வெள்ளி, 5 மார்ச், 2010

உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 2

கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனுக்கு இணையாக போற்றப்படுபவர் இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1928, 1932, 1936) தங்கம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர் பத்ம பூஷன் தயான் சந்த். ஹாக்கி மந்திரவாதி (Wizard of Hockey) என்று அழைக்கபடுபவர் இந்த தயான் சந்த். இவர் தன்னுடைய இறுதிக் காலங்களை மருத்துவமனையில் கழித்த பொழுது, இந்திய அணியின் அன்றைய நிலைமையைப் பார்த்து, இந்திய ஹாக்கி செத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறினாராம். நேற்றைய இந்திய ஸ்பெயின் ஆட்டத்தைப் பார்த்தபோது இதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற நமது அணி, இரண்டாவது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. மூன்றாவது போட்டியான ஸ்பெயினுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றால்தான் அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு என்கிற நிலையில் நமது அணி தோற்றது பரிதாபம். இந்திய அணி வீரர்கள் சிறப்பாகத்தான் ஆடினார்கள் என்றாலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கினார்கள். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையும் கோலாக மாற்றினார்கள். இனி அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் அரிது என்றாலும் மீதமிருக்கும் இரு போட்டிகளை வென்றால் ஒரு கெளரவமான இடத்தை பிடிக்கலாம்.

இந்திய அணியின் தோல்வி, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும், பிற அணிகள் மோதும் போட்டிகளும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. பொதுவாக விளையாட்டு ரசிகர்கள் எந்த அணி விளையாடுகிறது என்பதை விட விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யம் தருகிறது என்பதை பொறுத்தே ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த உலகக்கோப்பையின் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவே உள்ளன. இறுதி போட்டிகள் நெருங்கி வருகின்ற வேளையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: