செவ்வாய், 19 அக்டோபர், 2010

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2010

சர்ச்சைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், முதல் முறையாக காமன்வெல்த் (11-வது) போட்டிகளை தில்லியில் சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறது இந்தியா!


இதோ! சில சாதனை துளிகள்:

* இந்த போட்டியின் "தங்க மகன்" ககன் நரங் இந்தியாவிற்க்கான முதல் தங்கத்தை "ஒலிம்பிக் நாயகன்" அபினவ் பிந்த்ராவுடன் சேர்ந்து 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் சுட்டு தந்தார்.

* ககன் நரங் வென்ற தங்க பதக்கங்கள் மொத்தம் நான்கு, இரு தனி நபர் , இரு குழு போட்டி.

* துப்பாக்கிச்சுடும் வீராங்கனை அனிஸா சயீத் வென்ற தங்க பதக்கங்கள் இரண்டு, ஒரு தனி நபர், ஒரு குழு போட்டி.

* மல்யுத்த வீராங்கனை அல்கா டோமர் கனடா வீராங்கனை டோன்யா-வை வீழ்த்தி தங்கம் வென்றார்.

* 16-றே வயதான தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

* உலக விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்றது இந்தியா. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்று இச்சாதைனையை நிகழ்த்தினார் ஆஷிஷ் குமார்.

* நட்சத்திர வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஏமாற்றிய நிலையில் சோம்தேவ் தேவ்வர்மன் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றது சிறப்பு.

* மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற சுஷில் குமார் இந்த காமன்வெல்த் போட்டியின் ஆகச்சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

* "பறக்கும் சீக்கியர்" மில்கா சிங்க்கிற்கு பிறகு 52 வருடங்கள் கழித்து தடகளத்தில் முதல் தங்கம் வட்டு எறிதல் போட்டியில் பெற்று தந்தார் கிருஷ்ணா பூனியா, இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அழகுக்கு அழகு சேர்த்தனர்.

* சரத் கமல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோட்டைவிட்ட தங்கத்தை சுபாஜித் சஹாவுடன் சேர்ந்து இரட்டையர் போட்டியில் வென்றுகாட்டினார்.

* சமீப காலங்களாக சோபிக்காத இந்திய ஹாக்கி அணி, அரைஇறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதியை எட்டியது. இறுதி போட்டியில் உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனாலும் முதல் முறை காமன்வெல்த் பதக்கத்தை (வெள்ளி) வென்றது இத்திருவிழாவின் சிறப்புகளில் ஓன்று.

* "தங்க மங்கை" சாய்னா நெஹ்வால் இறகுப்பந்து போட்டியில் தங்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது இடத்தையும் உறுதி செய்தது முத்தாய்ப்பு. (முதலிடம்: ஆஸ்திரேலியா, மூன்றாமிடம்: இங்கிலாந்து)


* 10 தங்க பதக்கங்களுக்குமேல் பெற்றுத்தந்து துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இந்தியாவின் முதன்மை பதக்க வேட்டை விளையாட்டாக உருவெடுத்திருக்கிறது.

* கடந்த இரு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நாலாவது இடம் பிடித்த இந்தியா, இம்முறை இரண்டாவது இடம் பிடித்தது இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பான பதிவு.

* 2002 போட்டியில் 30 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா, இம்முறை 32 பதக்கங்களை பெற்று பழைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களுக்குமேல் முதல் முறை வென்றது மற்றுமொரு சாதனை.


இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு, அடுத்து வரும் ஆசியா மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பெரிதும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ்-ல் பத்து பதக்கங்கள் வரை எதிர் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.