வெள்ளி, 25 மே, 2012

கிரிக்கெட் என்னும் பொன் முட்டையிடும் வாத்து!


கிரிக்கெட் - இந்தியர்களின் ரத்தத்தில் கலந்த விளையாட்டு என்று என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார். அப்பொழுதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அவர் கூறியதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய தாயார் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லாதவர். சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர், இப்பொழுது வெறித்தனமான கிரிக்கெட் ரசிகை.

கிரிக்கெட் - நம்மை ஆண்டவர்களிடமிருந்து நமக்கும் தொற்றிக்கொண்டது. முதலில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த விளையாட்டு, அதிகப்படியான ரசிகர்கள், அதிகப்படியான பணம், என்று இப்பொழுது பொழுது போக்கிற்கான ஒரு வணிக நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

கிரிக்கெட் - முன்பெல்லாம் தேசப்பற்றை ஊட்டுவதற்கு இதுவும் காரணியாக விளங்கியது. தான் செய்யும் தவறுகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அரசும் இதை ஆதரிக்க கிரிக்கெட் தவிர்த்து விளையாட்டுகளே இல்லை என்ற நிலை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. இதன் விளைவாக கிரிக்கெட்டில் பணம் கொழிப்பதை உணர்ந்துகொண்ட பெருந்தலைகள் அரசு ஆதரவுடன் கிரிக்கெட் நிர்வாகங்களை ஏற்படுத்த, இன்று 11 பேர் விளையாட அதை 111 கோடி பேர் பார்க்க, 11 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுகிறார்கள்.

கிரிக்கெட் - 4 வருடங்களுக்கு ஒரு உலக கோப்பை, சில பல நாடுகளுக்கு இடையேயான போட்டி தொடர்கள் என்று நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. சில வருடங்களுக்கு முன்பு கபில்தேவ் தலைமையில் ICL என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிளப் அடிப்படையிலான 20-20 போட்டிகள் நடைபெற்றன. இந்த வகை போட்டிகளுக்கான வரவேற்பு மற்றும் பெரும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை தாமதமாக புரிந்து கொண்ட BCCI தன்னுடைய பெரும் அதிகார பலத்தால் ICL-ஐ விழுங்கி உருவாக்கிய போட்டிகள்தான் IPL.

ஒருநாள் முழுவதும் விளையாடும்படியான விளையாட்டை 3 மணி நேரமாக குறைத்தாகிவிட்டது. பல கோடிகளுக்கு அணிகளையும் விற்பனை செய்தாகிவிட்டது. இனி எப்படியெல்லாம் லாபம் பார்ப்பது என்று யோசித்த IPL நிர்வாகம் EPL கால்பந்து போட்டிகளை போல ஒரு அணியின் சொந்த மைதானத்தில் ஒருமுறை, எதிரணியின் சொந்த மைதானத்தில் இன்னொருமுறை மோதுவது என்று இந்தியாவிற்கு சற்றும் பொருந்தாத வகையில் கிட்டத்தட்ட 100 போட்டிகளை ஒரு போட்டித்தொடரில் நடத்துகிறது. IPL போட்டிகளின் துவக்கத்தில் ஆர்வம் காட்டும் மக்கள், இடையில் மறந்து, பிறகு போட்டித்தொடர் முடிவடையும் தருவாயில்தான் பார்க்கிறார்கள். காரணம், அணி உரிமையாளர்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்ட அதிகமான போட்டிகள்.

ஒரு கிரிக்கெட் போட்டியையாவது மைதானம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள இந்தியர்கள் ஏராளம். ஆனால் பெரும்பாலானவர்களை கிட்டே நெருங்கவிடமுடியாத அளவுக்கு போட்டி கட்டணம் இருக்கிறது. 3 மணிநேர சினிமாவிற்கு அதிகபட்சமாக 200 ரூபாய் செலவழிக்கும்போது, 3 மணி நேரம் வரும் IPL பொழுதுபோக்கிற்கும் இந்த அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் IPL வியாபாரிகளின் பேராசை, அதிகபட்சம் 12000 ரூபாய் வரைக்கும் போட்டி கட்டணம் என்பது ரொம்ப அதிகம்.

IPL தொடர் தோன்றுவதற்கு முன்பே ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, தியோதர் கோப்பை, சயேத் முஷ்டாக் அலி கோப்பை என்று பல போட்டி தொடர்கள் மாநிலங்கள் மற்றும் மண்டலங்களுக்குகிடையில் காலம் காலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தந்த மாநிலம் சார்பாக மாநில வீரர்கள் விளையாடும் இந்த போட்டிகளை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால், தங்கள் மாநிலத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் IPL அணியில் இல்லை என்றாலும் தங்கள் மாநில IPL அணிக்காக கொடி பிடிக்கிறார்கள் என்றால், BCCI, IPL மற்றும் அணி உரிமையாளர்கள், ஊடகங்கள் விரித்துவரும் மிகப்பெரும் சதிவலையில் மக்கள் மாட்டிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. தங்கள் மாநில அணியை ரஞ்சி போட்டிகளில் ஆதரிக்காத மக்கள் வணிக அடிப்படையிலான IPL போட்டிகளுக்காக அடித்துக்கொள்வது உச்சபட்ச காமெடி.

இந்தியா பிற நாடுகளுடன் விளையாடும் பொழுது தேசப்பற்றை தூண்ட முற்படுவது ஒரு வகையில் சரி என்று ஒத்துக்கொண்டாலும், தற்பொழுது IPL போட்டிகளுக்கும் இந்திய கொடியை காண்பித்து தேசப்பற்றை தூண்டி லாபமடைய நினைப்பது கண்டனத்துக்குரியது.

இது மட்டுமல்லாமல், Karbonn catch, DLF maximum, என்று வணிக நோக்கிலான எரிச்சலூட்டும் விளம்பர வர்ணனைகள்; இதைப்போல single run, double run, wide ball, no ball என்று எல்லாவற்றிக்கும் வருங்காலத்தில் விளம்பர அடைமொழிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் அடிவயிற்றில் ஒருவித பீதி கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்பொழுது, 'பொன் முட்டையிடும் வாத்து' கதைதான் ஞாபகம் வருகிறது. BCCI, IPL மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் தங்களுடைய பேராசையின் காரணமாக, கிரிக்கெட் என்னும் வாத்து பொன் முட்டை இடும் வரை காத்திருக்க விரும்பாமல், அதை அறுத்துப்பார்க்க துணிந்து விட்டார்கள்.

கிரிக்கெட் ரசிகன் என்னும் வகையில் சிறிது வருத்தமாக இருந்தாலும் கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுகளையும் விரும்புபவன் என்னும் முறையில், கிரிக்கெட்டின் அதிகப்படியான திணிப்பு, மக்களை பிற விளையாட்டுகளின் பால் திசை திருப்பும் என்பது குறித்து மகிழ்ச்சியே!

4 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\\அதிகப்படியான ரசிகர்கள், அதிகப்படியான பணம், என்று இப்பொழுது பொழுது போக்கிற்கான ஒரு வணிக நிகழ்ச்சி\\ இதை குதிரை ரேசு என்றும் சொல்வார்கள்.

Jayadev Das சொன்னது…

\\கிரிக்கெட் தவிர்த்து விளையாட்டுகளே இல்லை என்ற நிலை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது.\\ மக்கள் மனதில் விதைக்கப் பட்டதாகத் தெரியவில்லை. அடிப்படையிலேயே வேலைக் காரனிடம் அடிமையாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களா தேஷ் ஆகிய நாட்டு மக்களுக்கு [ஆங்கிலம் என்றால் உசத்தி என்பது போல] கிரிக்கெட் என்றால் உசத்தி என்று எண்ணம் வந்து விட்டது, ஏன் என்பது விடை தெரியாத கேள்வி. இந்த என்னத்தை உணர்ந்து கொண்ட அரசியல் வியாதிகள், வியாபாரிகள் அதை காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா போன்றோர் இந்தியா விளையாடும் ஹாக்கி மேச் அல்லது கபடி மேட்ச் பார்க்க பாகிஸ்தான் போய் உட்கார்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. விஜய் மல்லையா, அணி அம்பானி போன்றோர் நாட்டு நன்மைக்காக கிரிக்கெட் அணியை ஏலம் எடுத்து நடத்தக் கூடியவர்களாகவும் தெரியவில்லை.

Jayadev Das சொன்னது…

\\ சில வருடங்களுக்கு முன்பு கபில்தேவ் தலைமையில் ICL என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிளப் அடிப்படையிலான 20-20 போட்டிகள் நடைபெற்றன. இந்த வகை போட்டிகளுக்கான வரவேற்பு மற்றும் பெரும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை தாமதமாக புரிந்து கொண்ட BCCI தன்னுடைய பெரும் அதிகார பலத்தால் ICL-ஐ விழுங்கி உருவாக்கிய போட்டிகள்தான் IPL.\\ ICL- புதிதாகத் தொடங்கப் பட்டது, பணம் முதலீடு செய்து எடுக்க வேண்டும், ப்ச்சிஎர்க்கனவே பணம் கொழுத்த நிறுவனம். இந்த சமயத்தில் ICL-என்பது ICC யால் அங்கீகரிக்கப் படாத ஒரு போலி நிறுவனம், அதில் விளையாடுபவர்கள் வேறெந்த சர்வதேச விளையாட்டிலும் விளையாட முடியாது, அதற்க்கு மாற்றாக IPL உள்ளது என்று கப்சா விட்டு [கிரிகெட் என்றாலே சர்வதேச அளவில் ஒரு மோசடி வேலை என்ற உண்மையை மறைத்து] ஏழெட்டு அணிகளை உருவாக்கி அதில் வெளிநாட்டு ரிடயர்டு ஆன கிழட்டு பசங்களைப் போட்டு கடைசியில் பெயரை மட்டும் ஊர் பேர்களாக வச்சானுங்க. அங்கதான் இவனுங்க புத்திசாலித் தனத்தை மெச்சனும். இப்ப பாருங்க, CSK தோத்ததும் சம்பந்தமே இல்லையென்றாலும் அவன் அவன் மாநிலப் பெயர் கொண்ட அணியும் ஜெயிக்கணும்னு உசிரைக் கையில பிடிச்சிகிட்டு மேச் பார்க்கிரானுங்க. தமிழக் காரனுங்க முக்காடு போட்டுக்கிட்டு அழுவரானுங்க, கொல்கத்தா காரனுங்க குதிக்கிறானுங்க.

பூபேஷ் பாலன் சொன்னது…

நண்பரே...நான் நாகரீகமாக சொன்னதை நீங்கள் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறீர்கள் :)
தங்கள் கருத்துகளுக்கு நன்றி!