாத்தா (காந்தி சிலை) யாரு', 'இந்த நண்டெல்லாம்  எங்கே போகுது' என்று கேட்டுக்கொண்டே வருவாள். பலூன் பார்த்துவிட்டால் அடம்பிடிப்பாள்.

இந்த பாண்டிச்சேரி பயணத்தில் என் அப்பா, அம்மா, என் மனைவியின் அப்பா இணைந்துகொள்ள, அனைவருக்கும் மறக்க முடியாத சுற்றுலாவாக அமைந்தது. பாண்டிச்சேரியின் சிறப்புகளில் ஒன்றான போன்லெ குல்ஃபீ நெருதா, அவள் அக்கா மற்றும் அம்மாவுக்கு மிகவும் பிடித்து போனது. பாரதியார் நினைவில்லம், ஆரோவில், பொட்டானிக்கல் கார்டன், பாரதி பூங்கா, தினமும் கடற்கரை என்று நெருதாவின் மழலை மொழிகளை கேட்டுக் கொண்டே எல்லா இடங்களையும் கண்டு களித்தோம்.

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது மிகவும் கடினமான வேலை. நெருதா அவளுக்கு பிடித்தமான உணவை மட்டும் உண்பதில் மிகவும் பிடிவாதமானவள். முறுகலான தோசை விரும்பி சாப்பிடுவாள். "பசிக்குது, எதாவது  கொடுங்க" என்று கேட்கிறாள் என்றால் வழமையான உணவை தவிர்த்து சாக்லேட், பிஸ்கட் போன்ற வேறு ஏதோ எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம். சில நேரங்களில் எனக்கு ஜங்க் ஃபுட் வேணும் என்று கேட்டு வாங்கி உண்பாள். குழந்தைகளின் சாப்பாட்டு விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்பொழுது பூரி விரும்பி சாப்பிடுகிறாள்.

சின்ன பெண்ணை 'பேபி' என்று அழைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வாள். அக்காவை கொஞ்சாமல்  தன்னை மட்டுமே கொஞ்ச வேண்டும் என்று எதிர்பார்க்கும்பொழுது 'பேபி' என்று கூறுவதை மிகவும் விரும்புவாள். "பேபி, தனியா போகாத, அக்காகூட சேர்ந்து சைக்ளிங் போ" என்று கூறினால், "நான் ஒன்னும் பேபி இல்லை, நான் தனியாத்தான் போவேன்" என்று பதில் வரும். சில சமயங்களில், "நான் வளர்ந்துட்டேன், பேபி சொல்லக் கூடாது" என்று மறுப்பும் வரும்.

'கண்ணம்மா, கண்ணம்மா அழகு பூஞ்சிலை' என்ற பாடல் நெருதாவுக்கு  மிகவும் பிடித்தமான பாடல். அடிக்கடி விரும்பி கேட்பாள். தன்னைத் தவிர யாரையும் கொஞ்சக்கூடாது என்பதன் காரணமாக சிறுகுழந்தைகளுடன்  விளையாட மறுப்பாள். அதையும் மீறி, தன் வயதை ஒத்த அத்தை மகன் யுகனை பிடிக்கும் என்பதால் அவனுடன் விளையாடுவாள். அம்மா அப்பா சொல்லைக் காட்டிலும் அக்காவின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். என்னதான் அவர்கள் இருவரும் சமயங்களில் அடித்துக்கொண்டாலும் பாசக்கார சகோதரிகள்தான்.

'ஊருக்கு போகணும், மண்ணுல விளையாடணும்', நெருதாவோட ஆசைகளில் ஒன்று. வீட்டுக்குள்ள மண்ணு வரக் கூடாது, ரோட்டுல மண்ணு இருக்கக் கூடாதுனு, மனுஷன் எல்லா இடத்தையும் காங்கிரீட் காடுகளாக மாற்றிக்  கொண்டிருக்கிறான். இப்போதாவது, 'சாண்ட் பிட்'  என்று ஒரு இடத்தை உருவாக்கி குழந்தைகளை விளையாட விடுகிறோம். இன்னும் சில தசாப்தங்கள் கடந்தால், 'இதுதான் மண்ணு' என்று மியூசியம் சென்றுதான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. உசரவிளை தாத்தா வீட்டில் மண்ணில் விளையாடுவது நெருதாவுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. நெருதாவுக்கு தண்ணீரை கண்டால் பயம். கடந்த விடுமுறையில்  தேரிமேல்விளை தாத்தா தோட்டத்து 'பம்ப்-செட்' குளியலில் போனது அந்த பயம்.

கொரோனா காலத்தில் நெருதாவை நர்சரி பள்ளியில் சேர்த்தோம். ஒரு வருடம் முழுவதும் பள்ளிக்கு போகாமலேயே மடிக்கணிணியில் பாடம் படித்தாள். பள்ளிக்கு நேரிடையாக 'எல் கே ஜி' முதல் சென்றாள். பள்ளியில் ஆங்கிலம், வீட்டில் தமிழ் என்று சில நாட்கள் குழம்பியே போனாள். இப்பொழுது தேறிவிட்டாள் என்றாலும், ஆங்கில வார்த்தைகளை தமிழ் என்று சொல்வதும், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலம் என்று நினைப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் தமிழ் வார்த்தைகளை, "அப்பா, இது கன்னடாவா" என்றுகூட கேட்கிறாள்.

ஸ்கூல் பஸ்சில் ஜன்னலோர இருக்கையை தேடி உட்காருவது நெருதாவின் வழக்கம். அப்பா காரில் நான்தான் முன்னாடி இருப்பேன் என்று எப்போதும் அடம். வீட்டில் இளைய பிள்ளை எல்லாவிஷயத்திலும் அடம்பிடிப்பது நாம் கொடுக்கும் இடம்.

ஒருநாள், மறுநாள் நடக்கவிருந்த உறவினரின் திருமணத்திற்காக அம்மாவும் அக்காவும் மெஹெந்தி போட்டுக் கொண்டிருந்தார்கள். நெருதா காத்துக்கொண்டிருந்தாள். நான் போட்டுவிடுகிறேன் என்று கூப்பிட்டேன். அதற்கு அவள் "பரவாயில்லை, அப்பா கேவலமா வரைவீங்க, நான் அம்மாகிட்ட போட்டுக்கிறேன்" என்று நழுவி விட்டாள்.

இரண்டு பெண்கள் கொண்ட தந்தைகளை கேட்டுப் பாருங்கள். மூத்த பெண் பேசாமலே கொல்வாள், இரண்டாமவள் பேசியே கொல்வாள். எப்படி இருந்தாலும் இரு பெண்களின் தகப்பன் என்றுமே ராஜாதான்.

'உனக்கு  அப்பா பிடிக்குமா, அம்மா பிடிக்குமா', எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் கேள்வி. 'எனக்கு அப்பாவையும் பிடிக்கும். அம்மாவையும் பிடிக்கும்' என்று கவனமாகவே பதிலளிப்பாள் நெருதா.

'நீ வளர்ந்து என்னவாக போறே' எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் மற்றொரு கேள்வி. இந்த கேள்விக்கான பதில் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைகள், தான் பார்த்து ஆச்சர்யப்படும் நபர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். டீச்சராக வேண்டும் என்பதுதான் குழந்தைகளின் முதல் ஆசையாக வரும். 'நான், ஹார்ட் டாக்டர் ஆவேன்' என்பது நெருதாவின் குறிக்கோள்களில் ஒன்று. காரணம் கேட்டால், "ஹார்ட் இருந்தாதான் எல்லாரையும் லவ் பண்ண முடியும்" என்று விளக்கம் வேறு கொடுப்பாள்.

அவரவர் குழந்தை, அவரவர்களுக்கு தங்கம். குழந்தையின் செயல்பாடுகள், பேச்சுகள், அறியாமையின் வெளிப்பாடுகள். சிலசமயம் அதி புத்திசாலித்தனமாக இருக்கும், சிலசமயம் வேடிக்கையாக இருக்கும். குழந்தைத்தனத்தை ரசியுங்கள். மத்தபடி, அவர்களின் வருங்காலம் அவர்கள் கையில். அவர்களுக்கு நல்வழிகாட்டுவது மட்டும்தான் நம் வேலை.

முத்தாய்ப்பாக, சீலே நாட்டோட தேசியக் கவி, நோபல் பரிசு பெற்ற மக்கள் கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதை வரிகள் என் சின்ன கண்ணம்மா நெருதாவிற்காக...

 <---

நீ ஒரு கடல் ரோஜா, கோமேதகம், அல்லது
தணலாய்ப் பெருகும் செம்மலர்களால் ஆன அம்பு என்பதற்காக,
நான் உன்னை நேசிக்கவில்லை.

ரகசியமாக, நிழலுக்கும் ஆன்மாவுக்கு இடையிலாக,
குறிப்பிட்டப் புரியாத விஷயங்களை ஒருவன் நேசிப்பதைப் போல,
நான் உன்னை நேசிக்கிறேன்.

ஒரு செடி மலர்ந்திடாது ஆனால் மறைவாக, தனக்குள் மட்டும், பூக்களின் ஒளியைக் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல
நான் உன்னை நேசிக்கிறேன்.

பூமிக்குள் இருந்து கிளம்பும் அந்த இறுக்கமான நறுமணமாக
என் உடலுக்குள் மங்கலாக வசிக்கும், உன் அன்புக்கு நன்றி.

நான் உன்னை நேசிக்கிறேன், எப்படி, அல்லது எப்போது,
அல்லது எங்கிருந்து என்பதை அறியாமல்.

நான் நேரடியாக உன்னை நேசிக்கிறேன் சிக்கல்களோ செருக்கோ இன்றி
நான் இவ்வாறாக உன்னை நேசிக்கிறேன் ஏனெனில் வேறெவ்வாறாகவும் எனக்கு நேசிக்கத் தெரியவில்லை,

இந்த வகையைத் தவிர்த்து வேறெப்படியுமின்றி,
வெகு நெருக்கத்தில் எனது மார்பின் மேலுள்ள உனது கரம் என்னுடையதாக,
வெகு நெருக்கத்தில் உன் கண்கள் எனது கனவுகளுடன் மூடிக் கொள்ள.

 --->

என்னுடைய வாழ்வினை மேலும் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும், எனது ரெண்டாவது மகள் நெருதா எக்குறையுமின்றி பல்லாண்டு வாழ இத்தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.