செவ்வாய், 2 மார்ச், 2010

உலகக்கோப்பை ஹாக்கி திருவிழா 2010 - 1

நண்பர்களே, 12-வது உலகக்கோப்பை ஹாக்கி 28/02/2010-அன்று இந்திய தலைநகரம் நியூ டெல்லி தயான் சந்த் விளையாட்டு அரங்கில் தொடங்கிய செய்தி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். பணம்கொழிக்கும் பொழுதுபோக்கான கிரிக்கெட்டுக்கு-முன் இந்த ஹாக்கி உலகக்கோப்பை அமுங்கிப்போய் விடுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கிளப் (club) அளவிலான போட்டிகளான ஐபில் (IPL) கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட் விற்பனைக்கு நாட்டுப்பற்றை பயன்படுத்த முயற்ச்சிக்கும் விளம்பரங்களை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஹாக்கிக்கு போதிய விளம்பரங்கள் இல்லை என்றாலும் நடந்துகொண்டிருப்பது ஒரு உலகக்கோப்பை என்பதை விளையாட்டு ஆர்வலர்கள் மனதில் கொண்டால் போதும். டெல்லி-க்கு சென்று போட்டிகளை காணமுடியாது என்றாலும் தொலைக்காட்சியில் பார்ப்பதன் மூலம் நமது ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம்.

ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்பது நீங்கள் அறிந்ததே. 8 முறை ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி ஒரே ஒருமுறை (1975) உலகக்கோப்பையையும் வென்று உள்ளது. இப்படி ஒருகாலத்தில் உலகின் வல்லரசாக விளங்கிய இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான். கடந்த உலகக்கோப்பையில் நமது அணி பிடித்த இடம் 11. இந்த உலககோப்பையிலும் பணபிரச்சினை, தலைமை பதவி பிரச்சினை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கிடையில் நமது அணி கலந்து கொள்கிறது. நமது அணியை தவிர்த்து பாகிஸ்தான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாண்ட்ஸ் போன்ற 11 பிற அணிகளும் கலந்துகொள்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தாலும் எந்த அணியும் பின்வாங்காமல் போட்டியில் பங்குகொள்ள வந்து இருப்பது விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி.

கடந்த ஞாயிறு (28/02/2010) நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை மிகவும் எளிதாக தோற்க்கடித்தது. தவறுதலாக குண்டடிபட்டதன் காரணமாக கடந்த உலகக்கோப்பையில் பங்குகொள்ளாத சந்தீப்சிங் சிறப்பாக ஆடி இரண்டு பெனால்டி கார்னர் (penalty corner) வாய்ப்புகளை கோல்-ஆக (goal) மாற்றினார். முதல் போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை வைத்து பார்க்கும்பொழுது ராஜ்பால்சிங் தலைமையிலான இந்திய அணி இம்முறை அரையிறுதிவரையாவது முன்னேற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

கிரிக்கெட் போலவே ஹாக்கியிலும் ஆஸ்திரேலியா முதல் ராங்கிங்கில் (ranking) உள்ள அணி என்பதால் கோப்பையை வெற்றிக்கொள்ள முனைந்து செயல்படும். கடந்த இருதடவை கோப்பையை வென்ற அணியான ஜெர்மனி ஹாட்-ட்ரிக் (hat-trick) வெற்றிகொள்ள முயலும். நெதர்லாண்ட்ஸ், கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அணிகளும் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும். கடந்த முறையைவிட சிறப்பான நிலையை பெறுவதற்கு இந்திய அணி முயற்சி செய்யும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது நமது அணிக்கு சாதகமான அம்சம்.

இந்திய அணி கோப்பையை வென்று கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகளின் மேல் விளையாட்டு ஆர்வலர்களின் கவனம் திரும்ப செய்வதோடு மட்டுமல்லாமல், ஹாக்கி-யில் இன்றும் நாங்கள் வல்லரசுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.

2 கருத்துகள்:

DHANS சொன்னது…

i was watching yesterday's match. tobe frank it was nice to watch but we lost to spain for 5-2.

it was a loose game from india, lets see what they got for england tomorrow.

பூபேஷ் பாலன் சொன்னது…

Yes DHANS, me too bit disappointed ... ok, will expect better results in the coming matches ...